திராவிட முன்னேற்றக் கழக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, 02.07.2015 வியாழக்கிழமையன்று காலையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த - திமுகவின் மறைந்த நிர்வாகி எம்.என்.சொளுக்குவின் மகளும், காயல்பட்டினம் நகர்மன்ற 17ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாதின் மனைவியுமான குர்ரத் உட்பட, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 6 மாற்றுத்திறனாளிகளுக்கு, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், 68 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான TVS Scooty 3 சக்கர மோட்டார் வாகனத்தை அன்பளிப்பாக வழங்கினார். தென்மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே பயனாளி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்று மாலையில், திமுக சிறுபான்மையினர் நலப் பிரிவின் சார்பில், காயல்பட்டினம் எஸ்.ஐ.காதர் தலைமையில் – அக்கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் எம்.எம்.ஷாஹுல் ஹமீத், சொளுக்கு எம்.ஏ.சி.முஹம்மத் நூஹ், திமுக நகர நிர்வாகிகளுள் ஒருவரான பீ.டீ.ஜலீல், நகர்மன்ற உறுப்பினர்களான ஏ.கே.முஹம்மத் முகைதீன், ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத் ஆகியோர், திமுக தலைவர் மு.கருணாநிதியை, சென்னை கோபாலபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து, தேர்தல் நிதியளித்தனர்.
பின்னர், அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, நோன்பு துறந்த பின் விடைபெற்றுச் சென்றனர்.
திமுக தலைவர் மு.கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோரைச் சந்தித்த இக்குழுவினர், அவ்விருவரிடமும் காயல்பட்டினம் நகர் நடப்புகள் குறித்து தகவல் தெரிவித்துள்ளதாகவும், திமுகவின் முன்னாள் செயலாளர் எம்.என்.சொளுக்குவின் மறைவுக்கு அவ்விருவரும் இரங்கல் தெரிவித்து, அவரது சேவையை நினைவுகூர்ந்து பேசியதாகவும் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தகவல் & படங்கள்:
P.T.ஜலீல்
திமுக தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |