கேரள மாநிலம் மலபார் காயல் நல மன்றம் (மக்வா) சார்பில் நடத்தப்பட்ட இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் காயலர்கள் பெருந்திரளாகப் பங்கேற்றுள்ளனர்.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் செய்தித் தொடர்பாளர் செய்யித் ஐதுரூஸ் (சீனா) வெளியிட்டுள்ள அறிக்கை:-
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளால் எமது மலபார் காயல் நல மன்றத்தின் இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி, 05.07.2015 ஞாயிற்றுக்கிழமை மாலை, கேரள மாநிலம் - கோழிக்கோடு கல்லாய் ரோட்டில் அமைந்துள்ள சினேகாஞ்சலி கம்யூனிட்டி ஹாலில், எமது அமைப்பின் தலைவர் மஸ்ஊத் தலைமையில் நடைபெற்றது.
துவக்க நிகழ்வுகள்:
அரங்க நிகழ்ச்சிக்கு, மன்றத் தலைவர் மஸ்ஊத் தலைமை தாங்கினார். மன்றத்தின் துணைத் தலைவர் யு.எல்.செய்யித் அஹ்மத், செயலாளர் உதுமான் லிம்ரா, துணைச் செயலாளர் முஹ்யித்தீன் அப்துல் காதர், மற்றும் சாளை அபுல் ஹசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மன்றத்தின் துணைச் செயலாளர் முஹ்யித்தீன் அப்துல் காதர் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் சேட் மஹ்மூது அவர்களுடைய மகனார் சேட் முஹம்மது இப்ராஹீம் இறைமறையை ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.
வரவேற்புரை:
நிகழ்வுகளில் பங்கேற்க வந்திருந்த மன்ற உறுப்பினர்களையும், அவர்கள்தம் குடும்பத்தினர் மற்றும் விருந்தினர்களையும், மன்ற துணைச் செயலாளர் முஹ்யித்தீன் அப்துல் காதர் மன்றத்தின் சார்பில் வரவேற்றுப் பேசினார்.
மழலையரின் மனமகிழ் நிகழ்ச்சி:
சிறுவர்-சிறுமியருக்கான இஸ்லாமிய பல்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது. கலந்துகொண்ட அனைத்து குழந்தைகளும் தமது திறமைகளை அழகுற வெளிக்காட்டி அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தனர். சாளை அபுல் ஹசன் காக்கா அனைத்துக் குழந்தைகளுக்கும் பரிசுகளை வழங்கினார்.
சாதனை மாணவ-மாணவியருக்கு பரிசு:
1,கோழிக்கோடு M M H SCHOOL லில் பயின்று, நடைபெற்று முடிந்த +2 கேரளா அரசு பொதுத்தேர்வில் 92.5% சதவிகிதம் பெற்ற-மன்ற செயலாளர் உதுமான் லிம்ரா அவர்களின் மூத்த மகள் ஃபிதா
2,கோழிக்கோடு HILL TOP PUBLIC SCHOOL லில் பயின்று,நடைபெற்று முடிந்த CBSE பத்தாம் வகுப்பு தேர்வில் அனைத்து பாடங்களிலும் A+ தரத்தைப் பெற்ற-மன்ற பொதுக்குழு உறுப்பினர் செய்யித் தமீம் அவர்களின் மகன் எஸ்.டி.ஷாக்கிர் ரஹ்மான்
3,கோழிக்கோடு HILL TOP PUBLIC SCHOOL லில் பயின்று, நடைபெற்று முடிந்த CBSE பத்தாம் வகுப்பு தேர்வில் 9.6% சதவிகிதம் பெற்ற-மன்ற செயலாளர் உதுமான் லிம்ரா அவர்களின் இளைய மகள் நிதா
4,நடைபெற்று முடிந்த தமிழ்நாடு பத்தாம் வகுப்பு எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வில், 500க்கு 476 மதிப்பெண்கள் பெற்ற - மன்ற பொதுக்குழு உறுப்பினர் எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் அவர்களின் மகள் சுமய்யா
5,காயல்பட்டினம் சுபைதா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்று நடைபெற்று முடிந்த தமிழ்நாடு பத்தாம் வகுப்பு எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வில், 500க்கு 487 மதிப்பெண்கள் பெற்ற - மன்ற பொதுக்குழு உறுப்பினர் நோனா காதர் மூஸா அவர்களின் மகள் முத்து ஆயிசா ரிப்கா ஆகியோரின் சாதனைகளைப் பாராட்டி, மன்றத்தின் சார்பில் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.
தலைமையுரை:
கூட்டத் தலைவரும் - மன்றத் தலைவருமான மஸ்ஊத் தலைமையுரையாற்றினார்.
மருத்துவ உதவி உட்பட - தேவையான நகர்நலப் பணிகள் அனைத்தையும், மக்வா இறையருளால் நிறைவாகச் செய்து வருவதாகக் கூறிய அவர், உலக காயல் நல மன்றங்களின் மருத்துவ உதவிக் கூட்டமைப்பான ஷிஃபா மூலம் பயனாளிகளுக்கு நம் மன்றம் தேவையான உதவிகளை வழங்கி வருவதாக கூறினார்.மேலும் ஷிஃபாவின் செய்லபாடுகளை வெகுவாக பாராட்டினார்.
இஃப்தார் - நோன்பு துறப்பு:
கூட்ட நிகழ்வுகளைத் தொடர்ந்து, அரங்கில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சிக்கு அனைவரும் அழைக்கப்பட்டனர். அங்கு பேரீத்தம்பழம், காயல் கஞ்சி, சாலா வடை என உணவு ஏற்பாட்டுக் குழுவினரால் விமரிசையாகவும், சுவைபடவும் உணவுப் பதார்த்தங்கள் ஆயத்தம் செய்யப்பட்டு அனைவருக்கும் பரிமாறப்பட்டது.
மஃரிப் தொழுகை:
இஃப்தார் நிறைவுக்குப் பின், மஃரிப் தொழுகை ஜமாஅத்துடன் (கூட்டாக) தொழப்பட்டது. சகோதரர் எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் தொழுகையை வழிநடத்தினார்.
அதனைத் தொடர்ந்து கூட்டத்தின் இரண்டாம் அமர்வு நடைபெற்றது. துவக்கமாக அனைவருக்கும் சுவையான தேனீர் வழங்கப்பட்டது
சிறப்புரை:
இக்கூட்டத்தில், காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையம் (KCGC) அமைப்பின் செயலாளரும்,மலபார் காயல் நல மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினருமான எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் சிறப்புரையாற்றினார்.
1) ஒரு முஸ்லிம் தாய் தந்தையருக்கு பிறந்ததால் மட்டும் நாம் முஸ்லிம்கள் ஆகிவிட முடியாது. அல்லாஹ்தான் நமக்கு ஹிதாயத்தை வழங்கினான்.
2) நாம் முன்னோக்கும் கிப்லா ஒன்றே. தொழும் தொழுகை ஒன்றே. பிறகேன் நமக்குள் எண்ணற்ற பிரிவினைகள்?
3) நமக்குள் கருத்து வேறுபாடுகள் வரலாம். பிரிவினைகள் கூடாது. உமர் ஃகத்தாப் (ரழி) அவர்களுக்கும் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரழி) அவர்களுக்கும் இடையே 100- க்கும் மேற்பட்ட கருத்துவேற்பாடுகள் இருந்தன. குர்ஆனுக்கு பல தஃப்ஸீர்கள் வந்ததே ஸஹாபாக்கள் மற்றும் இமாம்கள் இடையே நிலவிய கருத்துவேறுபாடுகளால்தான்.
4) நமக்குள் பிணங்கி வேறுபட்டு நிற்பதற்கு இஸ்லாத்தில் எந்த ஆதாரமும் இல்லை. மாறாக நாம் எதிரிகளின் சூழ்ச்சிகளுக்கு பலியாகிக் கொண்டிருக்கின்றோம். அதனால் தான் இன்று உலகெங்கும் முஸ்லிம்கள் நாதியற்று கேட்பாரற்று தாக்கப்பட்டு வருகின்றனர்.
5) எனவே நமக்குள் ஒன்றுபட்டு ஒற்ற்மையோடு வாழ்வது காலத்தின் கட்டாயமாகும். அப்போதுதான் அல்லாஹ்வின் உதவியும் நமக்கு கிடைக்கும்.
மலபார் காயல் நலமன்றம் மேலும் பல்லாண்டுகள் தழைக்க வேண்டும். தமக்கு முடியாத பெரும் பெரும் நோய்களில் அகப்பட்டோருக்கு உதவுவதன் மூலம் அம்மக்களின் துஆக்களும் அல்லாஹ்வின் கருணையும் நம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் தனது வற்றா கருணயையும் பெரும் கிருபையையும் இம்மையிலும் மறுமையிலும் நம் அனைவருக்கும் தந்தருள்வானாக, ஆமீன்.
இவ்வாறு அவர் மனம் நெகிழ்ந்து உரையாற்றினார்.
செயலர் சுருக்கவுரை:
அடுத்து, மன்றச் செயலாளர் உதுமான் லிம்ரா உரையாற்றினார்.
உதவிகள் கோரி மன்றத்திற்கு வந்த மனுக்கள் அவற்றுக்கு மன்றத்தால் ‘ஷிஃபா’ மூலம் முடிந்த அளவு உதவி செய்த விபரம் குறித்தும் அவர் சுருக்கமாக விளக்கிப் பேசினார்.
வாழ்த்துரை:
பொதுக்குழு உறுப்பினர் ஜனாப் சாளை அபுல் ஹசன், ஜனாப் நாகூர் மீரான் மற்றும் செயற்குழு உறுப்பினர் ஜனாப் சிராஜ்,வாழ்த்துரை வழங்கினார்கள்.
விருந்தோம்பல்:
பின்னர், இரவு உணவுக்காக அனைவரும் அழைக்கப்பட்டனர். அங்கு, இடியாப்பம் , கலரிக்கரி,மற்றும் காயல் ஜவ்வரிசி அனைவருக்கும் பரிமாறப்பட்டது.
நன்றியுரை:
நிறைவாக மன்றத்தின் மன்ற துணைச் செயலாளர் முஹ்யித்தீன் அப்துல் காதர் நன்றி கூற, கஃப்ஃபாரா துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. கூட்டம், இஃப்தார் - நோன்பு துறப்பு, இரவுணவு உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும், மன்ற அங்கத்தினர் திரளாகக் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ். இரவு 08.30 மணியளவில், அனைவரும் தத்தம் வசிப்பிடம் திரும்பினர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்வா சார்பில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1435) நடத்தப்பட்ட இஃப்தார் நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
மக்வா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |