காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW அமிலக் கழிவு தொழிற்சாலைக்கு எதிரான வழக்கு நிலுவையில் இருப்பதால், காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் (KEPA) நடப்பு நிர்வாகிகளே மீண்டும் புதிய நிர்வாகிகளாக - அதன் பொதுக்குழுக் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, KEPA செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் (KEPA) பொதுக்குழுக் கூட்டம், 08.06.2015 திங்கட்கிழமையன்று நண்பகல் 11.00 மணியளவில், KEPA அலுவலகத்தில் நடைபெற்றது.
அமைப்பின் இணைச் செயலாளர் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய KEPA தலைவர் எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா வரவேற்றுப் பேசினார். செயலாளர் பல்லாக் அப்துல் காதிர் நெய்னா கூட்ட அறிமுகவுரையாற்றினார்.
KEPAவின் இதுநாள் வரையிலான பணிகள் குறித்து, அதன் துணைத்தலைவர்களான டீ.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், என்.எஸ்.இ.மஹ்மூது, பொருளாளர் ஏ.ஆர்.முஹம்மத் இக்பால் ஆகியோர் பேசினர்.
DCW அமிலக் கழிவு தொழிற்சாலைக்கெதிராக KEPA நடத்தி வரும் போராட்டங்களை மழுங்கடிப்பதற்காக, “இந்து முன்னணி” அமைப்பின் பெயரில் – மத்திய, மாநில அரசுகளால் பெறப்பட்ட புகார்கள் தொடர்பாக KEPA நிர்வாகிகளை ஆறுமுகநேரி காவல்துறையினர் விசாரித்த விபரங்கள், KEPA நிர்வாகிகள் அளித்த விளக்கங்கள் குறித்து கூட்டத்தில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. இதுபோன்ற இடைஞ்சல்கள் இனியும் தொடராதிருக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரி, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் மனு அளிக்க முடிவு செய்யப்பட்டது.
காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW அமிலக் கழிவு தொழிற்சாலைக்கெதிராக சென்னை பசுமைத் தீர்ப்பாயத்தில் நிலுவையிலுள்ள வழக்கின் நடப்பு நிலவரம் குறித்து, KEPA இணைச் செயலாளர் எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் விளக்கிப் பேசினார்.
கூட்டத்தில் பங்கேற்றோரின் கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் 1 - புதிய நிர்வாகிகள் தேர்வு:
KEPA நிர்வாகத்தில் இப்போதைக்கு மாற்றம் செய்ய வேண்டியதில்லை என்றும், நடப்பு நிர்வாகிகளையே அடுத்த மூன்றாண்டுகளுக்கு புதிய நிர்வாகிகளாகத் தேர்ந்தெடுத்தும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 2 - நிதிநிலை அறிக்கை:
2014-2015 பருவத்திற்கான - KEPAவின் நிதிநிலையறிக்கை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட, கூட்டம் அதற்கு ஒருமனதாக ஒப்புதல் அளித்தது.
தீர்மானம் 3 - இந்து முன்னணி அமைப்புக்கு எதிராக புகார்:
DCW அமிலக் கழிவு தொழிற்சாலைக்கெதிராக KEPA நடத்தி வரும் போராட்டங்களை மழுங்கடிப்பதற்காக, “இந்து முன்னணி” அமைப்பின் பெயரில் – மத்திய, மாநில அரசுகளால் பெறப்பட்ட புகார்கள் தொடர்பாக ஆறுமுகநேரி காவல்துறையினர் விசாரணையில் KEPA நிர்வாகிகள் விளக்கமளித்துள்ளனர். எவ்வித ஆதாரமுமின்றி பொய்யான புகார் அளித்துள்ள இந்து முன்னணி அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் மனு அளிக்க கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 4 - நகராட்சி மூலம் வழங்கப்பட்ட கட்டுமான அனுமதியை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு:
முறையற்ற வகையில் DCW தொழிற்சாலையின் SYNTHETIC IRON OXIDE PIGMENTS PLANT (SIOPP) பிரிவுக்கு காயல்பட்டினம் நகராட்சி மூலம் வழங்கப்பட்ட கட்டுமான அனுமதியை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. செயற்குழு உறுப்பினர் ஏ.எஸ்.புகாரீ நன்றி கூற, செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
KEPA தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |