நாட்டின் 69வது சுதந்திர தினத்தையொட்டி காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் - தனது முகநூல் பக்கத்தில் - வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் தெரிவித்திருப்பதாவது:
எல்லா புகழும் இறைவனுக்கே வல்லோன் அவனே துணை நமக்கே!
அனைவருக்கும் நமது இந்திய தாய் நாட்டின் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
நமது மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்அவர்கள் சொன்ன பத்து அம்ச உறுதி மொழிகளில் சொன்னவற்றை மாணவர்கள் மட்டுமின்றி இறைவன் நாடினால் நாம் அனைவரும் பின்பற்றி நடக்க இந்த சுதந்திர தின நன்னாளில் உறுதி ஏற்போம்.
பத்து அம்ச உறுதி மொழி
நம் நாட்டிலுள்ள ஒவ்வொரு மாணவரும் கீழ்காணும் 10 அம்ச உறுதி மொழிகளை எடுத்து கொண்டு அதன் படி நடக்க வேண்டும். இதை கவனமாக படியுங்கள். இந்த 10 அம்சங்கள்படி நீங்கள் நடந்தால் - நீங்களும் நம் நாடு வளமான நாடாக, உங்கள் பங்கை நீங்கள் செவ்வனே ஆற்றியுள்ளீர்கள் என்பது திண்ணம்.
1. எனது கல்வி அல்லது பணியை அர்ப்பணிப்பு உணர்வோடு செய்வேன். அத்துடன் அதில் சிறப்பான ஒரு இடத்தை அடைவேன்.
2. எழுத படிக்க தெரியாத 10 பேருக்கு எழுத படிக்க கற்று தருவேன்.
3. குறைந்தது 10 மரக்கன்றுகளை நடுவேன். அவற்றை கண்ணும் கருத்துமாக கவனித்து வளர்த்து மரமாக்குவேன்.
4. மதுபானத்திற்கும், சூதாட்டத்திற்கும் அடிமையாகி உள்ள ஐந்து பேரை அதில் இருந்து விடுவிப்பேன்.
5. கஷ்டப்படும் எனது சகோதரர்களின் இன்னல்களை தீர்க்கத் தொடர்ந்து பாடுபடுவேன்.
6. ஜாதி, மதம், மொழி அடிப்படையிலான பாகு பாட்டிற்கும், பேதங்களுக்கும் ஆதரவு அளிக்க மாட்டேன்.
7. நான் நேர்மையில் முன்னுதாரணமாக இருந்து ஊழலற்ற சமுதாயம் உருவாக பாடு படுவேன்.
8. விழிப்புணர்வு உள்ள குடிமகனாக உருவாவதற்கு உழைப்பேன். எனது குடும்பம் நியாயமாக இருக்கவும் பாடு படுவேன்..பெண்களை மதிப்பேன். பெண் கல்வியை ஆதரிப்பேன்.
9. உடல் ஊனமுற்றவர்களுக்கு எப்போதும் நண்பனாக இருப்பதோடு அவர்கள் நம்மை போல இயல்பாக இருக்கும் உணர்வை ஏற்படுத்த உழைப்பேன்.
10. நாட்டின் வெற்றியையும், மக்களின் வெற்றியையும் நான் பெருமிதத்துடன் மகிழ்ந்து கொண்டாடுவேன்.
இந்தியாவின் இளைஞர்கள் மனம் தளரா உறுதி கொள்ள வேண்டும். இதற்கு இரண்டு பொருள்கள் வேண்டும். ஒன்று உங்கள் வாழ்விலே ஒரு குறிக்கோள் வேண்டும். பிறகு அந்த குறிக்கோளை அடைய தளராத உழைப்பு வேண்டும்.
யாருமே ஏதாவது ஒரு குறிக்கோளுக்காக உழைக்கும்போது அவ்வப்போது பிரச்சனைகள் எழத்தான் செய்யும். ஆனால் பிரச்சனைகளை கண்டு துவண்டு விடாமல் அந்த பிரச்சனைகளுக்கு துன்பம் கொடுத்து கொண்ட குறிக்கோளில் வெற்றி அடைய வேண்டும்.
நம் நாட்டின் செல்வங்களில் எல்லாம் அளப்பரிய செல்வம். நம் நாட்டில் உள்ள இளைஞர்களின் சக்தி தான்.
மனதில் ஒளியோடு குறிக்கோளை நோக்கி வீறு நடை போடும் இளைஞர்களே இந்த உலகத்திற்கே தலையாய செல்வம். இத்தகைய இளைஞர்கள் தளராத உறுதியோடு, வளமான, மகிழ்ச்சியான, பாதுகாப்பான இந்தியாவுக்காக உழைக்கும் போது வளர்ந்த இந்தியா மலர்வது திண்ணம்.
நீங்கள் அனைவரும் எல்லாவிதமான வெற்றியும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்.
- ஆ.ப.ஜெ. அப்துல் கலாம்
இவ்வாறு அந்த வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரின் Facebook பக்கம்
https://www.facebook.com/aabidha.shaik |