இந்தியாவின் 69ஆவது சுதந்திர தினம் இன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளையொட்டி, காயல்பட்டினம் நகராட்சி அலுவலக வெளிவளாகத்தில் இன்று காலை 09.15 மணியளவில் சுதந்திர தின விழா நடைபெற்றது.
துவக்கமாக, விழாவிற்குத் தலைமை தாங்கிய நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தேசிய கொடியேற்றி வைத்து, தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழியை முன்மொழிய அனைவரும் அதனை வழிமொழிந்தனர்.
நகராட்சி குடிநீர் குழாய் பொருத்துநர் நிஸார் வரவேற்றுப் பேசினார். நகர்மன்ற உறுப்பினர் கே.ஜமால், சமூக ஆர்வலர்களான டீ.எம்.என்.முஹம்மத் முஹ்யித்தீன் (லேக்கா), காளிமுத்து ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.
நிகழ்ச்சிகளை நெறிப்படுத்திய நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ், அனைவருக்கும் சுதந்திர நாள் வாழ்த்துக்களைக் கூறினார்.
தூத்துக்குடி மாவட்டத்தை ப்ளாஸ்டிக் கழிவுகள் இல்லாத மாவட்டமாக்கிட மாவட்ட ஆட்சியர் உறுதி கொண்டுள்ளதாகவும், மாவட்டத்தில் ப்ளாஸ்டிக் பொருட்களை விற்போருக்கு 500 முதல் 1000 ரூபாய் வரையிலும், அதுபோல பயன்படுத்துவோருக்கு ரூபாய் 100 அபராதமும் விதிக்க அவர் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறி, காயல்பட்டினம் நகராட்சியால் இவ்வுத்தரவு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
பின்னர் உரையாற்றிய நகர்மன்றத் தலைவர், மறைந்த இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பீ.ஜெ.அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகளை நினைவுகூர்ந்து பேசினார்.
எப்படி அவர் தன் வாழ்நாள் முழுக்க மாணவர்கள் நலனையே சிந்தித்தாரோ அதைக் கருத்திற்கொண்டு இந்திய மாணவர்களும், இளைஞர்களும் இந்நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபட வேண்டும் என்று கூறினார்.
இவ்விழாவில், காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்களான எஸ்.ஐ.அஷ்ரஃப், ஏ.கே.முஹம்மத் முகைதீன், எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், நகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளி, எல்.கே.மேனிலைப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர். நகராட்சி அலுவலர் நவநீதகிருஷ்ணன் நன்றி கூறினார். அனைவருக்கும் நகர்மன்றத் தலைவர் இனிப்பு வழங்கினார்.
சுதந்திர நாள் விழாவையொட்டி, நகராட்சியின் துப்புரவுப் பணியாளர்களும் - மகளிர் சுய உதவிக் குழுவினரும் இணைந்து பல வண்ணங்களில் கோலங்கள் வரைந்து நிகழ்விடத்தை அழகுபடுத்தியிருந்தனர்.
படங்களில் உதவி:
‘தமிழன்’ முத்து இஸ்மாஈல்
காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில் கடந்தாண்டு (2014) நடத்தப்பட்ட சுதந்திர நாள் விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |