இந்தியாவின் 69ஆவது சுதந்திர தினம் இன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளையொட்டி, காயல்பட்டினம் சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியில், இன்று காலை 09.15 மணியளவில் சுதந்திர நாள் விழா, பள்ளி தலைமையாசிரியை எம்.செண்பகவல்லி தலைமையில் நடைபெற்றது. பள்ளியின் ஆங்கில ஆசிரியை ரா.செல்வங்கை வரவேற்புரையாற்றினார்.
தாளாளர் வாவு எம்.எம்.முஃதஸிம் தேசிய கொடியேற்றி வைக்க, அனைவரும் ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
தமிழாசிரியை ஒய்.நித்திலா சுதந்திர நாள் குறித்து உரையாற்ற, அவரைத் தொடர்ந்து பள்ளியின் மாணவ-மாணவியர் சுதந்திர நாள் குறித்து பேச்சு, கவிதை, பாடல்களை வழங்கினர்.
விழாவையொட்டி மழலையருக்கான மாறுவேடப் போட்டி நடத்தப்பட்டு, வெற்றிபெற்ற மாணவ-மாணவியருக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
ஆங்கில ஆசிரியை ஜெய்னப் ராழியா நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது. இவ்விழாவில் பள்ளியின் ஆசிரியையர், மாணவ-மாணவியர் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
சென்ட்ரல் மெட்ரிக் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |