காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரின் கவனத்தை ஈர்க்க, வரும் 18.08.2015 அன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்திடுவதென, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை கலந்தாலோசனைக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர ஊழியர் கூட்டம், 11.08.2015 செவ்வாய்க்கிழமையன்று 20.00 மணியளவில், நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் தலைமையில், காயல்பட்டினம் சதுக்கைத் தெருவிலுள்ள - கட்சியின் நகர அலுவலகமான தியாகி பி.எச்.எம்.முஹம்மத் அப்துல் காதிர் மன்ஸிலில் நடைபெற்றது.
கே.எம்.என்.முஹம்மத் உமர் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், நகர நிர்வாகிகளான என்.டீ.அஹ்மத் ஸலாஹுத்தீன், ஏ.ஆர்.ஷேக் முஹம்மத் ஆகியோர் கருத்துரையாற்றினர்.
நிறைவில், பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - வழக்கை திரும்பப் பெற கோரிக்கை:
காயல்பட்டினம் நகரில் கடந்த 8 மாதங்களுக்கு முன் பெருமழையின் விளைவால் பல இடங்களில் சாலைகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவசர நடவடிக்கையாக அச்சாலைகள் சீர் செய்யப்பட வேண்டும் என்ற வேண்டுகோளை நகர்மன்ற உறுப்பினர்கள் ஏற்றனர். இதற்காக கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன், நகர்மன்றத் தலைவரை - நகராட்சி சட்டம் 1920 Schdule III பிரிவு 3 (1)இன் படி வேண்டுகோள் கூட்டத்தைக் கூட்டும்படி கேட்டுக்கொண்டனர்.
நகர்மன்றத் தலைவர் துவக்கமாக அவ்வேண்டுகோளை ஏற்பது போல் காட்டிக் கொண்டு, 24.07.2015 அன்று கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யும்படி ஆணையரிடம் அறிவுறுத்தியதாகவும் அறிய வருகிறோம்.
ஆனால் 23ஆம் தேதி வரை கூட்டப் பொருள் உறுப்பினர்களுக்கு வழங்கப்படாததால், நகராட்சி சட்டம் 1920 Schedule III பிரிவு 3 (2)இன் படி அக்கூட்டத்தை நகராட்சி துணைத்தலைவர் தலைமையில் 27.07.2015 அன்று கூட்டப்பட்டது.
அக்கூட்டத்தில் 43 சாலைகளைப் புதிதாகப் போட தீர்மானிக்கப்பட்ட நிலையில், எவரும் எதிர்பார்க்காத சூழ்நிலையில், நகர்மன்றத் தலைவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 03.08.2015 அன்று “இடைக்காலத் தடையாணை” பெற்று, முற்குறிப்பிட்ட கூட்ட தீர்மானங்கள் செயல்வடிவம் பெற முடியாத சூழ்நிலையை உருவாக்கியுள்ளார். இச்செயல் மிகவும் வருத்தத்திற்கும், கண்டனத்திற்கும் உரியது.
எனவே, உயர்நீதிமன்றத்தில் நகர்மன்றத் தலைவர் தொடுத்துள்ள வழக்கை திரும்பப் பெற்றும், உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளிடத்தில் சுமுகமான சூழ்நிலையில் கடமையாற்றுமாறும் இக்கூட்டம் நகர்மன்றத் தலைவரைக் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 2 - கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்:
நகர்மன்றத் தலைவர் தொடுத்துள்ள வழக்கைத் திரும்பப் பெறக் கோரியும், நகராட்சியில் சுமுகமான சூழ்நிலை உருவாக வழிவகை காண வேண்டியும், நகர்மன்றத் தலைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில், வருகிற 18.08.2015 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு, காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
இவ்வார்ப்பாட்டத்தில், நகரிலுள்ள அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள், ஜமாஅத் பிரதிநிதிகள் பங்கேற்க அழைப்பு விடுப்பதெனவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. எம்.இசட்.ஸித்தீக் நன்றி கூற, அரபி ஷாஹுல் ஹமீத் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
மன்னர் A.R.பாதுல் அஸ்ஹப்
(மாவட்ட துணைத்தலைவர் - இ.யூ.முஸ்லிம் லீக்)
படங்கள்:
S.J.மஹ்மூதுல் ஹஸன்
(மாவட்ட செயலாளர் - இ.யூ.முஸ்லிம் லீக்)
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் கிளையின் முந்தைய ஆலோசனைக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |