சிங்கப்பூரில் விமரிசையாக நடைபெற்ற அந்நாட்டின் 50ஆம் ஆண்டு பொன்விழாவில், சிங்கப்பூர் காயல் நல மன்றமும் பங்கேற்றுள்ளது. இதுகுறித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
சிங்கப்பூர் நாடு உருவாகி 50 ஆண்டுகள் நிறைவுறுவதையொட்டி, 08.15.2015 அன்று “SG50Kita” எனும் தலைப்பில், (Kita எனும் மலாய் மொழிச் சொல்லுக்கு ‘நாம்’ எனப் பொருள். சிங்கப்பூரின் தேசிய கீதமான Majulah Singapuraவின் இரண்டாவது சொல்லாக இது இடம்பெற்றுள்ளது.) கோலாகல கொண்டாட்டம் நடைபெற்றது.
அந்நாட்டின் மலாய்/முஸ்லிம், இந்திய/முஸ்லிம் கூட்டமைப்பான MMOsஇலிருந்து 30 அமைப்புகள் - சிங்கப்பூரில் முதற்கட்டமாக நடத்தப்படும் இவ்விழாவில் பங்கேற்றன.
இந்திய முஸ்லிம் கூட்டமைப்பான Federation of Indian Muslims - FIM அமைப்பின் கீழ், சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில் 15 உறுப்பினர்கள் இவ்விழாவில் பங்கேற்றனர். நிகழ்வு நாளன்று 07.15 மணியளவில் - சிங்கப்பூரின் தேசிய நிறமான செந்நிறத்தில் சீருடையணிந்தவர்களாகக் கலந்துகொண்டனர்.
அங்கு நடைபெற்ற - அனைவரும் பங்கேற்ற உடற்பயிற்சி நிகழ்ச்சியில் மன்ற அங்கத்தினரும் பங்கேற்றனர்.
கடந்த 50 ஆண்டுகளில் சிங்கப்பூர் இத்தனை வளர்ச்சிகளைப் பெற்றிடுவதற்கு அதன் சமய - இன மாச்சரியங்களுக்கப்பாற்பட்ட - மக்களின் முழு உழைப்பும், ஒத்துழைப்புமே காரணமாகும்.
சிங்கப்பூர் பிரதமரின் அமைச்சரும், உள்துறை - வெளியுறவுத்துறைகளின் இணையமைச்சருமான மஸகோஸ் ஜுல்கிஃப்லி பின் மஸகோஸ் முஹம்மத் இவ்விழாவில் கலந்துகொள்ள வருகை தந்திருந்தார். அவருடன் சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.
திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்துள்ள - சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் ஹாஃபிழ் உறுப்பினர்கள், அந்நாட்டின் தலைமை முஃப்தீயான முஃப்தீ டாக்டர் ஃபத்ரிஸ் பகாரமுக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்டனர்.
சுமார் 45 நிமிடங்கள் கால அளவில் இவ்விழா கோலாகலமாக நடைபெற்றது. சிங்கப்பூர் பிரதமர் லீ ஹ்ஸியன் லூங் - இவ்விழாவில் முக்கிய பங்கேற்பாளராகக் கலந்துகொண்டார். அவர் வந்ததும் சிங்கப்பூர் பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்தை முரசு முழங்கி அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க, அதன் தொடர்ச்சியாக பொன்விழா பாடல்கள் - அந்நாட்டின் பல்சமய அங்கத்தினரால் பாடப்பட்டது. நாட்டின் தேசிய கீதமும் இசைக்கப்பட, அனைவரும் ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
சிங்கப்பூரில் பல்வேறு சமய - இனங்களைச் சேர்ந்த மக்கள் - அவரவர் கலாச்சாரத் தனித்தன்மையுடன் பரவலாக வாழ்ந்து வருகின்றபோதிலும், நாட்டின் பொது ஒற்றுமை என்று வரும்போது அனைவரும் இணைந்து ஓரிடத்தில் சங்கமிப்பதை பிரதமர் தனதுரையில் வெகுவாகப் பாராட்டிப் பேசினார்.
நிறைவில், அவர் - விழா அரங்கில் அந்நாட்டின் அனைத்து சமூக மக்களால் நிறுவப்பட்டிருந்த விற்பனையரங்குகளைப் பார்வையிட்டார்.
பின்னர், சிங்கப்பூர் நாட்டின் அனைத்து இன மக்கள் பங்கேற்பில் பல்வேறு பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. நண்பகல் 12.00 மணியளவில் விழா நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன.
சிங்கப்பூர் காயல் நல மன்றத்தினர் இவ்விழாவில் பங்கேற்றமை குறித்து மிகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இப்பொன்விழா ஆண்டில் சிங்கப்பூரின் அனைத்து மக்களுக்கும் அவர்கள் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
M.M.மொகுதூம் முஹம்மத்
(துணைத்தலைவர் - சிங்கை கா.ந.மன்றம்)
சிங்கப்பூர் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |