மாணவர்களுக்கு கடன் அடிப்படையில் உயர்கல்வி உதவித்தொகை வழங்குவது குறித்து, கடந்த நோன்புப் பெருநாளையொட்டி – அனைத்துலக காயல் நல மன்றங்களின் நிர்வாகிகளது பங்கேற்புடன் நடத்தப்பட்ட - இக்ராஃ கல்விச் சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து, அதன் செயலாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீத் வெளியிட்டுள்ள அறிக்கை:-
காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம், 19.07.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில், கீழ நெய்னா தெருவிலுள்ள இக்ராஃ கல்விச் சங்க அலுவலகத்திற்கு எதிரில் அமைந்திருக்கும் கலீஃபா அப்பா தைக்காவில், இக்ராஃவின் மூத்த செயற்குழு உறுப்பினர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் தலைமையில் நடைபெற்றது. இக்ராஃவின் மூத்த செயற்குழு உறுப்பினர் எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா, காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் ஆலோசனைக் குழு உறுப்பினர் கம்பல்பக்ஷ் எஸ்.எச்.பாக்கர் ஸாஹிப், துபை காயல் நல மன்ற ஆலோசனைக் குழு உறுப்பினர் எம்.எஸ்.நூஹ் ஸாஹிப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அண்மைச் செயல்பாடுகள்:
ஜெய்ப்பூர் காயல் நல மன்ற செயலாளர் ஹாஃபிழ் எம்.ஏ.செய்யித் முஹம்மத் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். வரவேற்புரையைத் தொடர்ந்து, இக்ராஃவின் இதுநாள் வரையிலான செயல்பாடுகள், உலக காயல் நல மன்றங்களுடன் இணைந்து இக்ராஃ ஒருங்கிணைப்பில் நடத்தி முடிக்கப்பட்ட செயல்திட்டங்கள் குறித்து இக்ராஃ நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத் விளக்கிப் பேசினார். அவரது உரையின் உள்ளடக்கம்:-
IQRA EDUCATIONAL SCHOLARSHIP திட்டத்தின் கீழ் ஏற்கனவே தேர்ந்தேடுக்கப்பட்டு, கலை மற்றும் அறிவியல் (Arts and science), Diplomo, ITI போன்ற கல்வி பயின்று வரும் இரண்டாமாண்டு மற்றும் மூன்றாமாண்டு மாணவ-மாணவியருக்கான நடப்பாண்டு (2015-16) கல்வி உதவித்தொகை பெரும்பாலும் வழங்கி முடிக்கப்பட்டு விட்டன. அவர்களில் arrear வைத்துள்ள மாணவ-மாணவியர்களுக்கு மட்டும் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இக்ராஃவின் கல்வி உதவித்தொகை பெறும் பயனாளிகளின் மதிப்பெண் பட்டியல்கள் அவ்வப்போது பெறப்படுகிறது. 1 arrear வைத்துள்ளவர்களுக்கு எச்சரிக்கையுடன் வாய்ப்பளிக்கப்படுகிறது. 2 arrears அல்லது அதற்கு மேல் வைத்துள்ள மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு arrears clear செய்ததும்- அதன் மதிப்பெண் நகல் கிடைக்கப் பெற்றதும் அந்த மாணவ-மாணவியருக்கான நிலுவைத்தொகை அளிக்கப்படுகிறது.
இக்ராஃவின் உதவித்தொகைககள் தவிர வழமை போன்று OMEIAT INSTITUTE TRUST , MAJESTIC FOUNDATION, IMAN உள்ளிட்ட பல்வேறு தனியார் அமைப்புகளால் வழங்கப்படும் கல்வி உதவித்தொகைகள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு, தேவைப்படும் - தகுதியுள்ள மாணவ-மாணவியர் அவற்றைப் பெற்றிட வழிகாட்டப்படுவதோடு, அவற்றுக்கான விண்ணப்பப் படிவங்களும் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் வருடந்தோறும் ஏராளமான மாணவர்களுக்கு பெரும் தொகை கிடைக்கப் பெற்று வருகின்றது.அத்துடன் மத்திய / மாநில அரசுகள் வழங்கும் சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கல்வி உதவித்தொகைகளை பெறும் வழிமுறைகள் குறித்தும் வழிகாட்டப்பட்டு வருகிறது.
கத்தர் காயல் நல மன்றத்தின் - பள்ளி மாணவ-மாணவியருக்கான பள்ளிச் சீருடைகள் நடப்பாண்டு (2015-16) 100 மாணவ-மாணவியர்களுக்கு இரண்டு செட் வீதம் 200 செட் சீருடைகள் இக்ராஃவின் ஒருங்கிணைப்பில் வினியோகிக்கப்பட்டுள்ளது.
காயல்பட்டினத்தில் புறநகர்களில் வசிக்கும் மக்களோடு இருக்கும் நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் வகையில், புறநகர்களிலுள்ள அரசு ஆரம்பப் பள்ளிகளின் தேவைகளைக் கேட்டறிந்து அந்தப் பள்ளிகளுக்கும் மற்றும் அதில் பயிலும் ஏழை மாணவ-மாணவிகளுக்கும் உதவ வேண்டும் என்ற ரியாத் காயல் நல மன்றத்தின் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில், காயல்பட்டினம் அருணாச்சலபுரம், மங்களவாடி, ஓடக்கரை, அலியார் தெரு ஆகிய பகுதிகளிலுள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகளுக்கு ரியாத் காயல் நல மன்றப் பிரதிநிதிகளுடன் நேரடியாகச் சென்று தேவைகள் குறித்து வினவப்பட்டது.
ஏழை மாணவ-மாணவியருக்கான பள்ளிச் சீருடைகள்,பாட நோட்டுக்கள், சத்துணவு உண்ண தட்டுகள் மற்றும் தண்ணீர்க் குவளைகள், குடிநீர் சுத்திகரிப்பான் (Water Filter ), ஆங்கில பேச்சுப் பயிற்சி வழங்க TV , DVD கருவிகள், மாணவ-மாணவியருக்கு செருப்புகள், Water Tank மற்றும் அதில் தண்ணீரை ஏற்றுவதற்கான Motor , பள்ளி வளாகத்திற்கு பாதுகாப்பான காம்பவுண்ட் சுற்றுச்சுவர் உள்ளிட்ட தேவைகள் அப்பள்ளிகளால் முன்வைக்கப்பட்டன. அவற்றுள் பல - ரியாத் காயல் நல மன்றத்தின் முழு பொறுப்பில் நிறைவேற்றிக் கொடுத்து முடிக்கப்பட்டுள்ளன. சில பரிசீலனையில் உள்ளன.
இவ்வாறு இக்ராஃவின் அண்மைச் செயல்பாடுகள் குறித்து நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத் உரையாற்றினார்.
செயலர் உரை:
தொடர்ந்து, இக்ராஃ செயலாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீத் பேசினார். அவரது உரைச் சுருக்கம்:-
கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், உதவித்தொகை கோரி இதுவரை பெறப்பட்ட விண்ணப்பங்கள், இதுவரை பெறப்பட்டுள்ள அனுசரணைகள் (Sponsorships) ஆகியவற்றை விளக்கிப் பேசிய அவர், அனுசரணையளித்துள்ள அமைப்புகள் மற்றும் கல்வி ஆர்வலர்களின் பெயர்களை வாசித்தார்.
கல்வி உதவித்தொகைக்காக இதுவரை பெறப்பட்ட பொது மற்றும் ஜகாத் நிதியின் கீழான அனுசரணைகள் தவிர்த்து, தேவைப்படும் அனுசரணைகள் குறித்து கூட்டத்தில் தெரிவிக்கப்படவே, பங்கேற்றோர் சிலர் கூட்டத்திலேயே அனுசரணையளிப்பதாக உறுதியளித்தனர்.
முஸ்லிமல்லாத மக்களுக்கும் கல்வி உதவித்தொகை (scholarship ) வழங்குவது குறித்த விவாதத்தை அவர் துவக்கி வைத்தார். நிறைவில், வழங்கப்படும் கல்வி உதவித்தொகையில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு பிற சமயத்தினருக்கும் வழங்கிட முடிவு செய்யப்பட்டது.
இவ்வாறாக, செயலரின் உரை அமைந்திருந்தது.
கல்வி உதவித்தொகை பெறும் பயனாளிகளுக்கான வரையறை:
இக்ராஃ மூலம் கல்வி உதவித்தொகை பெறும் பயனாளிகளுக்கான வரையறைகளை (Criteria) வடிவமைப்பதற்காக 2014 பொதுக் குழு கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த 1. எஸ்.கே.ஸாலிஹ், 2. எம்.எஸ்.முஹம்மது ஸாலிஹ் , 3. எம்.எம்.மக்தூம் முஹம்மது (சிங்கப்பூர்), 4. எம்.எம்.செய்யது இஸ்மாயில் (தம்மாம்), 5. எம்.இ .எல்.நுஸ்கி (ரியாத்), 6. குளம் எம்.ஏ .அஹமது முஹிதீன் (ஜித்தா), 7. எஸ்.ஹெச்.ஷமீமுல் இஸ்லாம்(சென்னை) ஆகிய 7 பேர் கொண்ட கல்வி உதவித்தொகை பரிசீலனைக் கமிட்டி கலந்தாலோசனைக்குப் பின் சமர்ப்பித்த பரிந்துரைகள் கூட்டத்தில் வாசிக்கப்பட்டது.
இது குறித்து பல்வேறு கருத்து பரிமாற்றங்கள் நடைபெற்றன. இறுதியில் மேற்கண்ட கல்வி உதவித்தொகை பரிசீலனைக் கமிட்டியின் பரிந்துரைகளை , காயல் நல மன்றங்களின் கருத்துக்களைக் பெறுவதற்காக அனுப்பி வைத்து அவர்களின் கருத்துக்களையும் பெற்று அதன் பின் இதற்கு இறுதி வடிவம் கொடுக்கலாம் என கருத்து தெரிவிக்கப்பட்டது.
வருடாந்திர நிர்வாகச் செலவினம்:
இக்ராஃவின் வருடாந்திர நிர்வாகச் செலவின வகைக்காக, இதுவரை அனுசரணையளித்து வரும் அமைப்புகள் மற்றும் தனியார்வலர்களின் பெயர் பட்டியல் கூட்டத்தில் வாசிக்கப்பட்டதோடு, பெறப்பட்டுள்ள அனுசரணைத் தொகை போக, தேவைப்படும் எஞ்சிய தொகை குறித்தும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை நிகழ்ச்சி:
தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்பால் இக்ராஃவுடன் இணைந்து நடத்தப்படும் “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை” பத்தாம் ஆண்டு நிகழ்ச்சியையும், மாணவர்களுக்கான வழிகாட்டு நிகழ்ச்சியையும் எதிர்வரும் 22 & 23-08-2015 அன்று நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள விபரங்கள், நடத்துவதற்கான இடம் மற்றும் செலவினங்களுக்கான நிதி திரட்டுவது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, பங்கேற்பாளர்களால் தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்துவது குறித்தும், அதன் பலன்கள் குறித்தும் கருத்துக் கேட்டு, காயல்பட்டினம் அனைத்து மேனிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கும் இக்ராஃவால் கடிதம் அளிக்கப்பட்டிருந்தது. சென்ட்ரல் மேனிலைப்பள்ளி தவிர இதர அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்களும் பெறப்பட்ட கடிதங்களுக்கு பதில் கடிதம் அளித்திருந்தனர். அதில் இந்நிகழ்ச்சியை ஆண்டுதோறும் நடத்துவது மிகவும் அவசியம் என்றும், மாணவ-மாணவியர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் அனைத்து தலைமையாசிரியர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். கூடுதலாக சில கல்வி நிகழ்ச்சிகளை இணைத்து நடத்தலாம் என்றும், இக்ராஃவின் இதர கல்விப் பணிகளுக்கான ஆலோசனைகளை முன்வைத்தும் சில தலைமையாசிரியர்கள் தமது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர் என்றும் இக்ராஃ நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மது விளக்கினார்.
இதனைத்தொடர்ந்து ரியாத் காயல் நல மன்றம் அனுப்பிய மின்னஞ்சல் வாசிக்கப்பட்டது. அதில் கடந்த 4 வருடங்களாக ரியாத் காயல் நல மன்றத்தின் சார்பாக Cut off மதிப்பெண் ஊக்கத்தொகை “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை” நிகழ்ச்சியின் போது வழங்கப்பட்டு ஊக்கப்படுத்தி வருவதைப் போல் இந்த ஆண்டும் வழங்க தீர்மானித்திருப்பதாகவும், அதில் சிறிய மாற்றத்துடன்,
* பொறியியல் பிரிவில் மாணவர்களுக்கு மட்டும்,
* மருத்துவப்பிரிவில் இரு சாரார்களுக்கும்,
* வணிகப்பிரிவில் அதிக மதிப்பெண்கள் பெறும் முதல் மூன்று மாணவ/மாணவிகளுக்கு பணமுடிப்பு,
* வெளியூர் கல்விக்கூடங்களில் படித்து, அதில் தேர்ச்சி பெறுகிற நமதூர் மாணவ/மாணவிகளுக்கும் பரிசுத்தொகை வழங்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ரியாத் காயல் நல மன்றத்தின் இந்த வேண்டுகோள் கூட்டத்தில் ஏற்கப்பட்டது.
அடுத்து ஓமன் காயல் நல மன்றம் இக்ராஃவில் உறுப்பினராக இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்து அனுப்பிய மின்னஞ்சல் கடிதம் கூட்டத்தில் வாசிக்கப்பட்டது. இதனை ஏற்கப்பட்டு இது குறித்த தேவையான விளக்கத்தை அவர்களுக்கு அளிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
கல்வி உதவித்தொகை பயனாளிகள் நேர்காணல்:
இக்ராஃவின் பொது மற்றும் ஜகாத் நிதிகளின் கீழான கல்வி உதவித்தொகை பெறும் பயனாளிகளை நேர்காணல் செய்வதற்கான கமிட்டி நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஏற்கனவே கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட நேர்காணல் குழுவையே மீண்டும் நியமிக்கலாம் என கருத்து கூறப்பட்டது.
தலைவரின் ஆலோசனைகள் பரிசீலனை:
இக்ராஃ கல்விச் சங்கத்தின் நடப்பு தலைவரும் - கத்தர் காயல் நல மன்றத் தலைவருமான எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம் அவர்கள், தம் மன்றக் குழுவினருடன் கலந்தாலோசித்ததன் அடிப்படையில், இக்ராஃவுக்கு முன்வைத்த ஆலோசனைகள் கூட்டத்தில் வாசிக்கப்பட்டு, அவை குறித்து விவாதிக்கப்பட்டு, தேவையான முடிவுகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக இக்ராஃவுக்கான சொந்தக் கட்டிடம் குறித்த அவரது மாதிரி வரைபடம் (Building plan ) குறித்து கூட்டத்தில் விளக்கப்பட்டது. இதனை கட்டிடக் குழுவிடம் வழங்கி கூடிய விரைவில் இதற்கான பணிகளை துவக்குவது என்று முடிவு செய்யப்பட்டது.
மேலும் இக்ராஃவின் தலைவரால் அனுப்பப்பட்ட IQRA BENEFICIARY FEEDBACK FORM கூட்டத்தில் வாசித்துக் காண்பிக்கப்பட்டது. அதில் சிறிய திருத்தத்துடன் இதனை தயார் செய்து இக்ராஃவில் கல்வி உதவித்தொகை பெற்ற மாணவ-மாணவியருக்கு அனுப்புவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இக்ராஃவின் வழமைச் செயல்பாடுகளை ஓராண்டு கால அட்டவணை (Yearly Calender) அடிப்படையில் கத்தார் காயல் நல மன்றத்தால் வடிமைத்து முன்வைக்கப்பட்டுள்ள ஆலோசனையும் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டது. சில திருத்தங்களுடன் அவற்றை நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டது.
கடன் அடிப்படையில் கல்வி உதவித்தொகை:
குறிப்பாக கத்தார் காயல் நல மன்றம் முன் வைத்துள்ள ''மாணவர்களுக்கு கடன் அடிப்படையில் - உயர்கல்வி உதவித்தொகை'' வழங்குவது குறித்து நீண்ட நேரம் கலந்தாலோசிக்கப்பட்டது. இது ஒரு அருமையான திட்டம்தான் எனினும் இதன் சாதக பாதகங்கள் குறித்து கவனமாக ஆராய்ந்து அதன் பின் நடைமுறைப் படுத்துவதே சிறந்தது என்றும், இது குறித்து காயல் நல மன்றங்களிடமும் கருத்துக்களை கேட்டறிந்து, அதன்பின் கலந்தாலோசித்து இறுதி முடிவெடுக்கலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது.
பங்கேற்றோர் கருத்துப் பரிமாற்றம்:
கூட்ட நிரல்கள் குறித்த கலந்தாலோசனைகளையடுத்து, பங்கேற்றோரின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டது. அவற்றின் சுருக்கம்:-
எஸ்.எல்.ஷெய்கு அப்துல் காதிர் (எ) சின்ன லெப்பை (செயற்குழு உறுப்பினர், இக்ராஃ):
கடந்த காலத்தில் ‘சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை’ நிகழ்ச்சிக்காக, ஒரு கல்லூரியிலிருந்து அனுசரணை பெறப்பட்டது போல மீண்டும் முயற்சிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
கல்வி நிறுவனங்களில் அனுசரணை பெற்றால், அங்கு மாணவர் சேர்க்கை விஷயத்தில் இக்ராஃவின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகிவிடுவதாகவும், அதனால் தவிர்த்துக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், கல்வி நிறுவனங்களைத் தவிர்த்து, இதர நிறுவனங்களின் அனுசரணைகளைப் பெற்றிட முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
முத்து ஃபரீத் (துபை காயல் நல மன்றம்):
மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள பின்னடைவு குறித்து விவாதிப்பதற்காக, பெற்றோர் - ஆசிரியர்களை அழைத்துப் பேசி, தேவையான ஆலோசனைகளை வழங்கிட அவ்வப்போது கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என இக்ராஃ முன்பு நிறைவேற்றிய தீர்மானத்தின் நடப்பு நிலை குறித்து கேள்வி எழுப்பினார்.
வெகு விரைவில் அதற்கான செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டு, முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஆடிட்டர் ரிஃபாய் (தலைவர், KCGC - சென்னை):
வரி விலக்கு சலுகைகளைத் தரும் 12 AA , 80 G பிரிவு பற்றி தெளிவாக விளக்கி, இதனை அரசிடமிருந்து பெறுவதற்கான வழிமுறைகளை விளக்கினார். அவற்றின் படி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
மக்கீ நூஹுத்தம்பி (இலங்கை காயல் நல மன்றம்):
“இக்ராஃவின் நிதியாதாரத்தைப் பெருக்கிட உறுப்பினர்களை அதிகரிக்கலாம்” என்றார்.
நகரின் கல்வி வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ளவர்களை இனம் கண்டே இக்ராஃவில் உறுப்பினர் சேர்ப்பு நடைபெறுவதாகவும், எந்த வரையறையும் இன்றி - வருமானத்தை அதிகரிப்பதற்காக என்று மட்டும் உறுப்பினர்களைச் சேர்த்தால் அது இக்ராஃவின் அறப்பணிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்றும், வரையறைக்குட்பட்டு உறுப்பினர்களை அதிகரிக்க முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
எம்.ஐ.மெஹர் அலி (முன்னாள் துணைத்தலைவர், தம்மாம் காயல் நற்பணி மன்றம்):
''இக்ராஃவின் உறுப்பினர் வருடாந்திர சந்தாத் தொகையை ரூபாய் 500 என உயர்த்தலாமே'' என்றார்.
இது குறித்து ஏற்கனவே பல கூட்டங்களில் பேசப்பட்டுள்ளதாகவும், காயல் நல மன்றங்களில் அங்கம் வகிக்கும் எண்ணற்றோர், பல அமைப்புகளுக்கும் சந்தா மற்றும் நன்கொடை வழங்க வேண்டியிருப்பதால், இந்த தொகையை அதிகரித்தால் அது அவர்களுக்கும், சேகரித்துத் தரும் காயல் நல மன்றங்களுக்கும் ஒரு சுமையாக அமைந்து விடும் எனவும், விருப்பம் உள்ளவர்கள் உறுப்பினர் சந்தாத்தொகை ரூபாய் 300 போக மீதம் நன்கொடையாக எவ்வளவு வேண்டுமானாலும் வழங்கி ஆதரிக்கலாம் எனவும், எனவே இந்த யோசனை கை விடப்பட்டதாகவும் இக்ராஃ நிர்வாகி தெரிவித்தார்.
சாளை ஷேக் ஸலீம் (துணைத்தலைவர் - துபை காயல் நல மன்றம்):
அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுவதற்காக நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் மாணவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் பொருட்டு, இதுநாள் வரை துபை காயல் நல மன்றம் வழங்கி வந்த கல்வி உதவித்தொகைகளை நிறுத்தி வைத்துவிட்டு, போட்டித் தேர்வுக்கான படிப்புகளில் இணைவோருக்கு முழு கல்விச் செலவையும் ஏற்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
ஐ.ஏ.எஸ்., ஐ.பீ.எஸ் உள்ளிட்ட அரசு உயர்பதவிகளுக்கான படிப்புகளில் துவங்கி, கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கான படிப்புகள் வரை, காயல்பட்டினம் நகர மாணவர்களுக்கு தகுந்த வழிகாட்டல்களும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் அடிக்கடி நடத்தப்பட்டு வந்தும், மாணவர்களைத் தனியே அழைத்து ஆர்வத்தைத் தூண்டிய பிறகும் இது விஷயத்தில் நகர மாணவர்கள் இதுநாள் வரை ஆர்வம் காட்டாத நிலையிலேயே உள்ளனர். எனவே, இப்படிப்பில் இணைவோருக்கு மட்டும் கல்வி உதவித்தொகை வழங்குவதாக முடிவெடுத்தால், பல்லாயிரம் தொகையை கல்வி உதவித்தொகையாக வழங்கி வந்துகொண்டிருக்கும் துபை காயல் நல மன்றம், சில ஆண்டுகளுக்கு எந்த உதவித்தொகையும் வழங்க அவசியமில்லாது போய்விடும் என்பதைக் கருத்திற்கொண்டு, இதர கல்வி உதவித்தொகைகளையும் வழங்குவதோடு, போட்டித் தேர்வுகளுக்கும் மாணவர்களுக்கு ஆர்வத்தைத் தூண்டி செயல்திட்டங்களை வகுக்குமாறு இக்ராஃ செயற்குழுக் கூட்டம் கேட்டுக்கொண்டது.
இத்தகவலை, தம் மன்றக் கூட்டத்தில் தெரிவிப்பதாக அதன் துணைத்தலைவர் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து பேசிய இக்ராஃ செயலாளர் கே.ஜே.ஷாஹுல் ஹமீது, நாம் எல்லோருமே IAS, IPS பயில மக்கள் முன் வர வேண்டும் என்கிறோம். ஆனால் நம்மில் எத்தனை பேர் நமது பிள்ளைகளை உருவாக்க முயற்சித்துள்ளோம். எனவே நமது குடும்பத்திலிருந்து இந்த முயற்சிகளை துவக்குவோம் என்ற போது பலரும் இந்தக் கருத்தை ஆமோதித்தனர். அப்போது குறுக்கிட்டு பேசிய KCGC தலைவர் ஆடிட்டர் ரிஃபாய், தமது குடும்பத்தில் ஒருவர் IAS ஆகும் வாய்ப்பு இருப்பதாகவும் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இது கூடிய விரைவில் நிறைவேற அனைவரும் துஆ செய்யுமாறும் கேட்டுக் கொண்டார்.அதனை அனைவரும் வரவேற்று மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
இவ்வாறாக, கூட்ட பங்கேற்பாளர்களிடமிருந்து ஆலோசனைகள் பெறப்பட்டு, தேவையான விளக்கங்களும் வழங்கப்பட்டன. நிறைவில், பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானங்கள்:
தீர்மானம் 1 - அனுசரணையாளர்களுக்கு நன்றி:
இக்ராஃவின் பொது மற்றும் ஜகாத் நிதிகளிலிருந்து கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக, அனுசரணையளித்துள்ள அனைத்து அனுசரணையாளர்களுக்கும் இக்கூட்டம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறது.
தீர்மானம் 2 - ‘சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை’ நிகழ்ச்சி:
தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புடன் இக்ராஃ கல்விச் சங்கம் இணைந்து ஆண்டுதோறும் நடத்தும் ‘சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை’ நிகழ்ச்சியை, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 22, 23 நாட்களில் (சனி, ஞாயிறு) நடத்திட இக்கூட்டம் தீர்மானிப்பதோடு, அந்நிகழ்ச்சியையொட்டி, கல்வி - வேலைவாய்ப்பு வழிகாட்டு நிகழ்ச்சி மற்றும் வழமை போல் கத்தர் காயல் நல மன்றத்தின் மாணவர்களுக்கான வினாடி-வினா நிகழ்ச்சிகளையும் நடத்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 3 - கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான பரிந்துரைகள்:
இக்ராஃவிலிருந்து கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான பரிந்துரைகளை வடிவமைத்து சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட குழுவிடமிருந்து பெறப்பட்ட பரிந்துரைக் கடிதத்தை, காயல் நல மன்றங்களின் கருத்துக்களைக் பெறுவதற்காக அனுப்பி வைக்க இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 4 - கல்வி உதவித்தொகை பயனாளிகள் நேர்காணல்:
இக்ராஃவின் பொது மற்றும் ஜகாத் நிதிகளிலிருந்து கல்வி உதவித்தொகைக்காக விண்ணப்பித்துள்ள மாணவ-மாணவியரை நேர்காணல் செய்வதற்கு, கடந்த கல்வியாண்டில் நியமிக்கப்பட்ட அதே குழுவை மீண்டும் நியமித்து இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்ராஃ பொருளாளர் கே.எம்.டீ.சுலைமான் நன்றி கூற, துணைச் செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ் துஆவைத் தொடர்ந்து, ஸலவாத் - கஃப்பாராவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது.
இக்கூட்டத்தில், அபுதாபி காயல் நல மன்றத் தலைவர் வி.எஸ்.டி.ஷேக்னா லெப்பை, அதன் மக்கள் தொடர்பு அலுவலர் ஏ.ஆர்.ரிஃபாய் சுல்தான்,
துபை காயல் நல மன்ற துணைத்தலைவர் சாளை ஷேக் ஸலீம், அதன் ஆலோசனைக் குழு உறுப்பினர் எம்.எஸ்.நூஹ் ஸாஹிப், செயற்குழு உறுப்பினர் முத்து ஃபரீத்,
கத்தர் காயல் நல மன்றத்தின் கே.எம்.டீ.ஷேக்னா லெப்பை,
ரியாத் காயல் நல மன்ற செயலாளர் ஏ.டீ.ஸூஃபீ இப்றாஹீம், அதன் துணைத்தலைவர் முஹம்மத் நூஹ், பொருளாளர் எம்.என்.முஹம்மத் ஹஸன், மற்றும் வாவு கிதுரு முஹம்மது, எஸ்.பி.முஹிதீன், எஸ்.ஏ.ஸி.அஹமது ஸாலிஹ்,
தாய்லாந்து காயல் நல மன்றத்தின் பொருளாளர் என்.எஸ்.ஹனீஃபா,
ஜித்தா காயல் நல மன்றத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினர் ஆடிட்டர் மீரான் மூஸா,
ஜெய்ப்பூர் காயல் நல மன்ற தலைவர் எம்.ஏ.எஸ்.செய்யித் அபூதாஹிர், அதன் செயலாளர் ஹாஃபிழ் எம்.ஏ.செய்யித் முஹம்மத்,
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் ஆலோசனைக் குழு உறுப்பினர் கம்பல்பக்ஷ் எஸ்.எச்.பாக்கர் ஸாஹிப், அதன் உறுப்பினர் எம்.என்.மின்ஹாஜ் முஹ்யித்தீன்,
காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையம் (KCGC) அமைப்பின் தலைவர் ஆடிட்டர் ரிஃபாய்,
ஓமன் காயல் நல மன்ற துணைத்தலைவர் டாக்டர் எஸ்.ஏ.கே.நூருத்தீன் ஆகிய சிறப்பழைப்பாளர்களுடன், இக்ராஃ செயற்குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
தகவல்:
N.S.E.மஹ்மூது
(மக்கள் தொடர்பாளர் - இக்ராஃ கல்விச் சங்கம்)
இக்ராஃ கல்விச் சங்கத்தின் முந்தைய செயற்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
இக்ராஃ கல்விச் சங்கம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |