தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் படி, மாவட்டம் முழுக்க - தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
காயல்பட்டினம் சுனாமி நகரில், தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி, 14.08.2015 வெள்ளிக்கிழமையன்று 16.30 மணியளவில் நடைபெற்றது.
நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்கள் குறித்து பொதுமக்களிடம் விளக்கிப் பேசினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கெதிராக கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதாகவும், அவற்றை விற்பனை செய்வோருக்கு 500 முதல் 1000 ரூபாய் வரையிலும், பயன்படுத்துவோருக்கு 100 ரூபாயும் அபராதம் விதிக்கப்படவுள்ளதாகவும், நகராட்சியின் சார்பில் வாரத்தில் ஏதேனும் இரண்டு நாட்களிலும் - மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் திடீரெனவும் சோதனைகள் நடத்தப்படவுள்ளதாகவும், மாவட்ட நிர்வாகத்தால் சோதனையிடப்படும்போது தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால், அக்கடைகளை மூடி முத்திரையிட உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் அப்போது கூறினார்.
தூத்துக்குடி மாவட்டத்தை - சுற்றுச்சூழல் மாசில்லாத மாவட்டமாக ஆக்கிட, பொதுமக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பளிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில், சுனாமி நகர் பகுதியைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் கலந்துகொண்டனர்.
காயல்பட்டினம் நகராட்சியின் ப்ளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
காயல்பட்டினம் நகராட்சி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |