காயல்பட்டினம் தென் பாக கிராமம் சர்வே எண் 278 இடத்தில் பயோ காஸ் திட்டப்பணிகள் - சுற்றுச்சூழல் துறைகளின் முறையான அனுமதி பெறாமல் துவங்கப்பட்டதை எதிர்த்து, கொம்புத்துறை ஊர் நல குழு மற்றும் கொம்புத்துறை சதுப்பு
நில காடுகள் பாதுகாப்பு குழு ஆகியவை இணைந்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மே மாதம் வழக்கு
தொடர்ந்தனர்.
மே 20 அன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கை (Appeal No.100/2015 [SZ]) விசாரித்த நீதிபதி பி.ஜோதிமணி மற்றும் நிபுணர் உறுப்பினர்
பேராசிரியர் டாக்டர் ஆர்.நாகேந்திரன் ஆகியோர் - அடுத்த ஆணை பிறப்பிக்கும் வரை பணிகளை நிறுத்திட (STATUS QUO AS ON DATE) -
உத்தரவிட்டனர். மேலும் - ஜூலை 9 தேதிக்கு வழக்கை தள்ளி வைத்தனர்.
ஜூலை 9 அன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நடந்த வாதங்களின் போது - நகராட்சி சார்பாக, இடைப்பட்ட காலத்தில் - மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதிகள் (CONSENT TO
ESTABLISH [CTE]; AUTHORISATION UNDER MSW RULES 2000) பெறப்பட்டுள்ளதாகவும், எனவே - இடைக்கால தடை நீக்கப்படவேண்டும் என்றும்
கோரப்பட்டது.
இதற்கு - மனுதாரர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
நீண்ட விவாதத்தை தொடர்ந்து, மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் கூடுதல் விளக்கம் பெற, இவ்வழக்கினை - தீர்ப்பாயம், ஜூலை 20 தேதிக்கு
ஒத்திவைத்தது.
வழக்கு மீண்டும் ஜூலை 20 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது - நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா
சேக் சார்பாக பதிலும், ஆவணங்களும், மாசு காட்டுப்பாட்டு வாரியம் சார்பாக பதிலும், மனுதாரர்கள் சார்பாக நகராட்சியின் மனுவிற்கான பதிலும்
(REJOINDER) சமர்ப்பிக்கப்பட்டது.
தொடர்ந்து பேசிய மனுதாரருக்கு ஆஜரான மூத்த வழக்கறிஞர் டி.மோகன், வழக்கு தொடர்ந்த பிறகே - மாசு கட்டுப்பாட்டு வாரியம், தனது
ஒப்புதல்களை வழங்கி உள்ளது என்றும், அவை அவசர கோலத்தில் தவறான தகவல்களை கொண்டு வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். மேலும் -
இது போன்ற திட்டங்களுக்கு, அரசு விதிமுறைகள்படி - சுற்றுச்சூழல் ஒப்புதல் (ENVIRONMENTAL CLEARANCE) பெறப்பட வேண்டும் என்றும்
தெரிவித்தார்.
இந்த திட்டத்திற்கு சுற்றுச்சூழல் ஒப்புதல் தேவையில்லை என வாதிட்ட அரசு மற்றும் நகராட்சி தரப்பு வழக்கறிஞர் அப்துல் சலீம் - அதற்கான
விளக்கத்தினை வழங்க தனக்கு கூடுதல் கால அவகாசம் வேண்டும் என கூற - மூன்று மணி நேரம் நீடித்த வாதங்கள் நிறைவுற்று, வழக்கு மீண்டும்
ஜூலை 30 அன்று விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
வழக்கு மீண்டும் ஜூலை 30 அன்று - ஆறாவது பொருளாக - விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் மற்றும் நகர்மன்றத் தலைவர் சார்பாக சுற்றுச்சூழல் ஒப்புதல் தேவை என்ற நிலைக்கு ஆதரவான சில தீர்ப்பாய முடிவுகள்
சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் மனுதாரர் சார்பாக - எழுத்துப்பூர்வமான கூடுதல் மனுவும் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுதாரர் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் டி.மோகன், கடந்த அமர்வின் போது - அரசு மற்றும் நகராட்சி தரப்பில் எழுப்பப்பட்ட சில
சந்தேகங்களுக்கான விளக்க ஆதாரங்களை தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அரசு மற்றும் நகராட்சி வழக்கறிஞர் அப்துல் சலீம் - சுற்றுச்சூழல் அனுமதி தேவை இல்லை என்ற தங்கள் நிலைக்கு ஆதரவான சில
முடிவுகளை தாங்கள் ஆய்வு செய்து வருவதாகவும், அவற்றை தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்க கூடுதல் கால அவகாசம் வேண்டும் என கூற, வழக்கு
ஆகஸ்ட் 14 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஆகஸ்ட் 14 அன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது - மனுதாரர் சார்பாக வாதாடும் மூத்த வழக்கறிஞர் டி.மோகன் - தீர்ப்பாயத்திற்கு இன்று வர முடியாத காரணத்தால், வழக்கு ஆகஸ்ட் 18 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் வழக்கு ஆகஸ்ட் 18 (இன்று) விசாரணைக்கு வந்ததது. அப்போது - அரசு மற்றும் நகராட்சி தரப்பு வழக்கறிஞர் அப்துல் சலீம், சுற்றுச்சூழல் ஒப்புதல் (ENVIRONMENTAL CLEARANCE) தேவை என்ற பசுமை தீர்ப்பாயத்தின் தலைமை அமர்வின் தீர்ப்பு ஒன்றிற்கு உச்ச நீதி மன்றம் இடைக்கால தடை வழங்கியுள்ளதை மேற்கோள்காட்டினார்.
அந்த தீர்ப்பு - தற்போதைய வழக்குக்கு பொருந்தாது என மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் யோகேஸ்வரன் வாதாடினார்.
வாதங்கள் நாளையும் தொடரும் என வழக்கு நாளைய (ஆகஸ்ட் 19) தினத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.
மனுதாரர்கள் சார்பாக மூத்த வழக்கறிஞர் டி.மோகன், வழக்கறிஞர் ஏ.யோகேஸ்வரன் மற்றும் வழக்கறிஞர் நேஹா ஆகியோர் ஆஜராகின்றனர்.
அரசு சுற்றுச்சூழல் துறை செயலர், நகராட்சி ஆணையர் ஆகியோர் சார்பாக வழக்கறிஞர் அப்துல் சலீம் மற்றும் வழக்கறிஞர் விக்னேஸ்வரி விபின்
ஆஜராகின்றனர்.
மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக வழக்கறிஞர் யாஸ்மீன் அலி ஆஜரானார்.
நகர்மன்றத் தலைவர் ஐ, ஆபிதா சேக் சார்பாக வழக்கறிஞர் விஷ்ணு ஆஜரானார்.
ஒப்பந்ததாரர் எஸ்.கே. அண்ட் கோ நிறுவனம் சார்பாக வழக்கறிஞர் நவீன் ஆஜரானார். |