வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில், மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்கள் கண்காட்சியை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் துவக்கி வைத்துள்ளார். இதுகுறித்து, மாவட்ட நிர்வாகத்திலிருந்து பெறப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் வாவு வாஜீஹா வனிதையர் கலைக்கல்லூரியில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப்பொருட்கள் விற்பனை கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.ரவி குமார் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
பின்னர் அவர் பேசுகையில் தெரிவித்ததாவது:-
மகளிர் சுயஉதவிக்குழுவினர் தங்கள் பொருளாதாரத்தினை மேம்படுத்திட தையல், அழகுக்கலை, உணவகங்கள் நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் செய்து வருகின்றனர். மீன் ஊறுகாய், மாவுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் ஆயத்த ஆடைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகின்றனர். அந்த உற்பத்திப் பொருட்கள் குறித்து இளைய தலைமுறையினரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மகளிர் சுயஉதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைபடுத்திடவும், சுயஉதவிக் குழுவினர் இன்றைய தலைமுறையினரின் எதிர்பார்ப்புகளை புரிந்து கொண்டு தங்கள் உற்பத்திப் பொருட்களை மேம்படுத்தி வருகின்றது.
அதன்படி மூன்று நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில் 18 மகளிர் சுயஉதவிக் குழுவினர் கலந்து கொண்டு தங்கள் பொருட்களைப் பார்வைக்கும் விற்பனைக்கும் வைத்துள்ளனர். விருதுநகர், மதுரை மாவட்டங்களிலிருந்தும் தலா 2 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் வருகை புரிந்துள்ளனர்.
சுயஉதவிக்குழுக்களின் சொந்த தயாரிப்புகளான ஊறுகாய் வகைகள், மாவு வகைகள், செயற்கை ஆபரணங்கள், பனை ஓலைப்பொருட்கள், கைவினைப்பொருட்கள், ஆயத்த ஆடைகள், உணவுப் பொருட்கள் ஆகியன விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மாணவிகள் எவ்வாறு பொருட்கள் சந்தைப்படுத்த வேண்டும் என்று சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு செயல் விளக்கம் அளிக்கும் வகையில் 15 அங்காடிகள் அமைத்து மாதிரி கண்காட்சி அமைத்துள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட திட்ட இயக்குனர் கு.இந்துபாலா, திருச்செந்தூர் கோட்டாட்சியர் தியாகராசன், செய்தி மக்கள் தொடர்பு உதவி அலுவலர் தே.ராம்குமார், கல்லூரி செயலர் முஃதஸிம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அந்த செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |