தூத்துக்குடி மாவட்ட அளவிலான கால்பந்துப் போட்டிகளில் வென்றதன் மூலம், மண்டல அளவில் விளையாடுவதற்கு, காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் 17 வயதுக்குட்பட்ட சீனியர் பிரிவு, 19 வயதுக்குட்பட்ட சூப்பர் சீனியர் பிரிவு மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். விபரம் வருமாறு:-
பள்ளிகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள் வட்டார - மாவட்ட - மண்டல – மாநில அளவில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. திருச்செந்தூர் வட்டார அளவிலான போட்டிகள், 21.07.2015 அன்று திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. எல்.கே.மேனிலைப்பள்ளியின் சார்பில் பங்கேற்ற மாணவர்கள் இப்போட்டிகளில் வென்றதையடுத்து, நடப்பு ஆகஸ்ட் மாதம் 19, 20 நாட்களில் - தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற கால்பந்துப் போட்டிகளில் பங்கேற்றனர்.
19.08.2015 அன்று காலையில் நடைபெற்ற - 17 வயதுக்குட்பட்ட சீனியர் பிரிவிற்கான முதலாவது அரையிறுதிப் போட்டியில், எல்.கே.மேனிலைப்பள்ளியும், நாசரேத் மர்காஷிஸ் பள்ளியும் மோதின. அதில், 3-0 என்ற கோல் கணக்கில் எல்.கே.மேனிலைப்பள்ளி அணி வெற்றி பெற்று, இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது. இந்த 3 கோல்களையும் அமீன் என்ற வீரர் அடித்து, ஹாட்ரிக் சாதனை புரிந்துள்ளார்.
அன்று மாலையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், தூத்துக்குடி லசால் பள்ளியை எதிர்த்தாடி, 2-0 என்ற கோல் கணக்கில் எல்.கே.மேனிலைப்பள்ளியின் சீனியர் அணி வெற்றிபெற்று, மண்டல அளவிலான போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளது. இந்த இரண்டு கோல்களையும் தாவூத் என்ற வீரர் அடித்துள்ளார்.
20.08.2015 அன்று காலையில், அதே மைதானத்தில் நடைபெற்ற - 19 வயதுக்குட்பட்ட சூப்பர் சீனியர் பிரிவிற்கான கால்பந்துப் அரையிறுதிப் போட்டியில், தூத்துக்குடி ஸ்பிக் மேனிலைப்பள்ளியை எதிர்த்தாடிய எல்.கே.மேனிலைப்பள்ளி அணி, 3-0 என்ற கோல் கணக்கில் வென்று, இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றது. ஃபஹீம் ஒரு கோலும், மிஸ்ஹால் அடுத்த இரண்டு கோல்களையும் அடித்தனர்.
அன்று மாலையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், மூக்குப்பீறி புனித மார்க்ஸ் மேனிலைப்பள்ளியை எதிர்த்தாடி, 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, மண்டல அளவிலான போட்டியில் விளையாடத் தகுதிபெற்றுள்ளது. இந்த இரண்டு கோல்களையும், மிஸ்ஹால் அடித்துள்ளார்.
தகவல் & படங்கள்:
ஜமால்
(உடற்கல்வி ஆசிரியர் - எல்.கே.மேனிலைப்பள்ளி)
கடந்தாண்டு எல்.கே.மேனிலைப்பள்ளி மாநில அளவிலான கால்பந்துப் போட்டிகளில் பங்கேற்றமை குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
எல்.கே.மேனிலைப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |