இந்தியாவின் 69ஆவது சுதந்திர நாள் விழா, 15.08.2015 அன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டது. காயல்பட்டினம் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளியின் சுதந்திர நாள் விழா, அன்று காலை 09.00 மணியளவில், பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
பள்ளி நிறுவனர் வழக்குரைஞர் அஹ்மத் தலைமையுரையாற்றினார். செயலர் எம்.எல்.ஷேக்னா லெப்பை அனைவரையும் வரவேற்றார்.
திருச்செந்தூரைச் சேர்ந்த மூத்த வழக்குரைஞர் சந்திரசேகர், தேசிய கொடியேற்றி, வாழ்த்துரையாற்றினார்.
சேவை எண்ணமும், மனிதாபிமானமும், சமூக நல்லிணக்கமும், கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறைகளும் மக்களிடையே மிகவும் குறைந்து வருவதாகவும், கிராமங்களும் - விவசாய நிலங்களும் அழிந்து வருவதாகவும் பேசிய அவர், இந்நிலை மாற மக்கள் மனங்களில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்றார்.
துளிர் பள்ளி குறித்து பேசிய அவர், சாதி - மதங்களைக் கடந்து இந்த வட்டாரத்தில் உள்ள அனைத்து சமயங்களைச் சேர்ந்த இயலாநிலைக் குழந்தைகளுக்கும் சிறப்புற மறுவாழ்வுப் பணியாற்றி, மனித நேயத்துடன் செயல்படுவதால், சமூக நல்லிணக்கத்திற்கு இப்பள்ளி ஒரு பாலமாக விளங்குவதாகக் கூறினார்.
இந்திய விடுதலை மற்றும் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்துமத் ஆடல் - பாடல் கலை நிகழ்ச்சிகள், பள்ளி மாணவ-மாணவியரால் செய்து காண்பிக்கப்பட்டன.
பள்ளியின் நிர்வாக ஒருங்கிணைப்பாளர் சித்தி ரம்ஸான் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது. இதில், பள்ளியின் நிர்வாகிகள், அலுவலர்கள், ஆசிரியையர், மாணவ-மாணவியர், பெற்றோர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் பனைவெல்லம், எலுமிச்சை சாறு, புளி கரைசல் கொண்டு தயாரிக்கப்பட்டிருந்த பானகரம் ஆகியன பரிமாறப்பட்டது. அரிமா சங்க காயல்பட்டினம் நகர கிளை மற்றும் அரசர் பேக்கரி சார்பில் அனைவருக்கும் காய்கறிக் கலவையிலான சாதப் பொட்டலம் வழங்கப்பட்டது.
சுதந்திர விழாவை முன்னிட்டு, துளிர் பள்ளி சிறாரும், சிறப்பாசிரியையரும் இணைந்து பள்ளி வளாகத்தைத் தூய்மைப்படுத்தி, கொடி - பூ அலங்காரங்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்தாண்டு (2014) துளிர் பள்ளியின் சுதந்திர நாள் விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
துளிர் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |