அரசு சட்ட விதிகளை மீறி, காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW அமிலக்கழிவு தொழிற்சாலையை மூட வலியுறுத்தி, சென்னையிலுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் முற்றுகையிடும் போராட்டத்தில், தடையை மீறி போராட்டம் நடத்திய SDPI கட்சியினர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து SDPI சார்பில் பெறப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் செயல்பட்டு வரும் தாரங்கதாரா கெமிக்கல் ஒர்க்ஸ் (D.C.W) ஆலையின் விரிவாக்க திட்டப் பணிகளுக்கு தடைவிதிக்கக் கோரியும், ஆலையின் கழிவுகளால் சுற்றுப்புற சூழலுக்கும், பொதுமக்களுக்கும் ஏற்பட்டுள்ள கேடுகள் தொடர்பான முழுமையான ஆய்வினை மேற்கொண்டு, ஆலையினை நிரந்தரமாக மூடவேண்டும் என்பதை வலியுறுத்தியும், சென்னை கிண்டியிலுள்ள தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தை எஸ்.டி.பி.ஐ கட்சினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்த முற்றுகை போராட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் தலைமை தாங்கினார். மாநில செயலாளர்கள் அமீர் ஹம்சா, ரத்தினம், உஸ்மான் கான், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஏ.கே.கரீம், காஞ்சி பிலால் தூத்துக்குடி மாவட்ட எஸ்.டி.பி.ஐ தலைவர் அஷ்ரப் ஃபைஜி, தென்சென்னை மாவட்ட தலைவர் நேதாஜி ஜமால், திருவள்ளூர் மாவட்ட தலைவர் சேக் முகம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் அணு சக்திக்கெதிரான மக்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த முகிலன் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த முற்றுகை போராட்டத்தில் காயல்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார மக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகள், செயல்வீரர்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.
முற்றுகை போராட்டத்திற்கு தலைமை வகித்து பேசிய எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி பேசினார். அவரது உரைச்சுருக்கம் வருமாறு:-
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் அருகே பல வருடங்களாக செயல்பட்டு வருகிறது தாரங்கதாரா கெமிக்கல் ஒர்க்ஸ் (DCW) என்ற அமில ஆலை. இந்த ஆலையானது பாதரசத்தை அடிப்படையாகக் கொண்டு காஸ்டிக் சோடா பி.வி.சி. மற்றும் சி.பி.வி.சி போன்ற பல்வேறு பொருட்களை முறையான பாதுகாப்பு வசதிகள் இன்றி சர்வதேச விதிமுறைகளை மீறி உற்பத்தி செய்துவருகிறது. இந்த ஆலைக்குள் தேக்கி வைக்கப்படும் டிரை குளோரோ எதிலின், அயன் ஆக்ஸைடு, காட்மியம் போன்ற செந்நிற ஆபத்தான ரசாயன கழிவுகளை ஒவ்வொரு வருடமும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஆலைக்கு அருகே உள்ள காயல்பட்டினம் கடலில் இரகசியமாக கலக்கின்றனர்.
இந்த கழிவுகளால் மிக மோசமாக, கடலும், நிலமும் மற்றும் மீன் வளங்களும் பாதிக்கப்படுகின்றது. சில ரசாயன கழிவுகள் ஆவியாகி காற்றையும் மாசுபடுத்துகின்றன. இதனால் ஆலையை சுற்றியுள்ள காயல்பட்டணம், ஆறுமுகநேரி, புன்னக்காயல், சேர்ந்தமங்களம், ஆத்தூர் உட்பட 20 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மிக மோசமான புற்று நோய்கள், சுவாசக் கோளாறுகள், மன நோய்கள் மற்றும் தோல் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் புற்றுநோய், சுவாசக் கோளாறுகள் காரணமாக ஏராளமானோர் மரணத்தை தழுவியுள்ளனர். மேலும் பலர் ஆபத்தான நோய்களோடு வாழ்நாட்களை எண்ணி வருகின்றனர். இதன் காரணமாக காயல்பட்டினம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்கள் மனிதர்கள் வாழ்வதற்கு தகுதியற்ற பூமியாக மாறிவருகிறது.
இதுமட்டுமின்றி காயல்பட்டினத்துக்கு அருகிலுள்ள இந்துக்களின் புனித தலமான திருச்செந்தூர் கடல் பகுதியில் அவ்வப்போது கடல் நீர் செந்நிறமாக மாறுவதும், கடலில் புனித நீராடும் பக்தர்களுக்கு தோல் அரிப்பு போன்றவை ஏற்படுவதும், கடலில் கலக்கப்படும் இந்த ரசாயன ஆலைக் கழிவுகள்தான் காரணம்.
மேற்கண்ட இந்த அவநிலைக்கு காரணமான டி.சி.டபுள்யூ ஆலை, இந்த கழிவுகளை சர்வதேச நவீன முறைகளில் சுத்திகரிக்க வேண்டிய ஆலை நிர்வாகம் அதைப்பற்றி கிஞ்சிற்றும் கவலை கொள்ளாது தொடர்ந்து விதிமுறைகளை மீறி நில வளத்தையும், கடல் வளத்தையும், காற்றையும் மாசுபடுத்தி வருகின்றது. இதனை தடுக்க வேண்டி அப்பகுதி மக்கள் எத்தனையோ மனுக்களை அதிகாரிகளுக்கு அனுப்பியும் அம்மனுக்கள் எல்லாம் குப்பைக்கூடைக்கு மட்டுமே சென்றது. மக்களை கொடிய நோய்களிலிருந்து காப்பாற்ற எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் இதுவரை மத்திய, மாநில அரசுகளால் எடுக்கப்படவில்லை என்பதே உண்மை.
இதுக்குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சி தொடர்ந்து அரசிடம் கோரிக்கை வைத்தது. கோரிக்கைகளுக்கு அரசுகள் செவிமடுக்காத நிலையில் கடந்த டிசம்பர் 30 அன்று, ஆலையை முற்றுகையிடும் போராட்ட த்தை நடத்தியது. ஆலையால் ஏற்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், நோய்களால் போராடிக் கொண்டிருப்பவர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும், டி.சி.டபுள்யூ ஆலையை பற்றிய வெள்ளை அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்பட்ட அந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு கைதாயினர்.
அதன்பிறகும் அந்த ரசாயன ஆலையை மூட வலியுறுத்தி, எஸ்.டி.பி.ஐ கட்சியும், தன்னார்வலர்களும் தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள், மாசுக்கட்டுபாட்டு வாரியத்திடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஆனால், பல்வேறு புகார் மனுக்கள் அளித்தும், போராட்டங்கள் நடத்தியும், ஆலைக்கெதிராக தமிழக அரசோ மாசுக்கட்டுப்பாடு வாரியமோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆலை நிர்வாகமும் மக்களின் போராட்டத்தினை, கோரிக்கையினை அலட்சியம் செய்வதோடு விரிவாக்க பணிகளை மேற்கொள்ளும் நடவடிக்கையினையும் மேற்கொண்டு வருகிறது.
ஆகவே, தாரங்கதாரா கெமிக்கல் ஒர்க்ஸ் ஆலையின் விரிவாக்க திட்டத்திற்கு தடை விதிப்பதோடு, ஆலையின் கழிவுகளால் சுற்றுப்புற சூழலுக்கும், பொதுமக்களுக்கும் ஏற்பட்டுள்ள கேடுகள் தொடர்பான முழுமையான ஆய்வினை மேற்கொண்டு, ஆலையினை நிரந்தரமாக மூடவேண்டும் என்பதை வலியுறுத்தியே இன்றைக்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தை எஸ்.டி.பி.ஐ கட்சி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றது.
டி.சி.டபுள்யூ ஆலை தன்னுடைய தண்ணீர் தேவைக்காக கடலிலும், தாமிரபரணி தண்ணீரையும் பயன்படுத்திக் கொள்வதற்கான அனுமதியை பெற்றுள்ளது. இதில் தாமிரபரணி தண்ணீரை நாளொன்றுக்கு 3 லட்சம் கேலன் தண்ணீர் எடுத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் மேற்கண்ட அனுமதி காலாவதியாகி பல வருடங்கள் ஆகின்றது. ஆனால் இன்றுவரை அந்த ஆலை மேற்கண்ட காலாவதி அனுமதியை வைத்தே தண்ணீர் எடுத்து வருகிறது. எனவே மேற்கண்ட நடவடிக்கையை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
டி.சி.டபுள்யூ ஆலையானது காயல்பட்டினம் மக்களுக்கு மட்டுமல்ல சுமார் 20க்கும் மேற்பட்ட ஊர்களில் வாழும் மக்களின் நலனுக்கு எதிரானது. ஆனால், சில மர்ம கைக்கூலிகள் ஆலையின் சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்து ஜனநாயக வழியில் போராடி வரக்கூடிய அமைப்புகளை மதரீதியில் பிளவுபடுத்தி தவறாக வழிநடத்தும் வேலைகளை ஆலை நிர்வாகத் துணையுடன் மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசயத்தில் மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு போராடிவரும் எஸ்.டி.பி.ஐ, பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடித்து ஆலை மூடப்படும் வரை தொடர்ச்சியான போராட்டங்களை மேற்கொள்ளும்!
இவ்வாறு அவர் பேசினார். இதையடுத்து மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தை முற்றுகையிட பேரணியாக புறப்பட்டவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
இவ்வாறு அந்த செய்தியறிக்கை தெரிவிக்கிறது.
இப்போராட்டத்தில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த சுமார் 100 பேர் உட்பட 400 பேர் வரை கலந்துகொண்டதாகவும், 285 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
படங்கள்:
A.J.மன்ஸூர்
நோனா உவைஸ்
‘Bean N Bread’ அஹ்மத்
SDPI தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |