திருமறை குர்ஆனை தஜ்வீத் திருத்தத்துடன் ஓதப் பயிற்றுவிப்பதற்காக, ஐக்கிய அரபு அமீரகம் - துபை மற்றும் அபூதபீ நகர்களில் வசிக்கும் - காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி மஹல்லா ஜமாஅத்தினரை உறுப்பினர்களாகக் கொண்ட “அமீரக குருவித்துறைப் பள்ளி மஹல்லா கூட்டமைப்பின்” வழிகாட்டலில், “மக்தப் நஹ்விய்யா” எனும் பெயரில், சொளுக்கார் தெருவில் புதிய மக்தப் துவக்க நிகழ்ச்சி, 19.08.2015 புதன்கிழமையன்று 17.30 மணியளவில், அ.க. பெண்கள் தைக்காவில் நடைபெற்றது.
டீ.எஸ்.ஐ.அஹ்மத் முஸ்தஃபா நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். ஹாஃபிழ் சொளுக்கு முஹ்யித்தீன் அப்துல் காதிர் தவ்ஹீத் கிராஅத் ஓதி துவக்கி வைக்க, தொடர்ந்து இறைவேண்டற்பாடல்கள் அனைவராலும் நின்று பாடப்பட்டது.
எஸ்.கே.ஸாலிஹ் அனைவரையும் வரவேற்றுப் பேசியதோடு, தற்காலத்தில் திருக்குர்ஆன் மக்தப்கள் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாகத் துவக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கிப் பேசினார்.
அமீரக குருவித்துறைப் பள்ளி மஹல்லா கூட்டமைப்பைச் சேர்ந்த டீ.எஸ்.ஏ.யஹ்யா முஹ்யித்தீன், இந்த மக்தப் துவக்கப்படுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்து பேசினார்.
திருமறை குர்ஆனை தஜ்வீதுடன் பிழையின்றி ஓதுவதன் அவசியம், அதன் மகத்துவம் குறித்து, மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ ஏ.எம்.முஹ்யித்தீன் லெப்பை ஸக்காஃபீ சிறப்புரையாற்றினார்.
அமீரக குருவித்துறைப் பள்ளி மஹல்லா கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.எஸ்.முஹம்மத் லெப்பை நன்றி கூற, மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.சி.முஹம்மத் ஈஸாவின் துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. அனைத்து நிகழ்ச்சிகளையும், கம்பல்பக்ஷ் எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத் தொகுத்து வழங்கினார்.
இந்த மக்தப் மத்ரஸாவில், மாணவர் சேர்க்கை மற்றும் பாட விபரங்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாவது:-
>>> திருமறை குர்ஆனை ஏற்கனவே பார்த்து ஓதி முடித்தவர்கள் இந்த மத்ரஸாவில் முதற்கட்டமாக இணைத்துக்கொள்ளப்படுவர். புதிதாக ஓதத் துவங்கவுள்ளவர்கள் வருங்காலங்களில் இணைக்கப்படுவர்.
>>> தகுதியுள்ள இரண்டு பெண் ஆசிரியையரைக் கொண்டு, தஜ்வீத் முறையுடன் திருக்குர்ஆன் கற்றுக்கொடுக்கப்படும்.
>>> 15 வயதுக்குட்பட்ட மாணவியரும், 12 வயதுக்குட்பட்ட மாணவர்களும் இந்த மத்ரஸாவில் சேர்க்கை பெறத் தகுதி பெற்றவர்களாவர்.
>>> அன்றாடம் காலை 06.30 மணி முதல் 07.30 மணி வரையிலும், மாலை 05.00 மணி முதல் 06.30 மணி வரையிலும் பாட நேரமாகும். துவக்கமாக மாலை வேளையில் மட்டும் பாடம் நடைபெறும்.
>>> பயிற்சிக்கான மொத்த கால அளவு ஒரு வருடமாகும்.
>>> மாதக் கட்டணமாக ரூபாய் 100 மட்டும் பெறப்படும்.
இவ்வாறு அந்த அறிவிப்பு அமைந்துள்ளது. இந்த மக்தப் மத்ரஸாவில் துவக்கமாக 8 மாணவர்களும், 8 மாணவியரும் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
|