இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் நடத்தப்பட்ட கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், காயல்பட்டினம் நகர்மன்றத்தைக் கலைத்திடுமாறு அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
காயல்பட்டினம் நகரில் பழுதடைந்துள்ள சாலைகளைச் சீரமைக்க நகர்மன்ற துணைத்தலைவர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்குத் தடையாணை பெற்றுள்ள நகர்மன்றத் தலைவரைக் கண்டித்தும், அவ்வழக்கைத் திரும்பப் பெறக் கோரியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், இன்று (18.08.2015 செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணியளவில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில், கட்சியின் நகர தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். கே.எம்.என்.உமர் அப்துல் காதிர் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். என்.டீ.அஹ்மத் ஸலாஹுத்தீன் வரவேற்புரையாற்றினார்.
காயல்பட்டினம் நகர்மன்ற 18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி, 17ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட பொருளாளர் காயல் எஸ்.இ.அமானுல்லாஹ், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் நகர செயலாளர் முஸ்தஃபா கமால், ஆர்.எஸ்.கோபால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பன்னீர் செல்வம், தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் சார்பில் எம்.எச்.எம்.ஸதக்கத்துல்லாஹ், திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் அதன் நகர செயலாளர் மு.த.ஜெய்னுத்தீன், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பில் அதன் பொதுச் செயலாளர் பிரபு சுல்தான் ஆகியோர் கருத்துரையாற்றினர். பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் அதன் கட்கி மண்டல பொறுப்பாளர் மகேஷ் கண்ணன் அனுப்பிய ஆதரவுக் கடிதம் ஆர்ப்பாட்டத்தின்போது வாசிக்கப்பட்டது. முஸ்லிம் லீக் மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ நன்றி கூறினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மகபூப் நிறைவுரையாற்றியதோடு, பின்வருமாறு தீர்மானங்களை முன்மொழிய, அனைவரும் தக்பீர் முழக்கத்துடன் வழிமொழிந்தனர்:-
தீர்மானம் 1 – தடையாணை பெற்ற வழக்கைத் திரும்பப் பெற வலியுறுத்தல்:
கடந்த 8 மாதங்களுக்கு முன் காயல்பட்டினத்தில் பெய்த பெருமழையின் காரணமாக ஏராளமான சாலைகள் மிகவும் பழுதடைந்து, வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பாதசாரிகள் நடக்க இயலாமல் தடுக்கி விழும் காட்சிகள் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன.
எனவே, நகராட்சி சட்டம் 1920 Schdule III பிரிவு 3 (1)இன் படி கூட்டம் நடத்த நகர்மன்ற கவுன்சிலர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று, 27.07.2015 அன்று கூட்டம் நடத்துவதாக ஒப்புக்கொண்டும், 23.07.2015 வரை கவுன்சிலர்களுக்கு கூட்ட அழைப்பு வராததால், நகராட்சி சட்டம் 1920 Schedule III பிரிவு 3 (2)இன் படி, நகர்மன்ற துணைத்தலைவர் தலைமையில் கூட்டம் நடைபெற்று, நகரில் 43 சாலைகள் போடுவதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மக்கள் மகிழ்ந்திருந்த நிலையில், நகராட்சி தலைவி, 27.07.2015 அன்று மனு தாக்கல் செய்து, w.p. 13783 of 2015 மூலம் தடை உத்தரவு பெற்றுவிட்டார். இதனால் சாலை அமைக்கும் பணிகள் அடியோடு தடைபட்டு, மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
எனவே காயல்பட்டினம் நகர மக்களின் நலனைக் கருதி, இந்த வழக்கை உடனடியாகத் திரும்பப் பெற்று, சாலைப் பணிகள் தொடங்க காயல்பட்டினம் நகராட்சி்த் தலைவி வழி ஏற்படுத்தித் தர வேண்டும் என இந்த ஆர்ப்பாட்டம் வலியுறுத்துகிறது.
தீர்மானம் 2 – பயோகேஸ் திட்டத்திற்கு எதிரான வழக்கைத் திரும்பப் பெற வலியுறுத்தல்:
காயல்பட்டினம் நகர்மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், குப்பைகள் கொட்டுவதற்கும், பயோகேஸ் திட்டம் அமைவதற்கும் உரிய பணிகள் துவங்கிய நிலையில், நகர்மன்றத் தலைவரின் தலையீட்டின் பேரில் இருவர் அப்பணிகளுக்கு எதிராக பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து, இடைக்கால தடை பெற்றுள்ளனர். மேலும் நகர்மன்றத்தலைவர், வழக்கு தொடர்ந்தவர்களுக்குச் சாதகமாக பசுமைத் தீர்ப்பாயத்தில் தவறான தகவல்களை வாக்குமூலமாக அளித்துள்ளார். இச்செயல் கண்டனத்திற்கும், வருத்தத்திற்கும் உரியது.
எனவே, தமிழக அரசின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பான விஷயத்தில் அதிக அக்கறை செலுத்தி, உருவாகியுள்ள இடையூறுகளை நீக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு, இடைநிறுத்தம் செய்யப்பட்ட பணிகள் மீண்டும் தொடர்ந்து முழுமை பெற ஆவன செய்யுமாறு இவ்வார்ப்பாட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 3 – நகர்மன்றத்தைக் கலைக்க கோரிக்கை:
மக்கள் நலத்திட்டங்களைச் செய்திட பெரும் தடையாக இருக்கும் ஐ.ஆபிதா ஷேக் தலைமையிலான இந்த நகர்மன்றத்தைக் கலைத்துவிட்டு, தனி அதிகாரி மூலம் எஞ்சிய காலத்தில் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசை இவ்வார்ப்பாட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 4 – நடவடிக்கை இல்லையெனில் நகராட்சி முன் முற்றுகைப் போராட்டம்:
இந்த ஆர்ப்பாட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மேற்கண்ட கோரிக்கைகள் ஏற்கப்படவில்லையெனில், விரைவில் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை - சர்வ கட்சிகள், பொதுநல அமைப்புகளின் ஆதரவோடு நடத்துவது என இவ்வார்ப்பாட்டம் முடிவு செய்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. பின்னர், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரைக் கண்டித்து பின்வருமாறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
காயல்பட்டினம் நகர்மன்ற 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர், 06ஆவது வார்டு உறுப்பினர் ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன், காங்கிரஸ் கட்சி நகர தலைவர் எம்.எம்.கமால், அதன் நிர்வாகி காயல் முத்துவாப்பா, சமத்துவ மக்கள் கட்சியின் நகர செயலாளர் அப்துல் அஜீஸ், நகரப் பிரமுகர் எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா, தாய்லாந்து காயிதேமில்லத் பேரவை அமைப்பாளர் வாவு எம்.எம்.ஷம்சுத்தீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர பொருளாளர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன், அதன் மாவட்ட - நகர நிர்வாகிகள், நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் இவ்வார்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
கஃப்பாரா துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. நிறைவில், முஸ்லிம் லீக் மாநில செயலாளர் காயல் மகபூப் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |