பல்சமய ஆய்வாளர் டாக்டர் அஹ்மத் தீதாத் - கிறிஸ்துவ சமய போதகர் ஜிம்மி ஸ்வாகர்ட் ஆகியோரது விவாத நிகழ்ச்சி 1991இல் நடைபெற்றது. ஆங்கிலத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை, காயல்பட்டினத்தைச் சேர்ந்த மாஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் தமிழாக்கம் செய்து டிவிடி குறுந்தகடாக தயாரித்துள்ளது.
அதன் வெளியீடு மற்றும் அறிமுக நிகழ்ச்சி காயல்பட்டினம் இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் - இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் (ஐ.ஐ.எம்.) அரங்கில் 16.08.2015 ஞாயிற்றுக்கிழமையன்று 17.30 மணியளவில் நடைபெற்றது.
ஹாஃபிழ் தாவூத் ஷாதுலீ கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதின் கத்தீப் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எம்.முஹம்மத் நூஹ் அல்தாஃபீ - டாக்டர் அஹ்மத் தீதாத் மற்றும் ஜிம்மி ஸ்வாகர்ட் குறித்து அறிமுகவுரையாற்றினார்.
குறுந்தகடை தயாரித்த மாஸ் கம்யூனிகேஷன் இயக்குநர் கே.எம்.முஹம்மத் தம்பி, பயனுள்ள தலைப்புகளில் தமது நிறுவனத்தால் இதுவரை தமிழாக்கம் செய்து வெளியிடப்பட்டுள்ள குறுந்தகடுகள் குறித்தும், இனி வெளியிடப்படவுள்ளவை குறித்தும் விளக்கிப் பேசினார்.
மறைந்த எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் (எஸ்.கே.) அவர்களால் பல தலைப்புகளில் தமிழாக்கம் செய்து குறுந்தகடுகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், தற்போது எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ அவர்களால் தமிழாக்கப் பணிகள் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய - அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் தலைவர் எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ புதிய குறுந்தகடு துவக்கப் பிரதிகளை வெளியிட, நகரப் பிரமுகர்களான துணி உமர், எம்.எஸ்.செய்யித் முஹம்மத் ஆகியோர் அவற்றைப் பெற்றுக்கொண்டனர். நன்றியுரை, கஃப்பாரா துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. இந்நிகழ்ச்சியில், இஸ்லாமிய அழைப்புப் பணி ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.
இக்குறுந்தகடு ஒன்றின் விலை 50 ரூபாய் என்றும், காயல்பட்டினம் பிரதான வீதியிலுள்ள ஹனீஃபா கிஃப்ட் கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும், அனைவரும் வாங்குவதோடு - முஸ்லிமல்லாத மக்களுக்கு இஸ்லாமை அறிமுகப்படுத்த இதுபோன்ற குறுந்தகடுகளை வாங்கி அன்பளிப்பாக வழங்கலாம் எனவும் நிகழ்ச்சியின்போது அறிவிக்கப்பட்டது.
ஐஐஎம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |