காயல்பட்டினம் நகராட்சியில் 69வது சுதந்திர தின விழா இன்று காலை நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் தேசிய கொடியேற்றினார். நகர்மன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர் உட்பட பொது மக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.
நகராட்சி சார்பாக நடைபெறும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி இதுவென்றாலும் - 18 உறுப்பினர்களில், நான்கு நகர்மன்ற உறுப்பினர்களே, இன்றைய நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர்.
1வது வார்டு உறுப்பினர் எஸ்.ஐ.அஷ்ரஃப், 6வது வார்டு உறுப்பினர் ஏ.கே.முஹம்மத் முகைதீன், 13வது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் மற்றும் 15வது வார்டு உறுப்பினர் கே.ஜமால் தவிர வேறு எந்த உறுப்பினரும் இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளவில்லை.
காயல்பட்டினம் நகராட்சியில் நடைபெறும் சுதந்திர மற்றும் குடியரசு தின விழாக்களில் உறுப்பினர்கள் கலந்துக்கொள்வது கடந்த சில ஆண்டுகளாக குறைந்து வந்தாலும், நகராட்சி அலுவலர்கள் அனைவரும் கலந்துக்கொண்டு வந்துள்ளனர்.
ஆனால் - இன்றைய நிகழ்ச்சியில் ஆணையர் (COMMISSIONER) காந்திராஜன், நகராட்சி பொறியாளர் (MUNICIPAL ENGINEER) சிவகுமார், மேற்பார்வையாளர் (OVERSEER) சுதாகர், மேலாளர் (MANAGER) அறிவுச்செல்வன், நகர திட்ட ஆய்வாளர் (TOWN PLANNING INSPECTOR) பற்குணன், உதவியாளர் (ASSISTANT) ரவிச்சந்திரன், இளநிலை உதவியாளர் (JUNIOR ASSISTANT) முருகேசன் ஆகியோர் உட்பட மூத்த அலுவலர்கள் எவரும் கலந்துக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சிகளை சுகாதார ஆய்வாளர் (SANITARY INSPECTOR) எஸ். பொன்வேல்ராஜ் ஒருங்கிணைத்திருந்தார். |