காயல் ஆன் தி வெப் இணையதள சேவைகள் - 1998ம் ஆண்டு, டிசம்பர் 20 அன்று துவங்கின. இச்சேவைகள் துவங்கி - இரண்டு ஆண்டுகள் கழித்து - டிசம்பர் 9, 2000 முதல் - தமிழில் செய்திகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.
கடந்த பதினைந்து ஆண்டுகளாக வெளியிடப்படும் செய்திகளை - செய்திகளை தேதி வாரியாக தேட என்ற சேவை
மூலம் காணலாம். இது தவிர, செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல், குறியீடு எண்கள் (ID #) வழி தேடல், காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல் - போன்ற வசதிகள் மூலமும், பழைய செய்திகளை காணலாம்.
மேலும் - இன்றைய தினத்தில், கடந்த ஆண்டுகளில் வெளியான செய்திகளை - வரலாற்றில் இன்று என்ற
பக்கத்தில் காணலாம். இந்த பக்கம், இது காலம் வரை - இந்த நாள், அந்த ஆண்டு என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது.
ஐனவரி 14, 2006 அன்று காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் வெளியான செய்தி [செய்தி எண்: 571]
சனி, ஐனவரி 14, 2006
இக்ராஃ கல்விச் சங்கம் ஓர் அறிமுகம்
செய்தி: மாஸ்டர் கம்ப்யூட்டர்
இக்ராஃ கல்விச் சங்கம் ஓர் அறிமுகம்
அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
வரலாற்றுச் சிறப்புமிக்க நமதூர் காயல்மாநகர பெருமக்கள் பலர் நகரத்தின் முன்னேற்றத்திற்காகவும், கல்விக்காவும் அளப்பரிய பணிகளாற்றி வருகின்றனர். நகரின் கல்விப் பணிகளில் பல்வேறு குழுவினராக செயலாற்றி வருகின்றனர். விரைவில் மகளிர் கல்லூரி அமைய இருப்பது பெண்கள் கல்வித்தரத்தை உயர்த்துவதாக அமையும் இன்ஷா அல்லாஹ் சவுதி அரேபியா, ஜித்தாவை செயல்பாட்டிடமாக கொண்ட மக்கா, மதீனா, யண்பு மற்றும் தபூக் ஆகிய நகரங்களில் வாழும் காயல்வாசிகளின் அமைப்பான காயல் நற்பணி மன்றத்தின் சார்பில் சென்ற 29-12-2005 அன்று ஜலாலியா நிக்காஹ் மஜ்லிஸில் வைத்து நகரின் கல்வி ஆர்வலர்கள், ஜமாத் மற்றும் கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகளின் கூட்டம் KAYAL LITERACY VISION - 2010 எனும் கல்வி முன்னேற்றத்திற்காக திட்டப் பணிகள் குறித்த கலந்தாலோசனைக் கூட்டம் சிறப்போடு நடைபெற்றது. கூட்டத்திற்கு நகரின் பிரமுகர்கள் மற்றும் வெளிநாடு காயல் நல மன்றங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று தங்களின் கருத்துக்களை பதிவு செய்தனர். ஊரின் கல்வி வளர்ச்சிக்காக அனைவரும் இணைந்து செயலாற்றுவதென முடிவு செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ். கூட்டத்தில் கீழ்க்காணும் கருத்தாய்வுகள் நடைபெற்றன.
நம் மாணாக்கர் அனைவரையும் உயர்கல்வி (Degree Holders) படித்தவர்களாக்கும் திட்டத்திற்கு அவர்களின் கல்வி நிலையை 9ம் வகுப்பிலிருந்தே அறிந்து, குறைந்த மதிப்பெண் எடுத்துவரும் மாணாக்கர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து +2 படிப்பு வரை நல்ல மதிப்பெண் எடுத்தவர்களாக்கி கல்லூரியில் சேர்க்க முயற்சிப்பது. அடிப்படையில் துவக்கப்பள்ளியிலிருந்தே நம் கருத்தாய்வை துவங்க வேண்டும்உயர்கல்வி - அரசு பணி படிப்பு (I.A.S., I.P.S., M.E., MBBS.) களுக்கான பயிற்சி வகுப்புகள் (Coaching Classes) பெருநகரங்களில் நடைபெற்று வரும் அளவிற்கு தகுதியான முறையில் நமதூரில் நடத்தவேண்டும்.
மேற்கண்ட இப்படிப்புகளுக்கு தேவையான அனைத்து பாடபுத்தகங்கள் மற்றும் பொது அறிவு புத்தகங்களுடன் கூடிய அறிவுக்களஞ்சிய நூலகம் (Mega Library) ஒன்றை நமதூரில் நிறுவுவது, மாணவ-மாணவியர் இருபாலருக்கும் உதவிடும் வகையில் அமைப்பது. இதற்காக இடத்தை வழங்கிட அனைத்து ஜமாத்தினரையும் கேட்டுக்கொள்வது, அரசு பணிகளுக்கான படிப்புகளில் நமதூரின் மாணாக்கர்களை ஊக்கப்படுத்தி வெற்றிபெற வைப்பது.சன்மார்க்கப் பணிகளில் சேவையாற்றும் உலமாக்கள்-முஅத்தீன்கள் போன்றோரின் குழந்தைகளின் உயர்கல்வி படிப்பிற்கு உதவித்தொகை வழங்குவதில் முன்னுரிமை அளிப்பது.
KAYAL LITERACY VISION - 2010 திட்டத்தின் முக்கிய நோக்கமான நமதூரின் மாணவ-மாணவியர் அனைவரையும் 5 ஆண்டுகளுக்குள் அதாவது 2010க்குள் உயர்கல்வி பயின்றவர்களாக்கும் திட்டப்பணிகளை தொடர் ஆய்வு நடத்தி ஒருங்கிணைத்து செயலாற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வது.நமதூரின் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கிடையில் பரஸ்பர ஒத்துழைப்பு ஏற்படுத்தி ஒட்டுமொத்த நகரின் கல்வி வளர்ச்சிக்காக ஒருங்கிணைத்த பணிகள் மூலமாக காயலில் கல்விப் புரட்சி திட்டத்தை ஏற்பட்டிட முயற்சி மேற்கொள்ளுதல்.
மேற்கூறப்பட்ட கருத்துக்களுக்கு செயல்வடிவம் கொடுத்திடும் வகையில் இக்ராஃ கல்விச் சங்கம் என்ற பெயரில் வெளிநாடு காயல் நல மன்றங்கள் மற்றும் நகரின் கல்வி ஆர்வலர்களின் கூட்டமைப்பாக ஒருங்கிணைத்து செயல்படும் அமைப்பாக நகரில் துவக்குவதென கடந்த 29-10-2005 அன்று ஜலாலியா நிகாஹ் மஜ்லிஸில் வைத்து நடைபெற்ற கூட்டத்தில் ஏகமனதாக முடிவுசெய்யப்பட்டது. மேற்கூறப்பட்ட கருத்துக்களை அனைத்து நலமன்றங்கள் - கல்வி ஆர்வலர்களுக்கு தபால் மற்றும் பொது அறிவிப்பு மூலமாக தெரிவித்து அனைவர்களின் கருத்துக்களையும் பதில் தபால் மூலம் பெறுவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
மேற்கூறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் இக்ராஃ கல்விச் சங்கத்திற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றது. இன்ஷா அல்லாஹ்! வாரம் ஒருமுறை ஞாயிறு பின்னேரம் திங்கள்கிழமை இரவு இஷா தொழுகைக்குப்பின் நெய்னார் தெரு, குத்பா பெரிய பள்ளி வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் இளைஞர் சமூக அமைப்பின் அலுவலகத்தில் நகரின் கல்வி தொடர்புடைய பிரமுகர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகளின் கருத்தாய்வு கூட்டம் நடைபெற்று வருகின்றது. இக்கூட்டங்களுக்கு ஆர்வலர்கள் இம்மடலையே அழைப்பாக ஏற்று வருகை தந்து மேலான ஆலோசனைகளை வழங்கிடுமாறு அன்புடன் அழைக்கிறோம். வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் சேவையாற்றிவரும் காயல் நல மன்றங்களுக்கும் இந்த அறிவிப்பை தபால் மற்றும் இமெயில் மூலம் அனுப்ப இருக்கின்றோம்.
இன்ஷா அல்லாஹ்! வரும் கல்வி ஆண்டிலிருந்தே இக்ராஃ கல்விச் சங்கத்தின் ஒருங்கிணைப்பு பணிகளை துவக்க நாடியுள்ளோம். எனவே பொதுநல மன்றங்களின் நிர்வாகிகள் மற்றும் தனி நபர் கல்வி அறக்கட்டளையினர் இக்ராஃ கல்விச் சங்கத்தின் பணிகளுக்கு ஒத்துழைப்பு தந்து தங்கள் அமைப்பின் ஆலோசனைகளை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்வதோடு காயல் கல்வி ஒருங்கிணைப்பு பணிகளுக்கு முழு ஒத்துழைப்பை வழங்கிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
எதிர்வரும் பிப்ரவரி 3ம் தேதி இக்ராஃ கல்வி சங்கத்தின் நிர்வாக அமைப்பு மற்றும் வரும் கல்வி ஆண்டிற்கான திட்டப்பணிகள் குறித்து முடிவு செய்ய வேண்டியிருப்பதால் வெளிநாடு-வெளியூர் பொது நல மன்றங்கள் மற்றும் கல்வி ஆர்வலர்கள் தங்களின் மேலான கருத்துக்களை 03-02-2006 தேதிக்குள் தெரிவித்து ஊரின் கல்வி வளர்ச்சிக்கு உதவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் நம் முயற்சிக்கு வெற்றியை தந்தருள்வானாக. ஆமீன். வஸ்ஸலாம்.
இப்படிக்கு,
இக்ராஃ கல்விச் சங்கம்,
காயல்பட்டணம்.
|