இந்திய ஹஜ் குழு மூலம் - இவ்வாண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள - விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசு செய்தி குறிப்பு வருமாறு:
ஹஜ் 2016-ல் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ் நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் பெருமக்களிடமிருந்து, சில விதி முறைகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டு மும்பை, இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ் நாடு மாநில ஹஜ் குழு, ஹஜ் விண்ணப்பங்களை வரவேற்கிறது.
சென்னை, எண்.13, மகாத்மா காந்தி சாலை (நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை)யில், ரோஸிடவர், மூன்றாம் தளத்திலுள்ள தமிழ் நாடு மாநில ஹஜ் குழுவின் செயலாளர் மற்றும் செயல் அலுவலரிடமிருந்து ஹஜ் 2016-ற்கான விண்ணப்பப் படிவங்களை 14-01-2016 முதல் பெற்றுக் கொள்ளலாம் அல்லது இவ்விண்ணப்பங்களை hajcommittee.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பப்படிவத்தை நகல்கள் எடுத்தும், உபயோகப்படுத்தலாம்.
2. வாழ்நாளில் ஒருமுறை மட்டும் இந்திய ஹஜ் குழு மூலமாக ஹஜ் பயணத்தை மேற்கொள்ளலாம் என்னும் விதிமுறையை இந்திய ஹஜ் குழு செயற்படுத்தி வருகிறது. 08-02-2016 அன்று அல்லது அதற்கு முன்பு வழங்கப்பட்டு, குறைந்தது 10-03-2017 வரையில் செல்லத்தக்க கணினி வழி பதிவு செய்யக்கூடிய பன்னாட்டு பாஸ்போர்ட்டை விண்ணப்பதாரர்கள் வைத்திருக்கவேண்டும்.
IFS குறியீடு உடைய வங்கியிலுள்ள தங்களின் கணக்கு விவரங்களை மனுதாரர்கள் அளிக்கவேண்டும். ஹஜ் 2016 பற்றிய விவரங்களுக்கு ஹஜ் 2016-ற்கான வழிமுறைகளைப் படிக்கவும் அல்லது இந்திய ஹஜ் குழுவின் இணையதளம்
hajcommittee.gov.in –ஐ அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
3. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், தமிழ் நாடு மாநில ஹஜ் குழுவிற்கு 08-02-2016-ற்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அச்செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.
தகவல்:
இயக்குநர்,
செய்தி மக்கள் தொடர்புத் துறை, சென்னை-9.
[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 2:00 pm / 16.1.2016] |