காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் செயற்குழுக் கூட்டத்தில், நலத்திட்ட உதவிகளுக்கு நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், வரும் மே மாதம் சிற்றுலா செல்லவும் ஏற்பாட்டுக் குழு நியமிக்கப்படடுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அவ்வமைப்பின் சார்பில் அதன் செயலாளர் எம்.செய்யித் அஹ்மத் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
இறையருளால் எமது காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் செயற்குழு கூட்டம் 12.3.2016 சனிக்கிழமையன்று, அமைப்பின் செயற்குழு உறுப்பினர் ஜனாப். அரபி ஹாஜா இல்லத்தில் நடைபெற்றது.
வரவேற்புரை:
ஹாஜி பி.எம்.எஸ்.முஹ்ஸின் கிராஅத் ஓதி கூட்ட நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார். கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பேரவைத் தலைவர் கிலுர் முஹம்மது ஹல்லாஜ் வரவேற்புரையாற்றினார்.
கடந்த கூட்ட நிகழ்வறிக்கை:
அடுத்து, செயலாளர் எம்.செய்யது அஹமது கடந்த செயற்குழுக் கூட்ட நிகழ்வறிக்கையை வாசித்தார்.
வரவு - செலவு கணக்கறிக்கை:
பின்னர், பேரவையின் இதுநாள் வரையிலான வரவு-செலவு கணக்கறிக்கையை பொருளாளர் பி.எஸ்.ஏ.அஹமது கபீர் சமர்ப்பித்தார்.
தீர்மானங்கள்:
அடுத்து, நகர்நலன் குறித்த உறுப்பினர்கள் கருத்துப் பரிமாற்றத்திற்குப் பின், பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
1. ஷிஃபா மருத்துவ விண்ணப்பங்களுக்கு உதவ ரூபாய் 25 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டது.
2. ஷிஃபா ஒருங்கிணைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் KMT மருத்துவமனையின் இரவு நேர அவசர ஆம்புலன்ஸ் சேவைக்கு ( NIGHT EMERGENCY AMBULANCE SERVICE) ரூபாய் 25 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டது.
3. ஷிஃபாவின் வருடாந்திர நிர்வாக செலவுக்கு ரூபாய் 20 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டது.
4. காயல்பட்டினத்தைச் சேர்ந்த பொருளாதாரத்தில் நலிவுற்றுள்ள பயனாளிகளுக்கு சிறுதொழில் உதவி உபகரணங்கள் வழங்குவதற்காக ரூபாய் 5 லட்சம் நிதி கடந்த செயற்குழு கூட்டத்தில் ஒதுக்கப்பட்டிருந்தது. அது சம்பந்தமாக வந்திருந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டன.
5. வரும் மே மாதத்தில் பேரவை சார்பில் சிற்றுலா செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக குழு அமைக்கப்பட்டது.
6. பேரவையின் 8வது பொதுக்குழுக்கூட்டத்தை, இன்ஷா அல்லாஹ் செப்டம்பர் மாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செயலாளர் எம்.செய்யித் அஹ்மத் நன்றி கூற, துணைத் தலைவர் ஹாஜி பி.எஸ்.ஷாஹுல் ஹமீத் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில், பேரவையின் செயற்குழுவினர் மற்றும் சிறப்பழைப்பாளர்கள் கலந்துகொண்டனர். பங்கேற்ற அனைவருக்கும் சுவையான சிற்றுண்டி செயற்குழு உறுப்பினர் ஜனாப். அரபி ஹாஜா அவர்கள் குடும்பத்தினரால் வழங்கி உபசரிக்கப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹாங்காங் பேரவையின் முந்தைய செயற்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|