காயல் ஆன் தி வெப் இணையதள சேவைகள் - 1998ம் ஆண்டு, டிசம்பர் 20 அன்று துவங்கின. இச்சேவைகள் துவங்கி - இரண்டு ஆண்டுகள்
கழித்து - டிசம்பர் 9, 2000 முதல் - தமிழில் செய்திகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.
கடந்த பதினைந்து ஆண்டுகளாக வெளியிடப்படும் செய்திகளை - செய்திகளை தேதி வாரியாக தேட என்ற சேவை
மூலம் காணலாம். இது தவிர, செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல், குறியீடு எண்கள் (ID #) வழி தேடல், காயல்பட்டணம்.காம் இணையதள
பக்கங்கள் தமிழ் வழி தேடல் - போன்ற வசதிகள் மூலமும், பழைய செய்திகளை காணலாம்.
மேலும் - இன்றைய தினத்தில், கடந்த ஆண்டுகளில் வெளியான செய்திகளை - வரலாற்றில் இன்று என்ற
பக்கத்தில் காணலாம். இந்த பக்கம், இது காலம் வரை - இந்த நாள், அந்த ஆண்டு என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது.
மார்ச் 27, 2001 அன்று காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் வெளியான செய்தி [செய்தி எண்: 68]
செவ்வாய், மார்ச் 27, 2001
காயல்பட்டணம் ஊர் கூட்ட தீர்மானங்கள்!
செய்தி: மாஸ்டர் கம்ப்யூட்டர்
காயல்பட்டணம் நகர அனைத்து ஜமாஅத் மற்றும் பொதுநல ஸ்தாபனங்களின் பிரதிநிதிகள் அடங்கிய ஊர் கூட்டம் 27-03-2001 செவ்வாய் இரவு ஜலாலியா நிகாஹ் மஜ்லிஸில் வைத்து அல்ஹாஜ் பீ.மஹ்மூது (எல்.கே.பள்ளிகளின் தாளாளர்) அவர்கள் தலைமையில் நடைபெற்ற போது ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
தீர்மானம் எண் : 1
காயல்பட்டணம் மருத்துவ அறக்கட்டளை மருத்துவமனையில் (கே.எம்.டி) பணிபுரிந்த பொன் செல்வி என்ற பெண்ணின் மரணத்தை தொடர்ந்து உண்மைநிலை என்ன ஏது என்று கூட விசாரித்து அறியாத நிலையில், கே.எம்.டி.நிர்வாகத்தையும், ஒட்டு மொத்த காயல்பட்டணம் முஸ்லிம் சமூகத்தையும் களங்கப்படுத்தும் ஒரே நோக்கோடு பல்வேறு ஊர்களின் பெயர்களில் வால்போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருவது இந்நகர முஸ்லிம்களை கேவலப்படுத்துவதோடு சமூக நல்லிணக்கத்தையும், காலம் காலமாக வளர்க்கப்பட்ட தலித் முஸ்லிம் நல்லுறவையும் சீர்குலைத்து வருகிறது.
எனவே காயல்பட்டணம் முஸ்லிம்களின் வேதனையை வெளிப்படுத்துகின்ற வகையிலும், வேலை பார்க்கும் இடங்களில் பிரச்சனைகள் வந்து விடக்கூடாது என்ற நல்ல நோக்கத்திலும் காயல்பட்டணம் முழுவதும் கட்டுமானப்பணிகள் அனைத்தையும் தற்காலிகமாக நிறுத்தும்படி முஸ்லிம் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து 25-03-2001ல் நடைபெற்ற ஊர் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைக்கும் இந்த கால கெடுவை இன்று முதல் ஒருவார காலம் நீட்டிக்குமாறு நகர மக்களை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது. உருவாகும் சூழ்நிலைக் கேற்ப இந்த கால கெடுவை நீட்டிக்கவோ அல்லது நிறுத்தவோ செய்வது என்று இன்றைய கூட்டம் முடிவு செய்கிறது. எனவே மறு அறிவிப்பு வரும் வரை மேற்கண்ட முடிவை மதிக்குமாறு இந்நகர மக்களை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
இச்சம்பவம் சம்பந்தமாகவும், சுமூக சூழ்நிலையை உருவாக்கும் நோக்கமுடனும் பேசமுன்வருவோரிடம் பேச்சுவார்த்தைகள் நடத்தவோ, முடிவுகள் மேற்கொள்ளவோ ஒரு குழுவை தேர்ந்தெடுக்க கூட்டத்தலைவர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம்.பாஸ{ல் அஷ்ஹப் அவர்களுக்கு இக்கூட்டம் அதிகாரமளிக்கிறது.
தீர்மானம் எண் : 2
நடைபெறும் சம்பவங்கள் தொடர்பாக இந்நகர் மீது சுமத்தப்பட்ட களங்கத்தை துடைத்திடவும், நியாயம் கோரிடவும் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் போன்றவை நடத்த வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்படும் சூழ்நிலையில், அவைகளை அமுல்படுத்த கூட்டு நடவடிக்கை குழுவிற்கு இக்கூட்டம் அனுமதி வழங்கி ஏகமனதாக தீர்மானிக்கிறது. மேற்கண்ட நடவடிக்கைகளை அமுல்படுத்துவதற்குரிய இடத்தையும், காலத்தையும் முடிவு செய்யும் அதிகாரத்தையும் இக்கூட்டம் கூட்டு நடவடிக்கை குழுவிற்கு வழங்கி தீர்மானிக்கிறது.
தீர்மானம் எண் : 3
ஒரு தலைபட்சமாக காயல்பட்டணம் முஸ்லிம் மக்கள் மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில் போஸ்டர் யுத்தங்கள் நடத்தப்படுவதால், உண்மை நிலவரங்களை உலகறியச் செய்யும் வகையில் பத்திரிக்கைகளில் அறிக்கை வெளியிட காயல்பட்டணம் அரசியல் கட்சி நிர்வாகிகளை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் எண் : 4
ஊரில் சுமூகமான சூழ்நிலைகளை உருவாக்கவும், எதிர்காலத்தில் எதிர்பாராத பிரச்சனைகள் ஏற்பட்டால் உடனடியாக செயல்பட்டு தீர்வுகாணவும் அனைத்து ஜமாஅத் மற்றும் பொதுநல ஸ்தாபனங்களில் இருந்து தேர்வு செய்யப்படும் தலா இரு பிரதிநிதிகளைக் கொண்டும் ஆலோசனைகளை வழங்க 20 முக்கிய ஊர் பிரமுகர்களை உள்ளடக்கியும், அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளை இணைத்தும் ஊர்நல குழு என்ற பெயரில் ஒரு அமைப்பை தோற்றுவிப்பதென இக்கூட்டம் ஏக மனதாக தீர்மானிக்கிறது. இந்த அமைப்பை மேற்கண்டவாறு உருவாக்க காயிதே மில்லத் இளைஞர் சமூக அமைப்பை இக்கூட்டம் வேண்டிக் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் எண் : 5
கே.எம்.டி. நிகழ்வு சம்பந்தமாக இதுவரை நிறைவேற்றப்பட்ட மேற்கண்ட தீர்மானங்களை தவிர இதன் தொடர்புடைய ஏனைய விஷயங்களில் முடிவுகள் மேற்கொள்ள அமையவிருக்கும் ஊர்நலக்குழுவிற்கு அனுமதி அளித்து இக்கூட்டம் ஏகமனதாக தீர்மானிக்கிறது.
|