காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ பள்ளியில் இயங்கி வரும் மக்தபத்துல் மக்தூமிய்யாவின் மூன்றாமாண்டு நிறைவு விழா, மகுதூம் ஜும்ஆ பள்ளியின் முத்தவல்லி எம்.ஏ.நூஹ் ஸாஹிப் தலைமையில், நகரப் பிரமுகர்கள் - மக்தப் ஒருங்கிணைப்புப் பணியை மேற்கொண்டு வரும் அன்வாருஸ் ஸுஃப்பா, UNWO நிர்வாகிகள் முன்னிலையில் 27.03.2016. ஞாயிற்றுக்கிழமையன்று 10.00 மணிக்குத் துவங்கி, 13.00 மணி வரை நடைபெற்றது.
கிராஅத்துடன் துவங்கிய இந்நிகழ்ச்சியில், மக்தப் தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.பி.அபூபக்கர் ஷாதுலீ ஃபாஸீ வரவேற்புரையாற்றினார்.
மகுதூம் ஜும்ஆ மஸ்ஜித் கத்தீபும், ஜாவியா அரபிக்கல்லூரி - அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரி ஆகியவற்றின் பேராசிரியருமான மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தீன் காஷிஃபீ, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் மவ்லவீ சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ ஆகியோர் வாழ்த்துரை வழங்க, தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் மேல்மட்டக் குழு உறுப்பினர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.அப்துல்லாஹ் பாக்கவீ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
முன்னதாக, மக்தபத்துல் மக்தூமிய்யாவில் பயிலும் மாணவர்களுக்கான சன்மார்க்கப் போட்டிகள் மகுதூம் ஜும்ஆ பள்ளியிலும், மாணவியருக்கான போட்டிகள் முஹ்ஸனாத் பெண்கள் தைக்காவிலும் நடைபெற்றன.
திருக்குர்ஆன் சிறு அத்தியாயங்கள் மனனப் போட்டி, பேச்சுப் போட்டி என வகுப்பு வாரியாக நடத்தப்பட்ட போட்டிகளில், மக்தப் மாணவ-மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
போட்டிகளில் சிறப்பிடங்களைப் பெற்ற மாணவர்களுக்கும், மக்தப் வகுப்புகளுக்குத் தவறாமல் வருகை தந்தமை, ஃபஜ்ர் உள்ளிட்ட ஜமாஅத் தொழுகைகளில் தொடராகப் பங்கேற்றமை, ஒழுக்கம் உள்ளிட்டவற்றில் சிறப்பான பங்களிப்பைக் கொண்ட மாணவர்களுக்கும் இவ்விழாவின்போது பரிசுகள் வழங்கப்பட்டன. சிறப்பு விருந்தினர் உள்ளிட்ட அவையோர் பரிசுகளை மாணவர்களுக்கு வழங்கினர்.
நடத்தப்பட்ட போட்டிகளில் நடுவர்களாகப் பணியாற்றியோர், மக்தப் ஆசிரியர்களுக்கும் இவ்விழாவில் ஊக்கப் பரிசுகள் வழங்கி கண்ணியப்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சிகள் அனைத்தையும், ‘செம்பருத்தி’ எம்.ஏ.முஹம்மத் இப்றாஹீம் (48) நெறிப்படுத்தினார். மக்தூம் ஜும்ஆ பள்ளியின் இமாமும், ஜாவியா அரபிக் கல்லூரியின் ஹிஃப்ழுப் பிரிவு ஆசிரியருமான மவ்லவீ ஹாஃபிழ் காரீ அப்துல்லாஹ் ஃபாஸீ துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
இவ்விழாவில், மக்தப் மாணவர்களின் பெற்றோர் உள்ளிட்ட பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் குளிர்பானம் வழங்கப்பட்டது.
மக்தபத்துல் மக்தூமிய்யாவின் இரண்டாமாண்டு நிறைவு விழா நிகழ்ச்சிகள் குறித்த தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
மக்தபத்துல் மக்தூமிய்யா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |