காயல் ஆன் தி வெப் இணையதள சேவைகள் - 1998ம் ஆண்டு, டிசம்பர் 20 அன்று துவங்கின. இச்சேவைகள் துவங்கி - இரண்டு ஆண்டுகள்
கழித்து - டிசம்பர் 9, 2000 முதல் - தமிழில் செய்திகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.
கடந்த பதினைந்து ஆண்டுகளாக வெளியிடப்படும் செய்திகளை - செய்திகளை தேதி வாரியாக தேட என்ற சேவை
மூலம் காணலாம். இது தவிர, செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல், குறியீடு எண்கள் (ID #) வழி தேடல், காயல்பட்டணம்.காம் இணையதள
பக்கங்கள் தமிழ் வழி தேடல் - போன்ற வசதிகள் மூலமும், பழைய செய்திகளை காணலாம்.
மேலும் - இன்றைய தினத்தில், கடந்த ஆண்டுகளில் வெளியான செய்திகளை - வரலாற்றில் இன்று என்ற
பக்கத்தில் காணலாம். இந்த பக்கம், இது காலம் வரை - இந்த நாள், அந்த ஆண்டு என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது.
மார்ச் 27, 2002 அன்று காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் வெளியான செய்தி [செய்தி எண்: 240]
புதன், மார்ச் 27, 2002
ஐக்கிய பேரவை தினமலர் மீது நடவடிக்கை கடிதம்!
செய்தி: மாஸ்டர் கம்ப்யூட்டர்
காயல்பட்டணம் நகரின் அனைத்து முஸ்லிம் ஜமாஅத், அனைத்து பொதுநல சங்கங்களின் கூட்டமைப்பான, காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவையின் பொதுக்குழு கூட்டம், அதன் தலைவர் ஹாஜி M.M.உவைஸ் அவர்கள் தலைமையில் கௌரவ ஆலோசகர்கள் ஹாஜி M.S.M.பாதுல் அஷ்ஹப், ஹாஜி B.மஹ்மூது, ஹாஜி L.K.S.அக்பர்ஷா ஆகியோர் முன்னிலையில் எல்.கே.மேல்நிலைப்பள்ளி S.A.சுலைமான் பிளாக்கில் நடைபெற்றது. பொதுச்செயலாளர் ஹாஜி பிரபு சுல்தான் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் ஹாஜி S.A.முஹம்மது அலி வருடாந்திர வரவு, செலவு அறிக்கை சமர்பித்தார்.
காயல்பட்டணம் பேரூராட்சி மன்ற தலைவர் அ.வஹிதா, அ.இ.அ.தி.மு.க. நகரச் செயலாளர் S.A.காதிரி, தி.மு.க.செயலாளர் M.N.சொளுக்கு, ம.தி.மு.க.பொதுக்குழு உறுப்பினர் காயல் S.E.அமானுல்லா, காங்கிரஸ் மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் N.ஷாஜஹான், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் P.M.A.சதக்கத்துல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயலாளர்கள் S.T.கமால், வாவு நாஸர், நகர த.மு.மு.க.தலைவர் M.L.ஷாகுல் ஹமீது, ஐக்கிய விளையாட்டு சங்க செயலாளர் பல்லாக்கு லெப்பை மற்றும் பலர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றபட்ட தீர்மானம் வருமாறு:-
தினமலர் நாளிதழின் 10-2-2002 சென்னை பதிப்பில், “இந்தியாவை துண்டாட துடிக்கும் ஐ.எஸ்.ஐ” என்ற தலைப்பில், இரண்டு பக்கங்களில் ஒரு செய்தி கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் தமிழ் வாசகர்கள் பலரும் இந்த கட்டுரையை படித்துள்ளனர்.
இந்த கட்டுரையில் பல்வேறு இடங்களில் இந்திய முஸ்லீம்களுக்கு எதிரான நஞ்சு தூவப்பட்டுள்ளது. தேச ஒருமைப்பாட்டிற்கும், மதநல்லிணக்கத்திற்கும் உலைவைக்கும் இந்த கட்டுரையில் மதரஸாக்களை கூட விட்டுவைக்கவில்லை.
முஸ்லிம்களின் வேதமாகிய திருக்குர்ஆன், நபிகள் நாயகத்தின் பொன்மொழிகள், தொழுகை அனுஸ்டானங்கள் அரபி மொழியில் இருப்பதால் முஸ்லிம்கள் அனைவரும் அரபி கற்பது கடமையாகிறது. இதற்காக ஒவ்வொரு குக்கிராமங்களிலும் கூட மதரஸாக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் எந்த ஒரு மதரஸாவிலும் ஆயுத பயிற்சியோ, அரசியலோ கற்று கொடுப்பதில்லை. அப்படியிருந்தும் ஒரு சமூகத்திற்கு எதிராக திட்டமிட்டு அவதூறு பரப்பிய தினமலர் மீது நடவடிக்கை எடுப்பது அரசின் கடமையாகும்.
மேலும், விஷமத்தனமான இந்த கட்டுரையில், தேவையில்லாமல் காயல்பட்டணத்தைப்பற்றி கீழ்கண்டவாறு அவதூறு பரப்பப்பட்டுள்ளது.
“நம் தமிழ்நாட்டில் காயல்பட்டணம் தீவிரவாதத்திற்கு பெயர் போன ஊர். இங்கு ஐ.எஸ்.ஐயும் அதிகம்; விடுதலைப்புலிகளும் அதிகம். இங்கெல்லாம் பொதுமக்களோடு மக்களாக கலந்து உலவிவரும் இந்த தீவிரவாதிகள் அரசின் பெரிய, பெரிய பதவிகளில் கூட இருக்கின்றனர். இந்திய அரசியல் கட்சிகளில் குழப்பத்தை ஏற்படுத்தி கட்சிகளை ஒன்றுமில்லாமல் ஆக்க போடப்பட்ட திட்டம் இது. இதையெல்லாம் அரசியல் கட்சிகள் உணர்ந்து கொண்டால் சரி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வாசகங்கள் காயல்பட்டணத்தின் 50,000 மக்களையும் அவமானபடுத்தும் செயலாகும். தேசப்பற்றுள்ள காயல்பட்டணம் முஸ்லிம்கள் மீது மாநில மக்களுக்கு துவேஷம் வளர தூண்டிவிடப்பட்ட சதி ஆகும். இக்கட்டுரை எழுதியவரின் பின்னனி விசாரிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
காயல்பட்டணம் ஊர் தோன்றி 1125 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்நகரில் காவல்நிலையமோ, மதுக்கடைகளோ, திரையரங்கோ இல்லை. எந்த ஒரு காலத்திலும் தீவிரவாதத்தின் கீழ் எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. எவர் ஒருவரும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவும் இல்லை. வெடிகுண்டு சம்பவங்களோ, துப்பாக்கி சூடு போன்ற பயங்கரவாதங்களோ எந்த காலத்திலும் இங்கு நடந்ததில்லை. இங்கு ஐ.எஸ்.ஐ. அதிகமென்று அப்பட்டமான குற்றசாட்டு சொல்லப்பட்டுள்ளது. ஆனால் ஒரு ஐ.எஸ்.ஐ. உளவாளி கூட கைது செய்யப்பட்டதாக ஒரு காலத்திலும் சரித்திரம் இல்லை. இங்குள்ள முஸ்லிம்கள் இந்திய தாய்நாட்டை நேசிப்பவர்கள்.
85 சதவீதம் முஸ்லிம்கள் வாழும் இந்நகரில் விடுதலைபுலிகளும் அதிகம் என்ற வரி இந்த விஷமக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. விடுதலை புலிகளுக்கும், முஸ்லிம்களுக்கும் எந்த காலத்திலும் ஒத்துவராது என்பது சிறுபிள்ளைகள் கூட அறிந்த விஷயம். எனவே தினமலர் கட்டுரை ஆசிரியர் காயல்பட்டணம் முஸ்லிம்களை விடுதலை புலிகள் என்று சொல்கிறாரா அல்லது வேறுயாரை சொல்கிறார் என்;பதை தினமலர் தான் தெளிவுபடுத்த வேண்டும்.
இயற்கையாகவோ, செயற்கையாகவோ மனநிலை பாதிக்கப்பட்டவரை தவிர வேறு எவரும் இந்த வாசகங்களை எழுத வாய்ப்பில்லை. இந்தியாவில் நெருக்கடி நிலை அமுல் செய்யப்பட்ட சமயத்தில் 12,000 வீடுகள் கொண்ட காயல்பட்டணத்தில் வீடு வீடாக சோதனை நடத்தப்பட்டது. சட்ட விரோத பொருட்கள் எதுவும் கைப்பற்றபட்டதாக ஒருசிறு வழக்கு கூட பதியப்படவில்லை. ஆண்களுக்கான 3 அரபி மதரஸாக்களும், பெண்களுக்கான 3 அரபி மதரஸாக்களும் உள்ள இந்நகரில், கோவை வெடிகுண்டு சம்பவத்திற்கு பின் திட்டமிட்டு சோதனைகள் நடத்தப்பட்டது. ஆனால் ஒரு சிறு துரும்பு கூட கைப்பற்றப்படவும் இல்லை ஒரு வழக்கும் பதிவு செய்யப்படவும் இல்லை.
காயல்பட்டணத்தில் ஒருவர் கூட அரசின் எந்த ஒரு பெரிய பதவியிலும் இல்லை. அரசியல் கட்சிகளின் அதிகாரம் நிறைந்த பெரிய பொறுப்புகளிலும் இல்லை. இந்த உண்மைகள் அனைத்தையும் இருட்டடிப்பு செய்துவிட்டு அப்பட்டமான விஷமத்தனத்தை பரப்பி இருப்பது தினமலரின் திட்டமிட்ட சதியாகும் என்பதில் சந்தேகம் இல்லை. மேலும் மத்திய, மாநில காவல்துறை அமைப்புக்கள், புலனாய்வு ஏஜண்ஸிகளையும் தினமலர் களங்கப்படுத்தியுள்ளது.
எனவே தினமலர் நாளிதழின் சர்வதேச பதிப்பு உட்பட அனைத்து பதிப்புகளிலும், காயல்பட்டணத்தை பற்றி எழுதிய வாசகத்திற்கு வருத்தம் தெரிவித்து முக்கியத்துவத்துடன் செய்தி வெளியிட வேண்டும். 31-03-2002க்குள் வெளியிட தவறினால் PRESS COUNCIL OF INDIA, NEW DELHI அவர்களுக்கு புகார் செய்து நடவடிக்கை எடுக்க கோருவது என்றும், அவர்களும் கேட்டுத்தரவில்லை எனில் காயல்பட்டணம் ஊர் மக்கள் சார்பில் தினமலர் நாளிதழின் நிர்வாக இயக்குனர், ஆசிரியர், அச்சிடுபவர், வெளியிடுபவர், கட்டுரை ஆசிரியர் ஆகியோரிடம் தலா ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்வதென்றும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
மேற்கண்ட தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
தங்கள் உண்மையுள்ள
காயல் மகபூப்
ஒருங்கிணைப்பாளர்,
காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவை,
காயல்பட்டணம்.
|