காயல்பட்டினம் தீவுத்தெரு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் தலைமையாசிரியை ஏசுவடியாள் பொன்னம்மாள் பணி நிறைவு பெற்று விடைபெறுவதையொட்டி, அவருக்கு பள்ளியில் வழியனுப்பு விழா, 30.04.2016. சனிக்கிழமையன்று 14.00 மணியளவில் பள்ளி வளாகத்தில், அவரது கணவர் டி.ஆரோன் பொன்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
பள்ளி ஆசிரியையரான மாரியம்மாள் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்த, தனோபாய் நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றினார்.
விடைபெறும் தலைமையாசிரியை, பள்ளியின் 01 முதல் 05ஆம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவியருக்கு அறிவுரை வழங்கினார்.
விடைபெறும் தலைமையாசிரியையின் சேவைகளை நினைவுகூர்ந்து பாராட்டி - பெற்றோர் சார்பில், எஸ்.கே.ஸாலிஹ் உரையாற்றினார்.
பின்னர், வகுப்பு வாரியாக மாணவ-மாணவியரும், முன்னாள் மாணவியரும், ஆசிரியையரும் தலைமையாசிரியைக்கு நினைவுப் பரிசுகள் வழங்கினர்.
தலைமையாசிரியை தன் சார்பாக அனைத்து மாணவ-மாணவியருக்கும் இனிப்புப் பண்டங்கள் அடங்கிய பரிசுப் பொருளை வழங்கினார். ஆசிரியையருக்கும் அவர் பரிசு வழங்கினார்.
இப்பள்ளியில் தலைமையாசிரியையின் சுமார் 10 ஆண்டு கால சேவையைப் பாராட்டி, அவரது குடும்பத்தார் சார்பில் மகள் ஏ.பெல்ஸியா அற்புதமணி, தாயாருக்கு தங்க மோதிரம் அணிவித்து கண்ணியப்படுத்தினார்.
இவ்விழாவில், பள்ளியின் அனைத்து வகுப்பு மாணவ-மாணவியரும், பெற்றோர் பலரும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, தலைமையாசிரியையின் மகன்களான ஏ.இலியா ஞானகுமார், ஏ.ராஜா டேவிட் மற்றும் பள்ளி ஆசிரியையர் இணைந்து செய்திருந்தனர். விழா நிறைவுற்றதும், அனைவரும் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.
தீவுத்தெரு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |