தேர்தல் காலங்களில், பாதுகாப்பு ஏற்பாடுகள் மீது பொதுமக்களுக்கு உறுதியான நம்பிக்கையை அளிக்கவும், சட்டம் ஒழுங்கு பாதிக்கும் வகையில் செயல்படுவோரை எச்சரிக்கும் வகையிலும் காவலர்களால் கொடி அணிவகுப்பு நடத்தப்படுவது வழமை.
அதன்படி - 16.05.2016. அன்று தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி, காயல்பட்டினத்தில் இன்று 17.30 மணியளவில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
திருச்செந்தூர் காவல்துறை கண்காணிப்பாளர் கோபால் தலைமையில் நடைபெற்ற இவ்வணிவகுப்பில், ஆறுமுகநேரி காவல் ஆய்வாளர் பீட்டர் பால்துரை, திருச்செந்தூர் ஆய்வாளர் ஆடிவேல், திருச்செந்தூர் கோயில் காவல் ஆய்வாளர் லட்சுமணன் ஆகியோரும், துணை ஆய்வாளர்களும், மும்பையிலிருந்து வருகை தந்துள்ள துணை இராணுவப் படையைச் சேர்ந்த 120 வீரர்களும் என மொத்தம் 150 காவலர்கள் பங்கேற்றனர்.
காயல்பட்டினம் பேருந்து நிலையத்தில் துவங்கி, பிரதான வீதி, கே.டீ.எம். தெரு, சின்ன - பெரிய நெசவுத் தெருக்கள், கூலக்கடை பஜார் ஆகிய வீதிகளின் வழியே சென்ற காவலர்கள், மீண்டும் பேருந்து நிலையத்தில் அணிவகுப்பை முடித்துக்கொண்டனர்.
அணிவகுப்பு சென்ற பகுதிகளைக் கடந்து சென்ற ஆண்களும், வீடுகளிலிருந்த பெண்களும் காவலர்கள் அணிவகுப்பைப் பார்த்தனர்.
தகவல்:
சாளை முஹம்மத் இப்றாஹீம் ஸூஃபீ
கள உதவி:
அப்துல்லாஹ் ஸாஹிப்
படங்களில் உதவி:
ஹிஜாஸ் மைந்தன் (செய்தியாளர்: காயல்பட்டணம்.காம்)
|