கத்தர் காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் & குடும்ப சங்கம நிகழ்ச்சிகள் - பல்சுவைப் போட்டிகள், பொழுதுபோக்கு அம்சங்களுடன் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அவ்வமைப்பின் செயலாளர் எம்.என்.முஹம்மத் சுலைமான் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-
இறையருளால் எமது கத்தர் காயல் நல மன்றத்தின் 26ஆவது பொதுக்குழு கூட்டம் மற்றும் குடும்ப சங்கம நிகழ்ச்சிகள் கத்தர் பர்வா சிட்டி பூங்காவில் வைத்து கடந்த 08ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று மாலை 03.30 மணி முதல் 20.30 மணி வரை நனி சிறப்புடன் நடைபெற்றது. அல்ஹம்து லில்லாஹ்...!!!
புறப்பாடு:
மன்ற உறுப்பினர்கள் குடும்பத்துடன் தத்தம் வாகனங்களில் நிகழ்விடத்திற்கு வந்தனர். வாகன வசதி இல்லாதோருக்கு தனியாக வாகன வசதி ஹாபிழ் முஹம்மது லெப்பை மூலமாக செய்யப்பட்டு இருந்தது.
வெகு தினங்களுக்கு பின்னர் அனைவரையும் ஒன்றுசேர பார்த்த சந்தோஷத்தில் வந்திருந்ததோர் ஒருவருக்கொருவர் முகமன்கள் கூறி செய்திகள் கருத்துகள் பரிமாறிக்கொண்டிருந்தனர். பின்னர் இளவட்டங்கள் துவங்கிய கால் பந்தாட்டத்தில் பெரியோர்களும் ஐக்கியமாகி தமது இளமையை புதுப்பித்து கொண்டனர்.
பின்னர் மக்ரிப் தொழுகைக்கான நேரம் நெருங்கியதும், அருகிலிருந்த பள்ளிவாசலுக்குச் சென்று அனைவரும் தொழுகையை நிறைவேற்றினர்.
பொதுக்குழுக் கூட்டம்:
நிகழ்வின் துவக்கமாக, மன்ற செயலாளர் M .N . சுலைமான் அவர்கள் கூட்டத்திற்கு வந்திருந்தோரை வரவேற்று, கடந்த 79ஆவது செயற்குழு தீர்மானமான புதிய தலைவராக முஹம்மத் யூனுஸ் அவர்களை தேர்வு செய்ததை எடுத்துரைத்து அதற்கான ஒப்புதலை பெற்றார்.
பின்னர் மன்றத்தின் புதிய தலைவர் முஹம்மது யூனுஸ் தலைமை ஏற்க, மன்றத்தின் மூத்த உறுப்பினர்களான சொளுக்கு மூசா மற்றும் பாஜுல் கரீம் அவர்கள் முன்னிலை வகித்தனர் . மன்ற உறுப்பினர் கத்தீப் மாமுனா லெப்பை அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
சிறப்பு விருந்தினர்கள்:
சிறப்பு விருந்தினர்களாக தாயகத்திலிருந்து, ஜனாப் LT முஹம்மத் மொஹிதீன் மற்றும் ஜனாப் ஷைக்னா அவர்கள் கலந்து சிறப்பித்து தந்தார்கள்.
கூட்ட நிகழ்வுகள்:
புதிய உறுப்பினர் ஹாபிழ் முஹம்மது ரபி அவர்கள் இறைமறையை ஓதி துவக்கி வைத்தார். ‘கவிக்குயில்’ ஃபாயிஸ் அவர்களின் இனிய இன்னிசை பாடலுடன் கூட்டம் ஆரம்பமானது.
தலைமையுரை:
சிறப்பு விருந்தினர்கள் உட்பட - நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்திருந்த அனைவரையும் துவக்கமாக வரவேற்றுப் பேசிய தலைவர் யூனுஸ் அவர்கள் மன்றத்தின் வளர்ச்சி மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து அழகிய முறையில் விவரித்து கூறினார். மென்மேலும் நம் சேவைகள் தொடர இன்னும் அதிக ஆர்வத்துடன் செயல்பட வேண்டும் என வினவினார்.
நம் மன்றத்தின் சார்பில் இதுநாள் வரை தொடர்ந்து வந்த பள்ளி மாணவ மானவியர்க்கான இலவச சீருடை திட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் காலத்தின் கட்டாயத்தை கருதி, இன்ஷா அல்லாஹ் நடப்பாண்டு முதல் இத்திட்டத்தை, இக்ரா மற்றும் பிற காயல் நல மன்றங்களுடன் ஒன்றிணைந்து செயலாற்றுவத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
மேலும், நம் மன்றத்தால் நிறைவேறிய ‘மாடித்தோட்டம்’ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மக்கள் மனதில் மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது என்ற அது மிகையாகாது என்று அவர் விளக்கிப் பேசினார்.
இக்கூட்டமும், ஒன்றுகூடல் நிகழ்ச்சியும் சிறப்புற அமைந்திட அனைத்து ஏற்பாடுகளையும் செய்த அனைவருக்கும் மன்ற நிர்வாகத்தின் சார்பில் நன்றி தெரிவித்து தனதுரையை நிறைவு செய்தார்.
புதிய உறுப்பினர்கள் அறிமுகம்:
அவர்களது உரைக்கு பின் புதிய உறுப்பினர்கள் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டனர்.
திருமண அழைப்பு:
இம்மாதம் திருமணம் செய்யவுள்ள மன்ற உறுப்பினர் நூஹு சாஹிப் அவர்களுக்கு மன்றத்தின் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
சிறப்பு விருந்தினர் உரை:
தாயகத்திலிருந்து கத்தார் வந்துள்ள ஜனாப் LT முஹம்மத் மொஹிதீன்அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். அவரது உரைசுருக்கம், குறைந்த உறுப்பினகள் எண்ணிக்கையுடன் ஆரம்பம்மான இந்த மன்றம் இன்று கணிசமான உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு நிறைவான சேவைகளை ஆற்றி வருவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.அதிலும் குறிப்பாக, நம் நகரின் அத்தியவாசிய தேவையை கருத்திற்கொண்டு கான்சர் விழிப்புணர்வு நிகழ்ச்சி, இலவச பள்ளி சீருடை திட்டம் மற்றும் சமீபத்தில் நடைபெற்ற மாடிதோட்டம் போன்ற நிகழ்சிகள் சமுதாயத்தின் மீதுள்ள அக்கறையை பறைசாற்றுகிறது. உங்களது பனி மென்மேலும் சிறக்க மனமார்ந்த துஆக்களுடன்கூடிய வாழ்த்துக்கள்.
பொருளாளர் உரை:
மன்றப் பொருளாளர் அஸ்லம், மன்றத்தின் இதுநாள் வரையிலான வரவு-செலவு கணக்கறிக்கையைத் தாக்கல் செய்து, கூட்டத்தின் ஒப்புதலைப் பெற்றார்.
மன்ற உறுப்பினர்கள் தமது நிலுவைச் சந்தா தொகையை விரைந்து செலுத்திடுமாறும், இயன்றளவு நிலுவையின்றி பார்த்துக்கொள்ளுமாறும், தற்காலத் தேவைகளை அனுசரித்து - நகர்நலப் பணிகளை நிறைவாகச் செய்திடுவதற்காக - தமது சந்தா தொகைகளை கனிசமாக உயர்த்தி வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
நன்றியுரை:
மூத்த உறுப்பினர் சொளுக்கு செய்யது மூசா அவர்கள் நன்றியுரையாற்றினார். இந்த விடுமுறை நாளில் தம் சொந்த அலுவல்களையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, நகர் நலனில் அக்கறைகொண்டு இந்நிகழ்வுகள் அனைத்திலும் கலந்து சிறப்பித்த அனைத்து உறுப்பினர்களுக்கும், அவர்கள்தம் குடும்பத்தினருக்கும் மன்றத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாக அவர் கூறினார்.
மேலும், அனைத்து நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளையும் சிறப்பான முறையில் நடந்திய ஒருங்கிணைப்பாளர்கள் முஹம்மத் முஹ்யித்தீன், பொக்கு ஹல்லாஜ் மற்றும் சொளுக்கு முஹம்மது இப்ராஹிம் உள்ளிட்ட அங்கத்தினர் அனைவருக்கும் மன்ற நிர்வாகத்தின் சார்பில் நன்றியை தெரிவித்தார்.
நிறைவாக, ஹாஃபிழ் நைனா முஹம்மத் அவர்களது துஆவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது.
ஆண்களுக்கான வினாடி-வினா போட்டி:
பிறகு ஆண்களுக்கான வினாடி-வினா போட்டி நடைபெற்றது. குர்ஆன், இஸ்லாம், அறிவியல், அரசியல் மற்றும் தமிழ்நாடு ஆகிய அம்சங்களை உள்ளடக்கி கேள்விகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. துவக்கமாக ஓரணிக்கு 6 பேர் வீதம், அனைவரும் 6 அணியினராகப் பங்கேற்றனர்.
இறுதிப்போட்டியில், செய்யது மொஹிதீன் அவர்களது அணி முதற்பரிசையும், முஹம்மத் யூனுஸ் அவர்களின் அணி இரண்டாவது பரிசையும் பெற்றது. இந்நிகழ்வை மன்றத்தின் கௌரவதலைவர் பாஜுல் கரீம் மற்றும் ஹாபிழ் முஹம்மது சதகதுல்லாஹ் ஆகியோர் இப்போட்டியை அனைவரும் ரசிக்கும் வகையில் உற்சாகமாக வழிநடத்தினர். மகளிருக்கான வினாடி-வினா போட்டி தனியாக நடைபெற்றது.
பரிசளிப்பு:
குழந்தைகளுக்கும், போட்டிகளில் வென்றோருக்கும் பரிசளிப்பு விழா, 20.00 மணியளவில் நடைபெற்றது. கௌரவதலைவர் பாஜுல் கரீம் அவர்கள் பரிசளிப்பு விழாவை நெறிப்படுத்தினார்.
இனிய நினைவலைகளுடன் மன்ற உறுப்பினர்கள் பிரியாவிடைபெற்றுச் சென்றனர். எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்துலில்லாஹ்!
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
எஸ்.கே.ஸாலிஹ்
(பிரதிநிதி - கத்தர் கா.ந.மன்றம்)
படங்கள்:
ஹுஸைன் ஹல்லாஜ்
(செயற்குழு உறுப்பினர் - கத்தர் கா.ந.மன்றம்)
கத்தர் காயல் நல மன்றத்தின் முந்தைய பொதுக்குழு & குடும்ப சங்கம நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கத்தர் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|