பழுதுகள் சரிசெய்யப்பட்டு, புதுப்பித்துக் கட்டப்பட்டுள்ள மேலப்பள்ளியின் திறப்பு விழாவில், திரளானோர் பங்கேற்றுள்ளனர். விரிவான விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் புறவழிச் சாலையையொட்டி, சீதக்காதி நகரின் துவக்கத்தில் அமைந்துள்ளது மஸ்ஜித் ஷெய்கு ஸலாஹுத்தீன் எனும் மேலப்பள்ளிவாசல். புதுப்பள்ளி நிர்வாகத்தால் இப்பள்ளிவாசல் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
நாளுக்கு நாள் கட்டிடம் பழமையடைந்து, வெளிப்பள்ளியின் கான்க்ரீட் மேற்கூரை சிதிலமடைந்து, எந்நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் இருந்ததால், விரைவாகப் புதுப்பித்துக் கட்ட வேண்டிய அவசிய நிலை இப்பள்ளி கட்டிடத்திற்கு ஏற்பட்டது.
இதனைக் கருத்திற்கொண்டு, கீழக்கரை தொழிலதிபர் ஸலாஹுத்தீன் உறுதுணையுடன் - நகரப் பிரமுகர் லேண்ட்மார்க் ராவன்னா அபுல்ஹஸன் முயற்சியில், இப்பள்ளிவாசல் தற்போது புதுப்பித்துக் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
புதிய பள்ளிவாசல் திறப்பு விழா, 08.05.2016. ஞாயிற்றுக்கிழமையன்று 18.30 மணியளவில் நடைபெற்றது. மார்க்க அறிஞர்கள், நகரப் பிரமுகர்கள் முன்னிலையில், காயல்பட்டினம் பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும் / முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரிகளின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ தம் கைகளால் பள்ளியின் கதவைத் திறந்துவைத்தார்.
உட்சென்ற பின்னர், அனைவரும் இணைந்து ‘தஹிய்யத்துல் மஸ்ஜித்’ எனும் பள்ளிவாசலுக்கான காணிக்கைத் தொழுகையைத் தொழுதனர். பின்னர், லேண்ட்மார்க் ராவன்னா அபுல்ஹஸன் மஃரிப் தொழுகைக்கான அதானை ஒலிக்க, ஜமாஅத்தாக தொழுகை நடத்தப்பட்டது.
தொடர்ந்து திறப்பு விழா மேடை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. புதுப்பள்ளி & மேலப்பள்ளியின் தலைவர் எஸ்.எம்.உஸைர் தலைமை தாங்கினார். நகரப் பிரமுகர் எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ, புதுப்பள்ளி & மேலப்பள்ளி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
கீழக்கரையைச் சார்ந்த ஏ.ஏம்.ஸாலிஹ் சேட் பாக்கவீ கிராஅத் ஓதினார். லேண்ட்மார்க் ராவன்னா அபுல்ஹஸன் வரவேற்புரையாற்றினார்.
பள்ளியின் புனரமைப்புப் பணிக்கு உதவியாக இருந்த 16ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் எஸ்.ஏ.சாமு ஷிஹாபுத்தீன், ஏ.எஸ்.அஷ்ரஃப், ஏ.எம்.முஹம்மத் ராஃபிக், எம்.எஸ்.ஸதக்கத்துல்லாஹ், ஜெ.ஏ.லரீஃப் உள்ளிட்டோர் இதன்போது பாராட்டப்பட்டனர்.
புதுப்பள்ளியின் பொருளாளர் அமீர் அப்துல்லாஹ், மஹான் ஷெய்கு ஸலாஹுத்தீன் வலிய்யுல்லாஹ் புகழ்பாடல் பாடினார்.
பள்ளிவாசலின் மகத்துவங்கள், பள்ளிவாசலைப் புதிதாகக் கட்டுவது & புதுப்பித்துக் கட்டுவதன் சிறப்புகள் குறித்தும், மஹான் ஷெய்கு ஸலாஹுத்தீன் வலிய்யுல்லாஹ் அவர்களின் வாழ்க்கைச் சரிதம் குறித்தும், காயல்பட்டினம் பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும் / முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரிகளின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ, ‘அல்அஸ்ரார்’ ஆன்மிக மாத இதழின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் டீ.எஸ்.ஏ.செய்யித் அபூதாஹிர் மஹ்ழரீ ஃபாழில் ஜமாலீ ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
அவையோர் அனைவருக்கும் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டது. புதுப்பள்ளி ஜமாஅத் நிர்வாகக் குழு உறுப்பினர் ஜெ.ஏ.லரீஃப் நன்றி கூற, மேலப்பள்ளி இமாம் மவ்லவீ ஷெய்கு அப்துல் காதிர் ஸூஃபீ துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
அனைத்து நிகழ்ச்சிகளிலும், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் உட்பட திரளானோர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கி உபசரிக்கப்பட்டது.
படங்கள்:
இப்னு ஆப்தீன்
மேலப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|