இம்மாதம் 28ஆம் நாளன்று ஹாங்காங் பேரவையின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம், ஹாங்காங் கவ்லூன் பள்ளி சமுதாயக் கூடத்தில் நடைபெறுமென்றும், 15ஆம் நாளன்று இன்பச் சிற்றுலா செல்லவுள்ளதால் அனைத்து காயலர்களும் பங்கேற்குமாறும் காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் செயற்குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அவ்வமைப்பின் செயலாளர் எம்.செய்யித் அஹ்மத் வெளியிட்டுள்ள அறிக்கை:-
இறையருளால் எமது காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் செயற்குழு கூட்டம் 30.4.2016 சனிக்கிழமையன்று, அமைப்பின் தலைவர் ஜனாப். ஏ.டபிள்யூ. கிலுர் முஹம்மது ஹல்லாஜ் இல்லத்தில் நடைபெற்றது.
வரவேற்புரை:
ஜனாப். தைக்கா உபைதுல்லா கிராஅத் ஓதி கூட்ட நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார். கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பேரவைத் தலைவர் கிலுர் முஹம்மது ஹல்லாஜ் வரவேற்புரையாற்றினார்.
கடந்த கூட்ட நிகழ்வறிக்கை:
அடுத்து, செயலாளர் எம்.செய்யது அஹமது கடந்த செயற்குழுக் கூட்ட நிகழ்வறிக்கையை வாசித்தார்.
வரவு - செலவு கணக்கறிக்கை:
பின்னர், பேரவையின் இதுநாள் வரையிலான வரவு-செலவு கணக்கறிக்கையை பொருளாளர் பி.எஸ்.ஏ.அஹமது கபீர் சமர்ப்பித்தார்.
தீர்மானங்கள்:
அடுத்து, நகர்நலன் குறித்த உறுப்பினர்கள் கருத்துப் பரிமாற்றத்திற்குப் பின், பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
1. இக்ராவின் வருடாந்திர நிர்வாக செலவுக்கு ரூபாய் 20 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டது.
2. மே 15 வரும் ஞாயிற்றுகிழமை பேரவை சார்பில் Tai Tong Organic Eco Park ற்கு சிற்றுலா செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
3. பேரவையின் 8வது பொதுக்குழுக்கூட்டத்தை, இன்ஷாஅல்லாஹ் இம்மாதம் 28ம் நாள் சனிக்கிழமை இரவு மஃரிப் தொழுகைக்குப் பின், ஹாங்காங் கவ்லூன் பள்ளி சமுதாயக் கூடத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
நகர்நலன் குறித்த பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ள இக்கூட்டத்தில், நமதமைப்பின் அன்பு உறுப்பினர்கள் மற்றும் ஹாங்காங் - சீனா வாழ் காயலர்கள் தயவுகூர்ந்து உங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி கலந்துகொள்ள வருமாறு அகமகிழ அன்புடன் அழைக்கின்றோம்.
அமைப்பின் சார்பில் அனுப்பப்பட்ட தகவல் கிடைக்கப் பெறாதவர்களும், வந்த தகவல்களை இதுவரை பார்க்காதவர்களும், இதையே அன்பான அழைப்பாக ஏற்று, தாங்களும் வருவதோடு, நமதூரின் - தங்களுக்கறிமுகமான அனைத்து சகோதரர்களையும் அவசியம் குறித்த நேரத்தில் பங்கேற்கச் செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
எல்லாம்வல்ல அல்லாஹ் நமது நற்காரியங்கள் அனைத்தையும் ஏற்று, இம்மை - மறுமையில் நிறைவான நற்கூலிகளை நமக்கு வழங்கியருள்வானாக. கூட்டத்தின் இறுதியில் சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயலாளர் எம்.செய்யது அஹமது நன்றி கூற, ஹாஃபிழ் ஏ. எல். இர்ஷாத் அலி துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில், பேரவையின் செயற்குழுவினர் மற்றும் சிறப்பழைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
பங்கேற்ற அனைவருக்கும் சுவையான சிற்றுண்டி தலைவர் ஜனாப். ஏ.டபிள்யூ. கிலுர் முஹம்மது ஹல்லாஜ் அவர்கள் குடும்பத்தினரால் வழங்கி உபசரிக்கப்பட்டது. குழுப்படம் பதிவு செய்த பின் அனைவரும் கலைந்து சென்றனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹாங்காங் பேரவையின் முந்தைய செயற்குழு குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ஹாங்காங் பேரவை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|