காயல்பட்டினம் பெரிய நெசவுத் தெரு வழியே, இன்று 23.00 மணியளவில் கடந்து சென்ற - குளிர்பதன வசதி கொண்ட பால் வினியோக வாகனத்தின் ஓட்டுநர், எதிரே சரிந்து வளர்ந்திருந்த வேப்ப மரத்தின் கிளையைக் கவனிக்காமல் கடந்தபோது, வாகனத்தின் மேற்பகுதி மரத்தின் மீது மோதி, மரம் தரையிலிருந்து 5 அடி உயரத்தில் முறிந்து, அந்த வாகனத்துடனேயே சுமார் 20 அடி தொலைவுக்கு இழுத்துச் செல்லப்பட்டு அருகிலிருந்த வீட்டின் மீது விழுந்தது. இதன் காரணமாக, அந்த வீட்டின் மின் வினியோகக் கம்பிவடம் துண்டிக்கப்பட்டது.
தகவலறிந்த பொதுமக்கள், அப்பகுதியின் நகர்மன்ற உறுப்பினரும் - நகர்மன்றத் துணைத் தலைவருமான எஸ்.எம்.முகைதீன் உதவியுடன், மின்சார வாரிய அலுவலகத்தைத் தொடர்புகொண்டதையடுத்து, உடனடியாக விரைந்து வந்த மின் வாரிய ஊழியர்கள், சேதமுற்ற கம்பிவடத்தின் மின் வினியோகத்தைத் துண்டித்துச் சென்றனர்.
பின்னர், இயந்திர அறுவைக் கருவியைக் கொண்டு, சாலையில் படர்ந்து விழுந்திருந்த மரத்தின் கிளைகள் கொஞ்சங்கொஞ்சமாக வெட்டியகற்றப்பட்டு, போக்குவரத்திற்கு வசதி செய்யப்பட்டது.
காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்களான ரெங்கநாதன் என்ற சுகு, எஸ்.எம்.சாமு ஷிஹாபுத்தீன், இ.எம்.சாமி ஆகியோரும், அப்பகுதி பொதுமக்களும் இதன்போது திரண்டிருந்தனர்.
தகவல்:
‘பாட்டா’ சதக் உமர்
|