இன்று வெளியான பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு முடிவுகளின் படி, காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி மாணவி கே.ஃபரீதா நகரளவில் முதலிடமும், தூத்துக்குடி மாவட்ட அளவில் மூன்றாமிடமும் பெற்றுள்ளார். இதற்காக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் அவருக்கு விருது வழங்கிப் பாராட்டியிருக்கிறார். விரிவான விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் முஹ்யித்தீன் தெருவைச் சேர்ந்த மாணவர் கே.ஃபரீதா. இவரது தந்தை பெயர் ஏ.எச்.கலீல். சஊதி அரபிய்யாவில் பணியாற்றுகிறார். தாயார் ஜெ.ஹவ்வா - இல்லத்தரசி.
மாணவி கே.ஃபரீதா, காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியில் பயின்று, 10ஆம் வகுப்பு தேர்வெழுதியிருந்தார். இன்று வெளியான தேர்வு முடிவுகளின் படி, அவர் 500க்கு 496 மதிப்பெண்கள் பெற்று, காயல்பட்டினம் நகரளவில் முதலிடமும், தூத்துக்குடி மாவட்ட அளவில் மூன்றாமிடமும், தமிழ்நாடு மாநில அளவில் நான்காமிடமும் பெற்று சாதனை புரிந்துள்ளார்.
பாடவாரியாக அவரது மதிப்பெண்கள் விபரம்:-
தமிழ் 99
ஆங்கிலம் 99
கணிதம் 100
அறிவியல் 99
சமூக அறிவியல் 99
மொத்ததம் - 500க்கு 496 மதிப்பெண்கள்.
தனது சாதனை குறித்து, மாணவி கே.ஃபரீதா கூறியதாவது:-
எனது தந்தையின் தந்தை (பாட்டனார்) டாக்டர் அபுல்ஹஸன் அவர்கள், காயல்பட்டினத்தின் மூத்த மருத்துவர். தற்போது 77 வயதை அடைந்த நிலையிலும், இறையருளால் அவர் மருத்துவ சேவையாற்றி வருகிறார்.
சுகவீனமுற்ற நிலையில் நள்ளிரவில் தன்னைத் தேடி வீட்டுக்கு எந்த நோயாளிகள் வந்தாலும், இன்முகத்துடன் மருத்துவ சேவையாற்றி வருகிறார். அவர்களது இந்தப் பண்பு என்னை மிகவும் கவர்ந்ததால், “நானும் மருத்துவராகி, பாட்டனாரைப் போல சேவை செய்ய வேண்டும்” என்ற எண்ணம் என் ஆழ்மனதில் பதிந்துவிட்டது.
எனது ஆரம்பக் கல்வி முதல் இன்று பத்தாம் வகுப்பு வரையிலும் பெரும்பாலும் முதல் மதிப்பெண்ணும், எப்போதாவது இரண்டாவது மதிப்பெண்ணும் பெறுவது என் வழமை.
இன்று தூத்துக்குடி மாவட்ட அளவில் மூன்றாமிடம் பெற்றமைக்காக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு. ம.ரவிக்குமார் என்னையும், மாவட்ட அளவில் முதல் மூன்றிடங்களைப் பெற்ற மாணவ-மாணவியரையும் இன்று காலையில் அழைத்து, வாழ்த்திப் பாராட்டி, விருது வழங்கி கவுரவித்தார்.
இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளதோடு, இன்னும் கடுமையாக உழைத்துப் படிக்க வேண்டும் என்ற உந்துதலையும் ஏற்படுத்தியிருக்கிறது.
நல்ல மதிப்பெண்ணைத் தொடர்ந்து பெற வேண்டும் என்ற எண்ணம் எனக்கு என்றுமே உண்டு என்றாலும், மாவட்ட அளவில் மூன்றாமிடம் பெறுவேன் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை.
எனது இச்சாதனைக்கு, என் பள்ளியின் தலைமையாசிரியை திருமதி. மீனா சேகர், வகுப்பாசிரியை திருமதி. அந்தோணியம்மாள் ஆகியோர் பள்ளியிலும், எனது தாய் வழி பாட்டனார் மரியாதைக்குரிய ஜலால் ஹாஜியார், என் அன்புத் தாயார் ஜெ.ஹவ்வா ஆகியோர் என் வீட்டில் எனக்குத் தொடர்ந்து அளித்து வந்த அரவணைப்பும், ஆதரவும், ஊக்கமுமே என்னை இன்று சாதனையாளராக்கியிருக்கிறது.
இதற்காக, எல்லாம்வல்ல இறைவனுக்கும், ஊக்கமளித்த இவர்கள் யாவருக்கும் எனது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேல்நிலைக் கல்வியில் முதல் பாடப்பிரிவைத் தேர்ந்தெடுத்துப் பயின்று, ப்ளஸ் 2 தேர்வில் சிறந்த மதிப்பெண்ணைப் பெற்று, மெரிட்டில் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து பயின்று, சிறந்த மருத்துவராகி, என்னாலியன்ற சேவைகளை எல்லா மக்களுக்கும் - குறிப்பாக ஏழை - எளிய மக்களுக்கு செய்ய வேண்டும் என்ற ஆசை எனக்குள்ளது. இதற்கு இறைவன் அருள் புரிய நீங்கள் யாவரும் எனக்காகப் பிரார்த்திக்க வேண்டுகிறேன்.
இவ்வாறு மாணவி கே.ஃபரீதா கூறினார்.
தூத்துக்குடி மாவட்டத்தின் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தூத்துக்குடி மாவட்ட மாணவ-மாணவியர் 96.93 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் 5ஆவது இடம் பிடித்துள்ளது! மாவட்டஆட்சித்தலைவர் எம்.ரவிகுமார் தகவல்!!
மாநில பள்ளிக்கல்வித்துறையின் மூலம் கடந்த 15.03.2016 முதல்’ 13.04.2016 வரை நடைபெற்ற 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவானது இன்று காலை வெளியானதை தொடா;ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதி மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பெற்ற 34 மாணவ-மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.ரவி குமார்.இ.ஆ.ப.ரூபவ் அவர்கள் பாராட்டு மற்றும் நினைவு பரிசு வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் 292 பள்ளிகளில் 149 தனியார் பள்ளிகளிலும் 84 அரசு பள்ளிகளிலும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய மாணவ-மாணவியரின் எண்ணிக்கை 25,347 இதில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவியரின் எண்ணிக்கை 24,569. தேர்ச்சி சதவீதம் 96.93 ஆகும். கடந்த 2014 மாநில அளவில் 8ஆவது இடமும், 2015 மாநில அளவில் 7ஆவது இடமும், இந்த வருடம் 5ஆவது இடம் பெற்றுள்ளது. தற்போது (2016) முதல் மூன்று இடங்களை 34 மாணவியர் பெற்றுள்ளனர். தூத்துக்குடி மாவட்ட அளவில் முதல் இடம் (498 மதிப்பெண்) மாநில அளவில் 2ஆவது இடம் 4 மாணவ-மாணவியரும், 2ஆவது இடம் (497 மதிப்பெண்) - மாநில அளவில் 3ஆவது இடம் 13 மாணவ-மாணவியரும், 3வது இடம் (496 மதிப்பெண்) 17 மாணவ- மாணவியரும் பெற்றுள்ளனர்.
அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவ - மாணவியருள் 494 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தை கோவில்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்ற என்.சண்முகப்பிரியா பெற்றுள்ளார்.
இரண்டாம் இடத்தை 493 மதிப்பெண்கள் பெற்று வில்லிசேரி அரசு மேல்நிலைப்பள்ளி சர்மிளா பெற்றுள்ளார். மூன்றாம் இடத்தை 491 மதிப்பெண்கள் பெற்று கோவில்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி அனுபா தீபாஸ்ரீ பெற்றுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் 1,832 மாணவ-மாணவியர் குறிப்பிட்ட பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மாணவ-மாணவியர், ஆசிரியர்கள் உயர்ந்த இடத்தைப் பெற கடுமையாக உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |