தமிழக சட்டமன்றத் தேர்தல் 16.05.2016. அன்று நடைபெற்றது. இதில், கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியில், திமுக கூட்டணி சார்பில் - அதில் அங்கம் வகிக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளரும், காயல்பட்டினத்தைச் சேர்ந்தவருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் போட்டியிட்டு, வெற்றிபெற்றார்.
அவரை வாழ்த்தி, ஐக்கிய அரபு அமீரகம் - துபை காயல் நல மன்றத் தலைவர் ஜெ.எஸ்.ஏ.புகாரீ வெளியிட்டுள்ள அறிக்கை:-
நடைபெற்று முடிந்த 2016 சட்டப் பேரவைக்கான பொதுத்தேர்தலில் கடையநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பொதுச் செயலாளரும், நமதூரைச் சார்ந்தவருமான சகோதரர் KAM அபூபக்கர் அவர்களை வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
சற்றொப்ப 35 ஆண்டுகளுக்கு முன்னரும், அதன்பிறகு, இரண்டாவது முறையாக 25 ஆண்டுகளுக்கு முன்னரும் வரவிருந்த இந்த வாய்ப்பு நமதூருக்கு வராமலே போயின.
நீண்ட வருடங்களுக்குப்பிறகு நமதூருக்கு கிடைத்த அரிய வாய்ப்பாகவும், சமுதாயத்திற்கு கிடைத்த சிறந்த பிரதிநிதித்துவமாகவும் இவருடைய வெற்றியை நாம் கருதுகிறோம். மேலும், நமதூரின் ‘முதல் சட்டமன்ற உறுப்பினர்’ என்ற சிறப்புப் பெயரையும் இவர் பெற்றிருப்பது இன்னும் மகிழ்ச்சியை தருகின்றது.
மதிப்பிற்குரிய சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் KAM அபூபக்கர் அவர்கள், தம்மை தேர்ந்தெடுத்த கடையநல்லூர் தொகுதி மக்களுக்காகவும், நமதூர் மக்களுக்காகவும், சிறுபான்மை சமூக மக்களுக்காகவும் சட்டமன்றத்தில் உரிமைக்குரல் எழுப்பவும், இறைவன் அளித்த இந்த அமானிதப் பொறுப்பை தம்முடைய பதவிக்காலங்களில் செவ்வனே நிறைவேற்றவும் வல்லோனாம் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
T.S.A.யஹ்யா முஹ்யித்தீன்
(செயலர், துபை கா.ந.மன்றம்)
ஹாங்காங் காயிதேமில்லத் பேரவை சார்பில் அதன் செயலர் ஹாஃபிழ் வி.எம்.டீ.முஹம்மத் ஹஸன் வெளியிட்டுள்ள அறிக்கை:-
அஸ்ஸலாமு அலைக்கும். அனைத்துப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! ஸலவாத்தும், ஸலாமும் சாந்த நபிகள் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது உண்டாவதாக!
நம் சமுதாயத்தின் கண்ணியத்தை உயர்வுபடுத்த வல்ல ரஹ்மான் நமது பாசத்திற்கினிய பொதுச் செயலாளரை வெற்றிபெறச் செய்துள்ளான், அல்ஹம்துலில்லாஹ்!
நண்பர் அபூபக்கர் ஸாஹிபு அவர்கள் தனது இளமைப் பருவத்தையும், வாழ்வையும், சமுதாய - சமயப் பணிகளுக்காகவே அர்ப்பணித்த தூயவர். சுயநலமற்ற பொதுநல ஊழியர். இறைப் பொருத்தத்தை மட்டுமே நாடி - கல்வி, மருத்துவம், சுகாதாரம், வாழ்வியல், சமய நல்லிணக்கப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். அரசியல் பயணத்தில் தாய்ச்சபையை மட்டுமே இதயத்தில் ஏற்றிக்கொண்ட நல்லவர். அவரது பணி தொடர வாழ்த்துவோம், வல்லோனை வேண்டுவோம்!
நமது ஒட்டுமொத்த சமுதாயத்தின் அடையாளமாக அவர் தமிழக சட்டமன்றத்தில் சிறப்புற பணியாற்றுவார். நம் தாய்ச்சபையின் தனித்துவமிக்க ஏணி சின்னத்தில் - தமிழகத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முதல் வேட்பாளர் எனும் வரலாற்றை தாய்ச்சபையில் பதிவு செய்துவிட்டார்.
ஆம்! அவர் வளர்ந்தது நம் இதயத்தில் என்றும் நிறைந்து வாழும் தலைவர் மர்ஹூம் சிராஜுல் மில்லத் அவர்களிடமும், பாடம் பயின்றது நம் தலைவர் முனீருல் மில்லத் அவர்களிடமும். மர்ஹூம் ஏ.கே.ரிஃபாஈ ஸாஹிபுடனும் அவர் நெருக்கமான தொடர்பை வைத்திருந்தார்.
தமிழக சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் மரியாதைக்குரிய கோதர் முஹிய்யத்தீன் சாஹிபின் அன்புத் தொண்டனான அவருக்கு, இன்று தேர்தல் பணிகளில் அவர்களே துவக்கம் முதல் இறுதி வரை நின்று அபூபக்கர் ஸாஹிப் அவர்களின் வெற்றிக்காக கடுமையாக உழைத்துள்ளார். அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.
பண்பாளரை, பாசமிக்கவரை, நல்லவரை, மார்க்கப் பேணுதல் உள்ள தியாகியை தங்களது தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்த கடையநல்லூர் தொகுதி மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்து மகிழ்கிறேன். வெற்றிக்காக உடலாலும், உள்ளத்தாலும் உழைத்த அனைவருக்கும் நன்றிகள்!
எல்லாம்வல்ல அல்லாஹ் நமது நண்பருக்கு நீடித்த ஆயுளையும், நலமான - சுகமான வாழ்வையும் வழங்கி, அவர் சிறந்த சமுதாயப் பணியையும், மக்கள் பணியையும் ஆற்றிட வாழ்த்திப் பிரார்த்திக்கிறேன்.
அவருக்கு, எமது பேரவையின் சார்பிலும், ஹாங்காங் வாழ் அனைத்து தமிழ் மக்கள் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்து நிறைவு செய்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
துபை காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |