ஹிஜ்ரீ கமிட்டியின் சார்பில், காயல்பட்டினம் கடற்கரையில் இன்று காலையில் நோன்புப் பெருநாள் தொழுகையும், குத்பா பேருரையும் நடத்தப்பட்டுள்ளது. அதில் திரளானோர் பங்கேற்றுள்ளனர். இதுகுறித்து, அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எம்.என்.அஹ்மத் ஸாஹிப் வெளியிட்டுள்ள அறிக்கை:-
ஹிஜ்ரி கமிட்டி சார்பில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, சேலம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் உட்பட சுமார் 50 இடங்களுக்கும் அதிகமாக இவ்வருடம் பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் காயல்பட்டினம் கடற்கரையிலும் பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது.
இவ்வருடத்தின் புனித ரமழான் மாதம் கடந்த 06-06-2016 திங்கள் கிழமை அன்று சரியாகத் துவங்கியது. அல்குர்ஆன் 36:39 வசனத்தின் படி புறக்கண்களால் பார்க்க இயலும் ரமழான் மாத இறுதிப் பிறை 'உர்ஜூஃனில் கதீம்' 03-07-2016 அன்று ஞாயிற்றுக் கிழமை ஆகும். 04-07-2016 திங்கள் கிழமை அன்று பிறை புறக்கண்களுக்கு மறைக்கப்படும் (அமாவாசை) புவிமைய சங்கமதினம். அன்று சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய இம்மூன்றும் ஒருகோட்டில் சங்கமித்து மாதத்தின் இறுதி நாளை உறுதிப்படுத்தியது. எனவே 04-07-2016 நேற்று திங்கள் கிழமை அன்றுடன் இவ்வருடத்தின் ரமழான் மாதம் 29 தினங்களில் முடிவடைந்தது.
எனவே ஜூலை 5-ஆம் தேதி (05-07-2016) செவ்வாய் கிழமை இன்று நோன்புப் பெருநாள் தினமாக ஹிஜ்ரி கமிட்டியினர் கொண்டாடினர்.
அல்ஹாபிழ் முபீசுர் ரஹ்மான் தொழுகை நடத்தினார். அதனைத் தொடர்ந்து திருநெல்வேலி, மஸ்ஜித் முஃமினாவின் கத்தீபு மௌலவி அஹ்மது முஹிய்யத்தீன் உஸ்மானி அவர்கள் குத்பா பேருரை நிகழ்த்தினார்கள். தொழுகை ஏற்பாடுகளை நகர ஹிஜ்ரி கமிட்டி செய்திருந்தது. சுமார் 200க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். நிகழ்ச்சிகளை FM அலைவரிசைகள் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
ஹிஜ்ரி கமிட்டியின் பெருநாள் செய்தி:-
'வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது இஸ்லாமாக இருக்கட்டும்' என்பதை பெருநாள் செய்தியாக உங்களுக்கு தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். ஹிஜ்ரி நாட்காட்டியை மீண்டும் இவ்வுலகில் நிலைபெறச் செய்ய எங்களோடு கைகோத்து செயல்பட அழைப்பு விடுக்கிறோம். உங்கள் அனைவருக்கும் இனிய ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹிஜ்ரீ கமிட்டி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|