மாற்றுப் பாதைகள் வழியே இயக்கப்படும் பேருந்துகளை, காயல்பட்டினம் வழித்தடத்தில் இயக்கிடக் கோரி, “நடப்பது என்ன?” வாட்ஸ்அப், டெலிக்ராம் குழுமங்கள் சார்பில், தூத்துககுடி மாவட்ட ஆட்சியரிடம் மீண்டும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் தீர்வு கிடைக்காவிடில், தொடர்புடைய அதிகாரிகள் மீது நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப் போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விரிவான விபரம் வருமாறு:-
“நடப்பது என்ன?” குழுமம்:
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தின் அனைத்துப் பகுதி மக்களையும் உள்ளடக்கி, 31.05.2016. அன்று துவங்கப்பட்டது “நடப்பது என்ன? வாட்ஸ் அப் குழுமம்”. அதன் தொடர்ச்சியாக, கூடுதல் உறுப்பினர்களை உள்ளடக்குவதற்காக, “நடப்பது என்ன? டெலிக்ராம் குழுமம்.
இவ்விரு குழுமங்கள் மூலம், நகரில் நிலவும் பிரச்சினைகள், பொதுமக்களுக்கான சேவைக் குறைபாடுகள், அவற்றுக்கான தீர்வுகள் குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டு, அதன்படி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
18.07.2016. திங்கட்கிழமையன்று காலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் வாராந்திர கூட்டத்தின்போது, “நடப்பது என்ன?” வாட்ஸ் அப், டெலிக்ராம் குழுமங்கள் சார்பாக மாவட்ட ஆட்சியருக்கு பின்வருமாறு கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன:-
மாற்றுப் பாதையில் செல்லும் பேருந்துகளை மீட்க நடவடிக்கை:
(1) காயல்பட்டினம் வழித்தடத்தில் செல்ல வேண்டிய பேருந்துகள் அதைப் புறக்கணித்து, மாற்றுப் பாதையில் பல ஆண்டுகளாக இயக்கப்படுவதைக் கண்டித்தும், விரைவான நடவடிக்கை கோரியும் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு, “நடப்பது என்ன?” குழுமத்தின் சார்பாக, மக்கள் குறைதீர் வாராந்திர கூட்டத்தின்போது, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, நீண்ட காலமாக பொதுமக்களுக்குக் காணக் கிடைத்திராத பேருந்துகள் அனைத்தும் காயல்பட்டினம் வழித்தடத்தில் அடுத்த நாளிலிருந்தே மீண்டும் இயக்கப்பட்டன. நாட்கள் செல்லச் செல்ல, வந்து செல்ல வேண்டிய பேருந்துகளின் எண்ணிக்கை மீண்டும் குறையத் துவங்கியுள்ளது. பல பேருந்துகள் மீண்டும் மாற்றுப் பாதையில் செல்லத் துவங்கியுள்ளன.
மேலும், வெளியூர்களிலிருந்து காயல்பட்டினத்திற்கு வரும் பயணியர் பேருந்தில் பயணச் சீட்டு கேட்டால், காயல்பட்டினத்திற்கு பயணச்சீட்டு கொடுக்கப்படுவதில்லை என பயணியர் பலர் ஆதாரங்களுடன் முறையிட்டுள்ளனர்.
பழனி பக்தர்கள் ஏமாற்றம்:
இவை தவிர, நீண்ட நாட்களுக்குப் பிறகு காயல்பட்டினம் வழித்தடத்தில் வந்து செல்லும் பேருந்துகள் பல, பேருந்து நிலையத்திற்குள் வராமல் புறக்கணித்துச் செல்வதும் வழமையாகிவிட்டது. 17.07.2016. ஞாயிற்றுக்கிழமையன்று காயல்பட்டினம் வழித்தடத்தில் வந்த பழனி செல்லும் பேருந்து, பேருந்து நிலையத்திற்குள் வராமல் சென்றதால், பழனி கோயிலுக்கு வழிபாட்டிற்குச் செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்த பயணியர் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளதோடு, “நடப்பது என்ன?” குழுமத்தினரிடம் தமது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினர். அது வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.
மின் வாரியத்தின் குறைபாடுகள்:
இக்கோரிக்கை தவிர, இன்னும் சில கோரிக்கைகளும் மாவட்ட ஆட்சியரிடம் முன்வைக்கப்பட்டுள்ளன.
>>> காயல்பட்டினம் மின்வாரிய அலுவலகத்தின் இணைப் பொறியாளரது அலட்சியம் காரணமாக, பொதுமக்களுக்கான சேவைகள் பல கண்டுகொள்ளப்படாமல் உள்ளன. இதுகுறித்து உயரிதிகாரிகளிடம் பலராலும் பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டபோதிலும் இன்றளவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவுமில்லை. சேவைக் குறைபாடுகள் போக்கப்படவுமில்லை.
நகராட்சியின் குறைபாடுகள்:
>>> காயல்பட்டினம் நகரில் பல்வேறு தெருக்களில் புதிதாக சாலைகள் அமைப்பதற்கும், பழுதான சாலைகளை சீரமைப்பதற்கும், இன்னும் சில பணிகளுக்கும் என சுமார் 179 தீர்மானங்கள், நகர்மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டும், அவற்றைச் செயல்படுத்தும் பொறுப்பிலுள்ள நகராட்சி ஆணையளர் இன்றளவும் அப்பணிகளுக்கான டெண்டர் - ஒப்பந்தப் புள்ளிகளை வெளியிடாமல் வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வருகிறார்.
நகரிலுள்ள அனைத்து சாலைகளும் குண்டுங்குழியுமாக இருப்பதால், பாதசாரிகளும், வாகனங்களில் செல்வோரும் பெரும் அவதிகளைச் சந்தித்து வருகின்றனர். விபத்துகள் நடப்பதும் வாடிக்கையாகிவிட்டது.
இக்குறைகளைக் களைவதற்கு விரைவான நடவடிக்கைகள் கோரி “நடப்பது என்ன?” வாட்ஸ் அப், டெலிக்ராம் குழுமங்கள் சார்பாக மாவட்ட ஆட்சியருக்கு மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.
காயல்பட்டினம் நகரின் அனைத்துப் பகுதி பொதுமக்கள் சார்பாக, ‘அன்பின்’ அலாவுத்தீன், எம்.ஏ.புகாரீ, எம்.ஏ.செய்யித் இப்றாஹீம், சாளை நவாஸ், ‘தமிழன்’ முத்து இஸ்மாஈல், ஏ.எஸ்.புகாரீ, எம்.ஏ.காழி அலாவுத்தீன், மவ்லவீ மாமுனாலெப்பை, ஹாஃபிழ் எம்.ஏ.ஃபாயிஸ், ஹாஃபிழ் எம்.ஏ.சி.முஜாஹித், ஹாஃபிழ் ரியாஸ், எம்.எம்.முஜாஹித் அலீ, எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர் கோரிக்கை மனுக்களை இணைந்தளித்தனர்.
பின்னர் அவர்கள், தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்களிடம் தமது கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
வழக்கு தொடரப்படும்!
மாற்றுப் பாதையில் இயக்கப்படும் பேருந்துகளை மீண்டும் காயல்பட்டினம் வழித்தடத்தில் முறையாக இயக்கிட நடவடிக்கை எடுத்து, விரைவான தீர்வைப் பொதுமக்களுக்கு வழங்காவிடில், அவை தொடர்புடைய அதிகாரிகள் மீது உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப் போவதாக, காயல்பட்டினம் “நடப்பது என்ன?” குழுமத்தின் சார்பில், அதன் ஒருங்கிணைப்பாளர் பீ.எம்.ஏ.ஸதக்கத்துல்லாஹ் அறிவித்துள்ளார்.
|