காயல்பட்டினத்தில் தையல் தொழில் செய்வதற்காக தையல் கருவிகளைக் கேட்டு ஏழை மக்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஒருபுறமிருக்க, அவ்வாறு தையல் கருவிகள் வழங்கப்பட்டவர்கள் அதை முறையாகப் பயன்படுத்தி தொழில் செய்வது மிகவும் குறைவு என்ற நிலையைக் கருத்திற்கொண்டு, அது போன்ற கோரிக்கைகளை முன்வைக்கும் பயனாளிகளுக்கு தையல் துறையில் தகுந்த வேலைவாய்ப்பை அளித்து, வருமானமீட்ட வழிகாட்ட வேண்டும் என்ற நோக்கத்தில், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் சார்பில், “KUF ஹாங்காங் கார்மெண்ட்ஸ் & டெய்லரிங்” எனும் பெயரில் தையல் நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது.
அதன் திறப்பு விழா, 26.07.2016. செவ்வாய்க்கிழமையன்று 10.30 மணியளவில், ஹாஜியப்பா தைக்கா பள்ளியருகிலுள்ள நிறுவன வளாகத்தில், மவ்லவீ ஹாஃபிழ் கே.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் தலைமையில், எஸ்.ஐ.அபூபக்கர். வட்டம் எஸ்.எம்.ஹஸன் மரைக்கார். எம்.என்.செய்யித் அஹ்மத் (பி.காம். செய்யித் அஹ்மத்) ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. ஹாங்காங் பேரவையின் ஆலோசகர் ஏ.எஸ்.ஜமால் முஹம்மத் தையல் நிறுவன கட்டிடத்தைத் திறந்து வைக்க, அதன் தொடர்ச்சியாக அவை நிகழ்ச்சிகள் துவங்கின.
மாணவர் கே.எம்.எச்.அப்துல் வதூத் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் தலைவர் ஹாஃபிழ் ஏ.எல்.இர்ஷாத் அலீ வரவேற்றுப் பேசினார்.
அதன் முன்னாள் தலைவரும், நடப்பு ஆலோசகருமான ஏ.டபிள்யு.கிழுறு முஹம்மத் ஹல்லாஜ், திட்ட அறிமுகவுரையாற்றினார்.
மதுரையைச் சேர்ந்த நஸீர் அஹ்மத், காயல்பட்டினம் ஐக்கிய சமாதானப் பேரவை & தாருஸ் ஸலாம் தஃவா சென்டர் ஆகியவற்றின் நிறுவன தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் டீ.எம்.என்.ஹாமித் பக்ரீ மன்பஈ ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் நலத்திட்ட உதவிப் பொருட்கள் வருடாந்திர வினியோகத் திட்டத்தின் கீழ், நடப்பாண்டு 2 லட்சம் ரூபாய் செலவில் தொழிற்கருவிகள் வழங்கப்படவுள்ளதாக விழாவில் அறிவிக்கப்பட்டு, துவக்கமாக ஒரு பயனாளிக்கான பொருள் அவையிலேயே வழங்கப்பட்டது. பயனாளியின் சார்பாக ஏ.ஆர்.ஷேக் முஹம்மத் அதைப் பெற்றுக்கொண்டார்.
KUF ஹாங்காங் கார்மெண்ட்ஸ் & டெய்லரிங் திட்ட இயக்குநர் எம்.எல்.ஷேக்னா லெப்பை நன்றி கூற, ஹாங்காங் பேரவை ஆலோசகர் கம்பல்பக்ஷ் எஸ்.எச்.பாக்கர் ஸாஹிப் துஆவைத் தொடர்ந்து, ஸலவாத்துடன் விழா நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
இதில் ஹாங்காங் வாழ் காயலர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
படங்களுள் உதவி:
M.M.முஜாஹித் அலீ
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பு தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |