தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நகராட்சிப் பகுதியில் அண்மைக் காலமாக - சில இளைஞர்கள் மத்தியில் இரு முக்கிய பிரச்சனைகள் நிலவுகின்றன.
(1) உரிமம் பெறும் வயதை எட்டாத மாணவர்கள், இரு சக்கர வாகனங்களை - தனியாகவோ, மூவராகவோ, நால்வராக அமர்ந்துகொண்டு – குறிப்பாக இரவு நேரங்களில் ரேஸ் ஓட்டுவது. இதனால் - விபத்துகள் அவ்வப்போது ஏற்படுகிறது. கடந்த மாதம் முதியவர் ஒருவர் இரு சக்கர வாகனம் மோதி இறந்துள்ளார்.
(2) சட்டத்திற்குப் புறம்பாக, நகரில் மதுபானம் உள்ளிட்ட பல்வேறு போதைப் பொருட்கள் விற்பனை நடப்பதால், இத்தீய பழக்கங்களுக்கு சில மாணவர்களும் அடிமையாகியுள்ளனர்.
இந்த இரு பிரச்சனைகளையும் கருப் பொருளாகக் கொண்டு, 02.08.2016. செவ்வாய்க்கிழமையன்று காயல்பட்டினத்தில் - பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
மாலை 04.00 மணிக்குப் பேரணி துவங்கியது. காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி, சென்ட்ரல் மேனிலைப்பள்ளி, முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளின் மாணவர்கள் இப்பேரணியில் அணிவகுத்து நடந்து சென்று, போக்குவரத்து விதிமுறைகளை மதித்தல், சாலைப் பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தியும், போதைப் பொருட்கள் பயன்பாட்டிற்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பிச் சென்றனர்.
மாலை 05.00 மணியளவில் காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் பேரணி நிறைவுற்றது.
தொடர்ந்து, ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது.
“நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும நிர்வாகக் குழு உறுப்பினர் எஸ்.கே.ஸாலிஹ் நெறிப்படுத்தினார். எம்.ஏ.சி.முஜாஹித் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். எழுத்தாளர் ‘அன்பின்’ அலாவுத்தீன் வரவேற்றுப் பேசினார்.
எல்.கே.மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத், சென்ட்ரல் மேனிலைப்பள்ளியின் ஆசிரியர் அப்துல் காதர் கான், முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் துணைச் செயலாளர் கே.எம்.டீ.சுலைமான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் சிறப்புரையாற்றியதோடு, உறுதிமொழி வாசகத்தை முன்மொழிய மாணவர்கள் அதை வழிமொழிந்தனர்.
“நடப்பது என்ன?” குழும நிர்வாகக் குழு உறுப்பினர் எம்.எம்.முஜாஹித் அலீ நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
பேரணியிலும், நிறைவு நிகழ்ச்சியிலும் சுமார் 500 மாணவர்கள் பங்கேற்றனர். அந்தந்தப் பள்ளிகளின் சார்பில் ஆசிரியர்களும், அலுவலர்களும் மாணவர்களை வழிநடத்தினர். கலைந்து செல்லும் முன் அனைவரும் குழுப்படம் எடுத்துக்கொண்டனர். நிறைவில் அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக, இளைஞர்களின் பைக் ரேஸ்களால் குடும்பங்கள் சந்திக்கும் இழப்பைக் கருவாகக் கொண்ட "குருதியில் வழியும் பெருநாள்கள்!" என்ற தலைப்பில், வழக்கறிஞர் - எழுத்தாளர் எம்.எம்.தீன் எழுதிய சிறுகதை அனைத்து மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் அச்சிடப்பட்டு வழங்கப்படவுள்ளது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் அதன் நிர்வாகிகளான பீ.எம்.ஏ.ஸதக்கத்துல்லாஹ், ‘தமிழன்’ முத்து இஸ்மாஈல், ஏ.எஸ்.புகாரீ, சாளை நவாஸ், எம்.என்.அஹ்மத் ஸாஹிப் உள்ளிட்டோரும், குழும அங்கத்தினரும் செய்திருந்தனர்.
“நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |