காயல்பட்டினம் வழியாக அரசு பேருந்துகள் இயக்க கோரி தமிழக முதல்வருக்கு தொலைநகலி (FAX) அனுப்ப நடப்பது என்ன? சமூக ஊடக குழுமம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு:
காயல்பட்டினத்தை புறக்கணித்து அரசு பேருந்துகள் செல்வதை கண்டித்து - இன்று (ஆகஸ்ட் 6) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை -
நடப்பது என்ன? சமூக ஊடக குழும ஒருங்கிணைப்பில் - கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
திருச்செந்தூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்திற்கு - நகரின் அனைத்து ஜமாஅத்துகளும், பொது நல அமைப்புகளும்,
ஊர் நல கமிட்டிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
வெளியூர்களில் இருக்கும் காரணத்திற்காக இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொள்ள முடியாதவர்கள் - நமது கோரிக்கையை வலியுறுத்தி தமிழக
முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு தொலைநகலி (FAX) அனுப்ப வேண்டப்படுகிறார்கள்.
தொலைநகலி (FAX) எண்கள்:
044 - 2567 0930
044 - 2567 1441
மேலே உள்ள இரண்டு எண்களில் - ஏதாவது ஒரு எண்ணுக்கு மட்டும் தொலைநகலி (FAX) அனுப்பவும்.
நீங்கள் அனுப்ப வேண்டிய மாதிரி வாசகம்:
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நகரினை அரசு பேருந்துகள் பல ஆண்டுகளாக புறக்கணித்து வருகின்றன. இது குறித்து - 1000 க்கும் மேற்பட்ட
மக்கள், கையெழுத்திட்டு, போக்குவரத்து துறை அமைச்சர், போக்குவரத்து துறை அரசு செயலர், ஆறு அரசு பேருந்து கழகங்களின் நிர்வாக இயக்குனர்கள், மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறை - கோரிக்கைகள் வழங்கியும், தொடர்ந்து அரசு பேருந்துகள் - 50,000 மக்கள் வாழும் காயல்பட்டினம் நகரை - புறக்கணிக்கின்றன.
இதனால் - பெண்கள், குழந்தைகள், வயோதிகர்கள், தொழில் முனைவோர், மாணவர்கள் உட்பட பல தரப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
வேறு வழியில்லாமல் - அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக, இன்று (ஆகஸ்ட் 6) காலை - திருச்செந்தூர் பேருந்து நிலையம் அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்யும் நிலைமைக்கு - பொது மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே - இந்த விஷயத்தில் தாங்கள் தயவு கூர்ந்து, தனி அக்கறை செலுத்தி, எங்கள் ஊருக்கு வர வேண்டிய பேருந்துகள், எங்கள் ஊரை புறக்கணிக்காமல் - எங்கள் ஊர் வழியாக இயக்கப்பட உத்தரவிடும் படி, தங்களை கேட்டு கொள்கிறோம்.
மேலே உள்ள வாசகத்தை - கருத்து மாறாமல், தங்கள் அனுபவங்களை இணைத்தும் - நீங்கள் அனுப்பலாம்.
முடிந்த அளவு - ஒரு பக்கத்தில் அடங்கும் வகையில் அனைத்து கோரிக்கைகளையும், உங்கள் பெயர், விலாசம், கையெழுத்தையும் - இணைத்து
அனுப்பவும்.
பல பேர் - ஒரே இடத்தில இருந்து அனுப்புவதாக இருந்தால், ஒரே FAX தகவலில், எல்லோரும் கையெழுத்திட்டு அனுப்பவும்.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |