நிர்ணயிக்கப்பட்ட வழித்தடமான காயல்பட்டினத்தை அரசுப் பேருந்துகள் புறக்கணித்துவிட்டு, மாற்றுப்பாதையில் செல்வதைக் கண்டித்து “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் திருச்செந்தூர் பேருந்து நிலையம் அருகில் நடத்தப்பட்ட கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், காயல்பட்டினம் அகநகர் & புறநகர் பகுதிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். விரிவான விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் வழித்தடத்தில் வந்து செல்ல வேண்டிய அரசுப் பேருந்துகள் அதைப் புறக்கணித்து மாற்றுப் பாதையில் செல்வதைக் கண்டித்து, தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், போக்குவரத்துக் கழக மண்டல மேலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டதன் அடிப்படையில், இதுவரை காணக்கிடைத்திராத பல பேருந்துகள் தற்போது காயல்பட்டினம் வழித்தடத்தில் வந்து செல்கின்றன.
என்றாலும், இன்றளவும் பல பேருந்துகள் காயல்பட்டினத்தைப் புறக்கணித்து மாற்றுப் பாதையில் செல்வதும் வாடிக்கையாகவே உள்ளது.
இதனைக் கண்டித்தும், இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்குடனும், திருச்செந்தூர் - தியாகி பகத்சிங் பேருந்து நிலையம் அருகில், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், 06.08.2016. சனிக்கிழமையன்று (இன்று) காலை 11.00 மணியளவில் நடைபெற்றது.
“நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும தலைமை ஒருங்கிணைப்பாளர் பீ.எம்.ஏ.ஸதக்கத்துல்லாஹ் தலைமை தாங்கினார். அதன் நிர்வாகக் குழு உறுப்பினர்களான எம்.என்.அஹ்மத் ஸாஹிப் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்த, எம்.எம்.முஜாஹித் அலீ அறிமுக உரையாற்றினார்.
நிர்ணயிக்கப்பட்ட காயல்பட்டினம் வழித்தடத்தைப் புறக்கணித்துவிட்டு, மாற்றுப் பாதையில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதைக் கண்டித்தும், இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு தர வலியுறுத்தியும் இவ்வார்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
எம்.ஏ.புகாரீ, அஹ்மத் சுலைமான், தர்மர், இல்யாஸ் உள்ளிட்டோர் முழக்க வாசகங்களை முன்மொழிய, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற காயலர்கள் அதை வழிமொழிந்தனர்.
“நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும நிர்வாகக் குழு உறுப்பினர் ஏ.எஸ்,புகாரீ நன்றியுரையுடன் ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது.
இதற்குப் பிறகும் இப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்காவிடில், தமிழகம் தழுவிய அளவில் போராட்டத்தை விரிவுபடுத்தவும், தொடர்புடைய போக்குவரத்து அதிகாரிகள் மீது உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவும் போவதாக ஆர்ப்பாட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், துபை காயல் நல மன்றத் தலைவர் ஆடிட்டர் ஜெ.எஸ்.ஏ.புகாரீ, தாய்லாந்து காயல் நல மன்ற தலைவர் வாவு எம்.எம்.ஷம்சுத்தீன், அதன் செயலாளர் எம்.எஸ்.செய்யித் முஹம்மத், அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் கத்தீப் மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ,
புதுப்பள்ளி ஜமாஅத் பொருளாளர் ஏ.எஸ்.அஷ்ரஃப், ஐக்கிய விளையாட்டு சங்க பொருளாளர் எம்.எல்.ஹாரூன் ரஷீத், அதன் செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.ஸதக்கத்துல்லாஹ், குருவித்துறைப் பள்ளியின் முன்னாள் இணைச் செயலாளர் எஸ்.ஏ.முஹம்மத் இஸ்மாஈல், மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் நிர்வாகக் குழு உறுப்பினர் என்.டீ.பாதுல் அஸ்ஹப் ஜுமானீ, இக்ராஃ கல்விச் சங்க செயலாளர் என்.எஸ்.இ.மஹ்மூது,
காயல்பட்டினம் நல அறக்கட்டளை தலைவர் எஸ்.ஐ.அபூபக்கர், ஐ.ஐ.எம். நிர்வாகி எம்.ஏ.இஸ்ஸத்தீன், விஸ்டம் பப்ளிக் பள்ளி தலைவரும் - கே.எம்.டீ. மருத்துவமனை நிர்வாகியுமான டீ.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகிகளான முஹ்ஸின் முர்ஷித், ஐதுரூஸ்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நகர தலைவர் ஷம்சுத்தீன், அதன் நிர்வாகக் குழு உறுப்பினர் ரய்யான் ஷாஹுல் ஹமீத், அதிமுக நகர நிர்வாகிகளான இல்யாஸ், பீ.எஸ்.அப்துல் காதிர், முத்து முஹம்மத், திமுக நகர நிர்வாகிகளான எஸ்.ஏ.கே.ஜலீல், SDPI தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஷம்சுத்தீன், பாரதீய ஜனதா கட்சியின் நகர நிர்வாகி பண்டாரம், தர்மர், புரட்சி சங்கர், காயல்பட்டினம் நுகர்வோர் பாதுகாப்புப் பேரவை தலைவர் எம்.ஏ.ஷேக் ஆகியோர் உட்பட, காயல்பட்டினம் அகநகர், புறநகரின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
திருச்செந்தூர் காவல் ஆய்வாளர் ஆடிவேல் தலைமையில், துணை ஆய்வாளர் செ.பாஸ்கரன் உள்ளிட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ஆர்ப்பாட்ட ஏற்பாடுகளை, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும நிர்வாகிகளான ‘தமிழன்’ முத்து இஸ்மாஈல், எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், சாளை நவாஸ், எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய், எஸ்.கே.ஸாலிஹ், அதன் அங்கத்தினரான ஷாஹுல் ஹமீத் (மனிதநேய ஜனநாயகக் கட்சி), ஜஃபருல்லாஹ், எம்.ஏ.கே.முஹம்மத் இப்றாஹீம் ஸுஃபீ, எம்.ஏ.சி.முஹம்மத் முஜாஹித், எஸ்.ஏ.முஹ்யித்தீன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
முன்னதாக, காயல்பட்டினத்தில் பலர் தம் கடைகளை அடைத்துவிட்டு இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதும், வேறு பலர் கடைகளில் மாற்றுப் பொறுப்பாளர்களைப் பணியமர்த்திவிட்டு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்திருந்ததும் குறிப்பிடத்தக்கவை.
“நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |