காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW ஆலை நிர்வாகத்தின் சார்பில், புறநகர் பகுதிகளிலுள்ள மகளிருக்கு தையல் எம்ப்ராய்டரிங் இலவச பயிற்சி வகுப்பு துவக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அதன் மக்கள் தொடர்பு துணை மேலாளர் எஸ்.சித்ரவேல் வெளியிட்டுள்ள அறிக்கை:-
டி.சி.டபிள்யூ நிறுவனமானது பல்வேறு சமுதாயப்பணிகளை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மகளிர் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நோக்கில் காயல்பட்டிணம், சீதக்காதி நகர் அருகில் உள்ள பயிற்சி மையத்தில் மூன்றாவது இலவச தையல் மற்றும் எம்ப்ராயிடிங் பயிற்சியின் துவக்க விழா இன்று காலை நடைபெற்றது. மக்கள் தொடர்பு துணை மேலாளர் சித்திரைவேல் அனைவரையும் வரவேற்று பேசினார்.
மத்திய அரசின் சிறு குறு மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்கள் துறையின் தென்மண்டல தொழில்நுட்ப ஆலோசகர் கே.சண்முகநாதன் முன்னிலை வகித்தார். டிசிடபிள்யூ நிறுவனத்தின் செயல் உதவிதலைவர் (நிர்வாகம்) டாக்டர் மே.சி.மேகநாதன் தலைமை தாங்கி இந்த பயிற்சி முகாமினை தொடங்கி வைத்தார்.
இந்த பயிற்சி முகாமில் மொத்தம் 40 பெண்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. தொடர்ந்து ஆறு மாதங்கள் நடைபெறும் இந்த பயிற்சி முகாமில் 20 வகையான ஆடை வடிவமைப்பும், 150 வகையான எம்ப்ராய்டிங் பயிற்சியும் கற்றுக் கொடுக்கப்படுகிறது.
விழாவில் மதர் சமூக சேவை டிரஸ்ட் இயக்குநர் கென்னடி உள்பட மகளிர் சுய உதவி குழுவினைச் சேர்ந்த பெண்கள் பெரும் திரளாக கலந்துகொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
DCW ஆலையின் நலத்திட்டப் பணிகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|