இக்ராஃ கல்விச் சங்கத்தின் பணிகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என அதன் புதிய செயற்குழுவின் முதல் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அவ்வமைப்பின் செயலாளர் என்.எஸ்.இ.மஹ்மூது வெளியிட்டுள்ள அறிக்கை:-
இக்ராஃ கல்விச் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் கடந்த 24-07-2016 அன்று நடைபெற்றது. கூட்ட நிகழ்வுகள் குறித்து, இக்ராஃ கல்விச் சங்கத்தின் செயலாளர் என்.எஸ்.இ.மஹ்மூது அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:-
இக்ராஃ செயற்குழுக் கூட்ட விபரங்கள்!
இக்ராஃ கல்விச் சங்கத்தின் புதிய செயற்குழுவின் முதற்கூட்டம், 24.07.2016. ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 07:35 மணியளவில் , இக்ராஃ அலுவலகம் எதிரில் - கீழ நெய்னார் தெருவிலிருக்கும் கலீஃபா அப்பா தைக்கா வளாகத்தில், இக்ராஃ கல்விச் சங்க தலைவரும் - சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் துணைத்தலைவருமான எம்.எம்.மொகுதூம் முஹம்மத் அவர்கள் தலைமையில், எம்.என்.முஹம்மது யூனுஸ் (துணைத்தலைவர், இக்ராஃ & தலைவர், கத்தார் காயல் நல ,மன்றம்), ஹாபிழ் ஏ.எல்.இர்ஷாத் அலி (துணைத்தலைவர், இக்ராஃ & தலைவர், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை , ஹாங்காங்), எம்.ஏ.செய்யது இப்ராஹிம் (செயலர் ,ஜித்தா காயல் நல மன்றம்), வி.எஸ்.டி சேக்னா லெப்பை (தலைவர், அபுதாபி காயல் நல மன்றம்) ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
தலைமையுரை:
இக்ராஃ செயற்குழு உறுப்பினர் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். கூட்டத் தலைவரும், இக்ராஃ தலைவருமான எம்.எம்.மொகுதூம் முஹம்மத் அனைவரையும் வரவேற்றுப் பேசியதுடன், இக்ராஃவின் வருங்கால செயல்திட்டங்கள் குறித்த தனது திட்ட முன்வடிவை கூட்டத்தில் முன்வைத்தார்.
தான் சார்ந்துள்ள சிங்கப்பூர் காயல் நல மன்றத்திற்கு, இக்ராஃ நடப்பு செயற்குழுவின் தலைமைப் பொறுப்பை வழங்கி, தன்னைத் தலைவராக்கியமைக்காக அனைவருக்கும் துவக்கமாக நன்றி தெரிவித்த அவர், தன் பொறுப்புக் காலம் முழுவதிலும் முழுமையான - மனப்பூர்வமான ஒத்துழைப்புகளை நிறைவாக வழங்கிடுமாறு அவர் அனைவரையும் கேட்டுக்கொண்டார். அவரது உரையின் உள்ளடக்கம்:-
இக்ராஃ துவங்கி பத்தாண்டுகள் ஆகி விட்டன.பல்வேறு சேவைகள் நன்முறையில் நடந்து முடிந்துள்ளன.இதில் கடந்த ஆறு ஆண்டுகள் உலக காயல் நல மன்றங்களின் தலைமையில் ஒரு சுற்று நடத்தி முடிக்கப்பட்டு தற்போது அடுத்த சுற்று துவக்கத்தில் உள்ளோம். இந்த சந்தர்ப்பத்தில் இக்ராஃவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது குறித்து விரிவாக கலந்தாலோசிக்க வேண்டும்.
>>>உலக காயல் நல மன்றங்கள் மூலமாக பொதுக்குழு உறுப்பினர்களானோரின் ஆண்டுச் சந்தாக்களைப் பெற்றிட - அவர்கள் சார்ந்துள்ள மன்றங்களை அனுகுவது மட்டுமே தற்போது நடைமுறையில் உள்ளது. பணியிட மாற்றம் காரணமாகவோ, வேறு பல காரணங்களுக்காகவோ உறுப்பினர்கள் பலர் இடம் மாறிச் செல்வதால், அத்தொகை நிலுவையாகாமலிருக்கும் பொருட்டு, இனி அந்தந்த உறுப்பினர்களின் வீட்டிற்கே நேரடியாகச் சென்று சந்தா தொகையை வசூலிக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.காரணம் தற்போது (கடந்த 2010 முதல் 2015 வரையிலான) உறுப்பினர்கள் சந்தா 177 பேர் , ரூபாய் 2,27,000 வரை 4 ஆண்டுகள் 5 ஆண்டுகள் என செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளது.இதை சரிவர கிடைக்கப் பெற்றாலே நிர்வாகச் செலவினங்கள் பற்றாக்குறையின்றி செயல்படுத்தலாம்.எனவே நமது பொதுக் குழுக் கூட்டத்தில் தீர்மானித்தபடி நிலுவையிலுள்ள சந்தாத்தொகையை வசூலிக்க ஒருவரை விரைவில் நியமித்து இவைகளை சேகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
>>>உறுப்பினராவதற்கான விண்ணப்பப் படிவம் முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்டு, புகைப்படமும் ஒட்டப்பட்டிருந்தாலேயொழிய, அது எவ்வளவு முக்கியமான விண்ணப்பமாக இருந்தாலும் அதற்கு ஒப்புதல் வழங்குவதைத் தவிர்த்திட வேண்டும். இதனால், அரசுப் பதிவு செய்யப்பட்டுள்ள இக்ராஃவின் பணிகள் பாதிக்கப்படாமலும், சந்தா நிலுவைத் தொகை அதிகரிக்காமலும், உறுப்பினர்கள் ஒத்துழைப்பின்மை நிலை அதிகரிக்காமலும் காக்க இயலும்.
(இவ்வாறு அவர் பேசுகையில், “உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, சந்தா தொகை அதிகரிக்க வாய்ப்புகளை ஏற்படுத்தலாம்” என இக்ராஃ முன்னாள் தலைவரும், கத்தர் காயல் நல மன்ற ஆலோசகருமான எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம் கூறினார். இதற்கு பதிலளித்த நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மது, உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதனால் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்கள் (கூட்டம் நடத்துவதற்குத் தேவையான கோரம் இல்லாமல் போவது ) குறித்து விளக்கியதோடு, சந்தா தொகை அதிகரிப்பு குறித்து இதற்கு முன்பு பலமுறை செயற்குழுக் கூட்டங்களில் ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் கூட்ட வேண்டாமென பலராலும் கருத்து கூறப்பட்டதாகவும் எடுத்துரைத்தார்).
>>> கலை மற்றும் அறிவியல் (Arts and Science) படிப்புகளுக்காக - தகுதியுடைய சிலருக்கு தற்போது முழு கல்வி உதவித்தொகையும் இக்ராஃவால் வழங்கப்படுவதைப் போல, Professional Courses வகைக்கும் வழங்கப்பட வேண்டும். கடந்த ஆண்டு, கல்விக் கடன் வழங்குவது குறித்து கத்தார் காயல் நல மன்றம் முன் வைத்த ஆலோசனையை, இன்ஷா அல்லாஹ், இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்த முயற்சிக்கலாம்.
ஆண்டொன்றுக்கு - தகுதியுடைய சில மாணவர்களை (Basis of Merit mark / NIT / Govt. Colleges / Diplomo courses in Govt. Polytechnic )இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு எந்தச் செலவும் ஏற்படாவண்ணம் முழு கல்வி உதவித்தொகையையும் கல்விக் கடனாக வழங்கலாம். துவக்கமாக சோதனை அடிப்படையில் நடப்பாண்டு ஒரு மாணவரைத் தேர்ந்தெடுத்து, கல்வி உதவித்தொகை வழங்கிப் பார்க்கலாம். குறிப்பாக வெளியில் எவரிடத்திலும் உதவி கேட்க வெட்கப்படும், நல்ல குடும்பத்தைச் சேர்ந்த மக்கள் இதன் மூலம் பயன்பெற வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கம்.இத்தகையவர்களை இக்ராஃ செயற்குழு உறுப்பினர்களே கண்டறிந்து பரிந்துரைக்கலாம்.
இந்த கல்விக் கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தும் முன், இதே போன்ற திட்டத்தைப் பல்லாண்டுகளாக செயல்படுத்தி வரும் ஹாங்காங் KSWA அமைப்பிடமிருந்து தேவையான விபரங்கள் மற்றும் ஆலோசனைகளைக் கேட்டுப் பெறலாம்.
(இவ்வாறு அவர் கூறியதும், அதற்கான ஒத்துழைப்புகளை தான் சார்ந்த KSWA அமைப்பு நிறைவாக வழங்கும் என KSWA அங்கத்தினர்களில் ஒருவரும் , இக்ராஃ துணைத்தலைவரும் - காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை ஹாங்காங் அமைப்பின் தலைவருமான ஹாஃபிழ் ஏ.எல்.இர்ஷாத் அலீ தெரிவித்தார்.)
>>> நடப்பு கல்வியாண்டு (2016-17) முதல், இக்ராஃ பொது கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள மாணவர்களுக்கு ( முழு கல்வி உதவித்தொகையையும் - அல்லது குறைந்த பட்சம் Tution fees ஐ யாவது ) கடன் அடிப்படையில் (loan basis) வழங்கவும், மாணவியருக்கு - தற்போது கல்வி உதவித்தொகை வழங்கும் வழமையை அப்படியே கடைப்பிடிக்கவும் முடிவு செய்யப்பட வேண்டும். இதனால், கல்வி உதவித்தொகைக்கு அனுசரணை பெறுவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் பளு வரும் காலங்களில் குறையும்.
இக்ராஃவின் நிர்வாகச் செலவினங்களுக்கு வருடந்தோறும் பெருந்தொகை செலவாகிறது. அதை விட பல மடங்குத் தொகை கல்வி நிதியாக வழங்கப்பட வேண்டும்.அந்த வகையில் தற்போது வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகைகள் போதாது. எனவே கல்விக்கு வழங்கும் நிதியை பல மடங்காக உயர்த்த முயற்சிக்க வேண்டும்.
>>> ஆண்டுதோறும் நிதிப் பற்றாக்குறை நிலை ஏற்படுவதைத் தவிர்த்திட இக்ராஃவின் நிதியாதாரத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகளும் போர்க்கால அடிப்படையில் செய்யப்பட வேண்டும்.
அந்த வகையில், ஆண்டில் ஒரு நாளை “இக்ரா நாள் - IQRA DAY” என அறிவித்து, அந்நாளை - அனைத்துலக காயல் நல மன்றங்களும், கடைப்பிடிக்கக் கேட்டுக்கொண்டு, அந்நாளில் - அனைவரும் தமது ஒருநாள் ஊதியத்தை அல்லது ஒருநாள் வருமானத்தை இக்ராஃ கருவூலத்திற்கு நன்கொடையாக வழங்கலாம்.
(இவ்வாறு அவர் கூறியதும்,
(1) “வளைகுடா நாடுகளிலுள்ள காயல் நல மன்றங்களுக்கு இத்திட்டம் சிரமத்தை ஏற்படுத்தும் என்றும், பெரும்பாலும் அடிமட்ட நிலையிலிருக்கும் அவர்களிடமிருந்து ஏற்கனவே பல திட்டங்களுக்காக மிகுந்த சிரமங்களுக்கிடையில் நன்கொடைகள் சேகரிக்கப்பட்டு வரும் நிலையில், இது கூடுதல் பளுவை ஏற்படுத்தும்” என அபூதபீ காயல் நல மன்றத் தலைவர் வி.எஸ்.டீ.ஷேக்னா லெப்பை உள்ளிட்ட சிலர் கருத்து தெரிவித்தனர்.
“யாரையும் கட்டாயப்படுத்தத் தேவையில்லை; விருப்பமுள்ளவர்களிடமிருந்து பெற்றுக்கொள்வதில் தவறில்லை” என இக்ராஃ மற்றும் ரியாத் காயல் நல மன்றத்தின் முன்னாள் தலைவரான ஹாஃபிழ் எம்.ஏ.ஷேக் தாவூத் இத்ரீஸ் கூறினார்.
நிறைவில், “இக்ராஃ நாள்” திட்டத்தை அறிமுகப்படுத்தி, அனைத்துலக காயல் நல மன்றங்களுக்கும் இதுகுறித்த வேண்டுகோளை முன்வைக்கவும், விருப்பமுள்ளவர்கள் தரும் நிதியைப் பெற்றுக்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.
இத்திட்டத்தை - துவக்கமாக தான் சார்ந்துள்ள சிங்கப்பூர் காயல் நல மன்றம் மனப்பூர்வமாக ஏற்று, நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தலைவர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் தெரிவித்தார்.
மேலும் உள்ளூரில், உள்நாட்டில் நிதி பெறுவதற்கான முயற்சிகளை முழு வீச்சில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்..
(2) ஆண்டுதோறும் நிதிச்சுமை ஏற்படுவதைத் தவிர்த்திட, வரிச்சலுகையளிக்கும் 12ஏஏ , 80ஜி ஆகிய வசதிகளை விரைவாகப் பெற்றிடத் தேவையான முயற்சிகளைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டால், அதன் மூலம் வணிக நிறுவனங்களை எளிதில் தொடர்புகொண்டு, தேவைப்படும் நிதியை இலகுவாகப் பெற்றுக்கொள்ள இயலும் என்றும், இக்ராஃவிற்கென அதிகாரப்பூர்வ இணையதளம் துவக்கி, அவ்வப்போதைய தகவல்களை உடனுக்குடன் அதில் பதிவேற்றம் செய்வதன் மூலம் இக்ராஃவின் சேவைகளை உலகெங்கும் வாழும் காவலர்கள் மத்தியில் இலகுவாக எடுத்துச் செல்லலாம் என்றும் இக்ராஃ முன்னாள் செயலாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீத் கூறினார்.
(3) இக்ராஃவின் 10 ஆண்டுகால கல்விச் சேவைகளைப் பட்டியலிட்டு, அழகிய முறையில் power point presentation வடிவமைத்து, அனைத்துப் பகுதிகளிலும் பரப்புரைக்கு அதை அனுப்பி வைப்பதன் மூலம் நிதியாதாரத்தைப் பெருக்கலாம் / கட்டிட வகைக்கான நிதியையும் பெறலாம் என தலைவர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் கூறியதோடு, அவ்வாறு power point presentation வடிவமைக்கும் பொறுப்பை தான் சார்ந்துள்ள சிங்கப்பூர் காயல் நல மன்றம் ஏற்றுக்கொள்வதாகவும், இதனை எதிர்வரும் அக்டோபர் மாத இறுதிக்குள் தயாரித்துத் தருவதாகவும் அறிவித்தார். அதற்கு தேவையான தகவல்களை இக்ராஃ அலுவலகத்திலிருந்து முற்கூட்டியே தந்துதவுமாறும் கேட்டுக் கொண்டார்.
(4) இக்ராஃவின் பத்தாண்டு மலர் வெளியிடப்பட வேண்டும். இதன் மூலம் கல்வி சார்ந்த தகவல்கள் மற்றும் இக்ராஃவின் கல்விப் பணிகளை மக்கள் மத்தியில் எத்தி வைக்கவும், அதனைத் தொடர்ந்து தேவையான ஆதரவு அவர்கள் மூலம் பெறவும் வழிவகுக்கும் என கத்தர் காயல் நல மன்றத்தின் பொருளாளர் கே.எஸ்.டி. முஹம்மத் அஸ்லம் கூறினார். இதனை பலரும் ஆமோதித்தனர்.
>>> இக்ராஃவின் கல்விச் சேவைகள் தொடர்பாக, நகரிலுள்ள அனைத்து மாணவ-மாணவியரும் முழு விழிப்புணர்வுடன் இருக்கச் செய்ய வேண்டும். மேலும் நகர பள்ளிகளுக்கிடையிலான கலை, விளையாட்டு, வரைபடம் (Drawing ) மற்றும் பேச்சுப் போட்டிகளை நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை” நிகழ்ச்சியின் பரிசளிப்பு விழாவின்போது பரிசுகளை வழங்கி ஊக்குவிக்கலாம்.இதன் மூலம் மாணவ-மாணவியரின் திறமைகள் வளர்க்கப் படுவதோடு,இக்ராஃவைப் பற்றியும் அவர்கள் அறிந்து கொள்வதற்கு வாய்ப்பாக இருக்கும். இது குறித்து நகரின் அனைத்துப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களை சந்திப்பதற்கு தானும், ஏ.எல்.இர்ஷாத் அலி மற்றும் கே.எம்.டி.சுலைமான் ஆகியோர் அடுத்த சில தினங்களில் செல்லவிருப்பதாக தெரிவித்தார்.
இது தவிர நமது மாணவ- மாணவியருக்கான தரமான கல்வி வழிகாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் அரசு வேலைவாய்ப்புகளை நமது மக்கள் பெற்றுக் கொள்ளும் வழிமுறைகளை (TNPSC ) நமது மக்களுக்கு எத்தி வைக்கும் பணிகளையும் முடுக்கி விட வேண்டும்.
இவ்வாறாக, இக்ராஃ தலைவர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் உடைய உரை அமைந்திருந்தது.
அண்மைச் செயல்பாடுகள்:
இக்ராஃவின் அண்மைச் செயல்பாடுகள் குறித்து, நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத் விளக்கிப் பேசினார். அவரது உரையின் உள்ளடக்கம்:-
>>> கடந்த செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு, அவை மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
>>> இக்ராஃவின் பொது கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு, நகரின் பெரும்பாலான பகுதிகளைச் சேர்ந்த மாணவ-மாணவியரிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெற்று முடிக்கப்பட்டுள்ளன.
31.07.2016. ஞாயிற்றுக்கிழமையன்று இத்திட்டத்திற்கான நேர்காணலை (Interview) கலீஃபா அப்பா தைக்காவில் நடத்திட திட்டமுள்ளது.
>>> நடப்பு கல்வியாண்டில், இக்ராஃவின் பொது கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு அனுசரணை வழங்கியோரின் பெயர் பட்டியல் வாசிக்கப்பட்டு, அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
>>> நடப்பு கல்வியாண்டில், இக்ராஃவின் ஜகாத் நிதியின் கீழான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு ஜக்காத் நிதி வழங்கியோரின் பெயர் பட்டியல் மற்றும் வழங்கப்பட்ட நிதி குறித்தும் வாசிக்கப்பட்டு, அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
இக்ராஃவின் கட்டிடப் பணிக்கான வரைபடம் குறித்தும், இதுவரை பெறப்பட்டுள்ள ஆயுட்கால உறுப்பினர் தொகை, வரவேண்டிய தொகை மற்றும் கட்டிட வகைக்காக பெறப்பட்டுள்ள நிதி போன்ற விபரங்களை விளக்கப்பட்டது. அப்போது கத்தார் காயல் நல மன்றத்தின் சார்பாக இக்ராஃ பொதுக்குழுக் கூட்டத்தில் வாக்களிக்கப்பட்ட இக்ராஃவின் கட்டிட துவக்க நிதி ரூபாய் 51,000/- ஐ கத்தார் காயல் நல மன்றத்தின் தலைவர் எம்.என்.முஹம்மது யூனுஸ் மற்றும் முன்னாள் தலைவர் ஹாஜி எஸ்.ஏ.எஸ்.பாஸுல் கரீம் ஆகியோர் இக்ராஃ தலைவர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் அவர்களிடம் வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து இனி இக்ராஃவின் மூலம் நடப்பாண்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் மற்றும் நிகழ்ச்சிகள் குறித்தும், கட்டிட பணிகளுக்கு நிதி சேகரிக்க வேண்டிய முறைகள், கல்வி உதவித் தொகை வழங்குவதில் கடைபிடிக்கப்படவேண்டிய முறைகள் குறித்தும் நீண்ட கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றன . அதனடிப்படையில் கீழ்க்கண்டவற்றை செயல்படுத்திட முடிவு செய்யப்பட்டது.
>>> IQRA Scholarship பற்றிய feed back ஐ உலக காயல் நல மன்றங்களுக்கு தெரிவிப்பது.
>>> வரி விலக்கு பிரிவு 12 AA , 80G போன்றவற்றை பெற்றிட துரிதப்படுத்துவது.
>>> சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பாக, இக்ராஃ தலைவரால் Propose செய்யப்பட்ட ''IQRA DAY'' குறித்து அனைத்து காயல் நல மன்றங்களுக்கும் தெரிவித்து, நடைமுறை சாத்தியம் உள்ளவர்கள் அதனை மேற்கொள்ள வேண்டுகோள் வைப்பது.
>>> இக்ராஃவின் நிதியாதாரத்தை பெருக்கிடும் பொருட்டு உள்ளூரில் ladies volunteers மூலம் இக்ராஃவின் கல்விச் சேவைகள் குறித்து விளக்கி, நிதியைப் பெற முயற்சிப்பது. அத்துடன் கல்வி ஆர்வலர்கள் மற்றும் கல்விக் கொடையாளர்களை கண்டறிந்து அவர்கள் மூலம் நிதி சேகரிப்பது.
>>> இக்ராஃ பத்தாண்டு மலர் வெளியிட முயற்சிகள் மேற்கொள்வது.
>>> இக்ராஃ ஆயுட்கால உறுப்பினர்களாக (Life Membership ) 200 பேர் வரை இணைத்திட முயற்சிகள் மேற்கொள்வது.
>>> சந்தியுங்கள் மாநிலத்தின் முதல் மாணவர்களை (Meet The State Topper ) நிகழ்ச்சியை மேலும் மெருகூட்டி,மேலும் பயனுள்ளதாக மாற்றியமைத்திட ஆலோசிப்பது. மற்றும் இந்த நிகழ்ச்சிக்கான அணுசரணையை (Sponsor ) கல்வி நிறுவனங்கள் அல்லாத வியாபார நிறுவனங்களிடம் கேட்டுப் பெற முயற்சிப்பது.
>>> நகர பள்ளிகளுக்கிடையிலான கலை, விளையாட்டு, வரைபடம் (Drawing ) மற்றும் பேச்சுப் போட்டிகளை நடத்திடுவது குறித்து பள்ளித் தலைமையாசிரியர்களுடன் கலந்தாலோசித்து அதன்படி செயலாற்ற முயற்சிகள் மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.
தீர்மானங்கள்:
பங்கேற்றோரின் கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து, கீழ்க்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 – முழு கல்வி உதவித்தொகை:
நடப்பாண்டு (2016-17) கல்வி உதவித்தொகைக்காக தேர்வு செய்யப்படும் மாணவர்களில் குறைந்தது இரண்டு அல்லது மூன்று மாணவர்களுக்கு Full scholarship - loan basis முறையில் வழங்கிட முயற்சிப்பது என்றும், அடுத்த ஆண்டு (2017-18) முதல் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் அனைவர்களுக்கும் வட்டியில்லா கடன் (Interest free loan) அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்குவது என்றும், மாணவிகளுக்கு வழமை போல் கல்வி உதவித் தொகை வழங்குவது எனவும் இக்கூட்டம் ஏக மனதாக தீர்மானிக்கிறது.
தீர்மானம் 2 – சொந்தக் கட்டிடப் பணிகள்:
இக்ராஃவின் கட்டிட வரைபடம் (Plan) இறுதி செய்யப்பட்டதும் சதுர அடி (square feet ) கணக்கிலும், Roomwise, Blockwise கணக்கிலும் பிரித்து Quotation பெறுவது என்றும், கட்டிட நிதி வழங்குபவர்கள் அவர்களது வசதிக்கு ஏற்ப வழங்க வழிவகைகள் செய்திட வேண்டுமெனவும், அறையாக (Room ) அல்லது Block ஆக கட்டித்தர விருப்பம் தெரிவிப்பவர்கள் தனியாகவோ அல்லது இரண்டு மூன்று நபர்கள் கூட்டாகவோ அவர்களால் கட்டித்தரப்படும் அறையில் அன்பளிப்புச் செய்பவர் (Donated By) பெயரை பொறித்திட இக்கூட்டம் ஏகமனதாக ஒப்புதல் அளிக்கிறது.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இறுதியாக இக்ராஃ செயற்குழு உறுப்பினரும், பஹ்ரைன் காயல் நல மன்றத்தின் பிரதிநிதியுமான ஆசிரியர் எஸ்.எம்.அஹமது சுலைமான் அவர்கள் நன்றியுரை கூற, இக்ராஃ மற்றும் ரியாத் காயல் நல மன்றத்தின் முன்னாள் தலைவரான அல்ஹாபிழ் எம்.ஏ.ஷேக் தாவூது இத்ரீஸ் அவர்களின் துஆவைத் தொடர்ந்து, ஸலவாத் - கஃப்பாராவுடன் கூட்டம் இரவு 09:35 மணியளவில் இறையருளால் இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்!
பங்கேற்றோர்:
எம்.ஏ.செய்யது இபுராஹீம் (செயலர், ஜித்தா காயல் நல மன்றம்), எம்.எம்.செய்யது இஸ்மாயில் (செயலர்,தம்மாம் காயல் நல மன்றம்), கே.எஸ்.டி .முஹம்மது அஸ்லம் (பொருளாளர், கத்தார் காயல் நல மன்றம்), அல்ஹாபிழ் எம்.ஏ.ஷேக் தாவூது இத்ரீஸ்(முன்னாள் தலைவர், ரியாத் காயல் நல மன்றம்), எம்.இ .எல்.நுஸ்கி (முன்னாள் தலைவர்,ரியாத் காயல் நல மன்றம்), எம்.எஸ்.செய்யித் முஹம்மது (முன்னாள் செயலர், தாய்லாந்து காயல் நல மன்றம்), வி.எஸ்.டிசேக்னா லெப்பை (தலைவர், அபுதாபி காயல் நல மன்றம்), டாக்டர் ஹமீது யாஸிர் (அபுதாபி காயல் நல மன்றம்), எஸ்.ஹெச்.அப்துல் காதர் (ஜித்தா காயல் நல மன்றம்),சாளை எஸ்.நவாஸ் (சிங்கப்பூர் காயல் நல மன்றம்), எம்.பி.ஷேக் தாவூது (தம்மாம் காயல் நல மன்றம்), ஏ.எஸ்.பாஸுல் கரீம் (தாய்லாந்து காயல் நல மன்றம்) ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
நிறைவில் இக்ராஃ தலைவர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் அவர்களது அனுசரணையில் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் இரவுணவுப் பொதி வழங்கப்பட்டது. கலைந்து செல்லும் முன் அனைவரும் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
A.தர்வேஷ் முஹம்மத்
நிர்வாகி
இக்ராஃ கல்விச் சங்கம் - காயல்பட்டினம்
இக்ராஃ கல்விச் சங்கத்தின் முந்தைய செயற்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
இக்ராஃ கல்விச் சங்கம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[செய்தி திருத்தப்பட்டது @ 09:07 / 12.08.2016.] |