காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் நிதியாதாரத்தைப் பெருக்கிட, சிங்கப்பூர் காயல் நல மன்றம் சார்பில் “இக்ராஃ நாள்” அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அதன் செயற்குழுவில் அறிவிக்கப்பட்டுள்ளதோடு, நடப்பு கல்வியாண்டில் வழங்கப்படும் இக்ராஃ கல்வி உதவித்தொகை வகைக்காக ஒரு லட்சம் ரூபாய் நிதியொதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் செயலாளர் கே.எம்.என்.மஹ்மூத் ரிஃபாய் வெளியிட்டுள்ள அறிக்கை:-
இறையருளால் எமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டம், 05.08.2016. வெள்ளிக்கிழமையன்று 19.45 மணியளவில், மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.
ஆலோசகர் பாளையம் முஹம்மத் ஹஸன் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். துணைத்தலைவர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் அனைவரையும் வரவேற்றுப் பேசியதுடன், கடந்த மாத செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீதான நடவடிக்கைகள் குறித்தும் விளக்கிப் பேசி, இதுநாள் வரையிலான மன்றத்தின் வரவு-செலவு கணக்கறிக்கையையும் கூட்டத்தில் சமர்ப்பித்தார்.
கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட அம்சங்களும், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும்:-
>>> முதியோர் நல உதவித் திட்டம் குறித்த நடப்புத் தகவல்களை, அதன் பொறுப்பாளர் எஸ்.ஐ.எஸ்.ஜக்கரிய்யா விவரித்தார்.
2016ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 2017ஆம் ஆண்டு செப்டம்பர் வரையிலான ஓராண்டுப் பருவத்திற்காக, 6 முதியோர் பயனாளியருக்கு உதவித்தொகை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், தகுதியுள்ள புதிய பயனாளிகளைத் தெரியப்படுத்துமாறு உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் மின்னஞ்சல் அனுப்பப்படவுள்ளதாகவும் அவர் கூறியதோடு, இத்திட்டத்திற்காக 1 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் நிதியை வழங்கியுதவியமைக்காக, உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.
அண்மையில் காயல்பட்டினத்திற்குத் தான் சென்றிருந்தபோது பங்கேற்ற பொதுநல நடவடிக்கைகள் குறித்து, துணைத்தலைவர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் விவரித்தார்.
>>> ஷிஃபா கலந்தாலோசனைக் கூட்ட விபரங்கள், அதில் கலந்தாலோசிக்கப்பட்டவை, மேற்கொள்ளப்பட்ட முடிவுகள்...
>>> வரும் ஹஜ் பெருநாளை முன்னிட்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ள அத்தியாவசிய சமையல் பொருளுதவி வினியோகத் திட்டத்தை ஒருங்கிணைக்க, சோனா அபூபக்கர் ஸித்தீக் வசம் பொறுப்பளிக்கப்பட்டது.
>>> உறுப்பினர் உண்டியல் நிதி திட்டத்தின் கீழ், பெறப்பட்ட உண்டியல்கள் நடப்பு கூட்டத்தின்போது உடைக்கப்பட்டு, நிதி எண்ணப்பட்டது.
சேகரிக்கப்பட்டுள்ள மொத்த நிதித் தொகை விபரம் குறித்து, மன்றத்தின் அடுத்த செயற்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்படும்.
>>> இக்ராஃவின் நடப்பு பருவத்திற்கான தலைமைப் பொறுப்பு சிங்கப்பூர் காயல் நல மன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளமை குறித்தும், தலைவர் பொறுப்பிற்கு தன்னைத் தேர்ந்தெடுத்து - சமூக சேவையாற்றிட கூடுதல் வாய்ப்பளித்தமைக்காக உறுப்பினர்கள் யாவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் துணைத்தலைவரும், இக்ராஃ தலைவருமான எம்.எம்.மொகுதூம் முஹம்மத் கூறினார்.
24.07.2016. அன்று, தனது தலைமையில் நடைபெற்ற இக்ராஃவின் செயற்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டவை, அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களையும் அவர் இக்கூட்டத்தில் உறுப்பினர்களுக்கு விவரித்துப் பேசினார்.
>>> இக்ராஃ கல்விச் சங்கத்தின் நடப்பாண்டு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்காக, சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் பங்களிப்பாக 1 லட்சம் ரூபாய் நிதியொதுக்கீடு செய்ய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
>>> இக்ராஃ கல்விச் சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட படி, இந்த மாத இறுதிக்குள் “இக்ரா நாள்” திட்டத்தை சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில் அறிமுகப்படுத்தவும், அத்தகவலை அனைத்து உறுப்பினர்களுக்கும் முறைப்படி தெரிவிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ், உறுப்பினர்கள் - வரும் ஈதுல் அழ்ஹா (ஹஜ் பெரு)நாளன்று நடைபெறும் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சியின்போது தாமாக முன்வந்து நன்கொடைகளை வழங்கலாம் என்றும், இதன் மூலம் சேகரிக்கப்படும் நிதித் தொகை இக்ராஃவின் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்காக சமர்ப்பிக்கப்படும் என்றும் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
பங்கேற்றோர் கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து, நன்றியுரைக்குப் பின், எம்.எஸ்.அபுல் காஸிம் துஆவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கை கா.ந.மன்றத்தின் முந்தைய (மே மாத) செயற்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
சிங்கை கா.ந.மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |