காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில், மருத்துவமனைக்குத் தேவையான வசதிகளை - அரசு, பொதுமக்கள் இணைந்து நிறைவேற்றுவது குறித்து கலந்தாலோசித்து முடிவெடுப்பதற்காக, நோயாளிகள் நலச் சங்கம் இயங்கி வருகிறது.
அதன் கலந்தாலோசனைக் கூட்டம், இன்று காலை 11.00 மணியளவில் மருத்துவமனை கூட்டரங்கில் நடைபெற்றது. அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் ராணி கூட்ட அறிமுகவுரையாற்றினார்.
தண்ணீர் சுத்திகரிப்புக் கருவி 2, குழந்தைகளின் இதயத்துடிப்பைக் கண்டறிய உதவும் கருவி, குடிநீரை சூடாக்கும் கருவி, சாமான்களைப் பாதுகாக்க இரும்பு பீரோ, நாற்காலிகள் ஆகிய பொருட்கள் அரசு மருத்துவமனைக்கு உடனடியாகத் தேவைப்படுவதாகவும், நோயாளிகள் காத்திருப்பு அறை, சிகிச்சை அறைகளில் பராமரிப்புப் பணிகள் செய்வதற்கும் உதவிகள் தேவைப்படுவதாகவும் அவர் கூறினார்.
அரசு மருத்துவமனையின் இந்த நோயாளிகள் நலச் சங்கத்திற்கு, திருச்செந்தூர் கோட்டாட்சியர் தலைவராகவும், காயல்பட்டினம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் செயலாளராகவும், நகராட்சி ஆணையர், அரசு மருத்துவமனையை உள்ளடக்கிய பகுதிகளைச் சேர்ந்த 2 நகர்மன்ற உறுப்பினர்கள் அதன் உறுப்பினர்களாகவும் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய திருச்செந்தூர் கோட்டாட்சியர் தியாகராஜன், நோயாளிகள் நலச் சங்கத்தின் நோக்கம், செயல்திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினார்.
அரசு மருத்துவமனைக்குத் தேவைப்படும் வசதிகளை அரசு நிதி, பொதுமக்கள் தரும் நிதி ஆகிய இரண்டையும் கொண்டு செய்து முடிப்பதே இச்சங்கத்தின் நோக்கமெனக் கூறிய அவர், இதுநாள் வரை - கேட்காலமலேயே தேவையான உதவிகளைச் செய்துகொண்டிருப்பதற்காக நகரின் தனவந்தர்கள், தன்னார்வலர்கள் அனைவருக்கும் நன்றி கூறியதோடு, இனியும் தேவைப்படும் உதவிகளையும் அரசுடன் இணைந்து தாராளமாகச் செய்து தருமாறும் கேட்டுக்கொண்டார்.
இரண்டு கழிப்பறைகள் கட்டித் தந்தமை, மின் விசிறிகள், மருத்துவ பரிசோதனைக் கருவிகள் உள்ளிட்டவற்றை அண்மையில் வாங்கித் தந்தமைக்காக நகரப் பிரமுகர்களுக்கு அவர் நன்றி கூறினார்.
இக்கூட்டத்தில், நகரப் பிரமுகர்கள், தன்னார்வலர்கள், பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினர். காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ம.காந்திராஜன் நன்றி கூறினார்.
தகவல்:
M.A.K.ஜைனுல் ஆப்தீன்
அரசு மருத்துவமனை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|