காயல்பட்டினத்தில் “இறைவழி மருத்துவம் - தமிழ்நாடு” குழுமத்தால் நடத்தப்பட்ட கலந்துரையாடல் & அக்குபஞ்சர் மருத்துவ சிகிச்சை முகாமில் திரளானோர் பங்கேற்றுள்ளனர். இதுகுறித்து, முகாம் ஏற்பாட்டுக் குழுவின் சார்பில் அ.ர.ஹபீப் இப்றாஹீம் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-
காயல்பட்டினம் மரைக்கார் பள்ளித் தெருவில் இருக்கும் முஹ்யித்தீன் பெரிய கல் தைக்காவில், 31.07.2016 (ஞாயிறு) அன்று ”இறைவழி மருத்துவக் கலந்துரையாடல் மற்றும் சிகிச்சை முகாம்” நடைபெற்றது.
இந்நிகழ்வை ’இளைஞர் ஐக்கிய முன்னணி (Youth United Front, சுருக்கமாக YUF)’ மற்றும் ’நஹ்வியப்பா நற்பணி மன்றம்’ ஆகிய சமூக நல அமைப்புகளுடன் இணைந்து ’இறைவழி மருத்துவக் குழுமம் – தமிழ்நாடு’ ஏற்பாடு செய்திருந்தது.
ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனி இடவசதி செய்யப்பட்டிருந்த இம்முகாமை, இறைவழி மருத்துவக் குழுமத்தின் உறுப்பினரான பி.எஸ்.ஷாஹுல் ஹமீத் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய ஒய்.எஸ்.ஃபாரூக் வரவேற்புரையாற்றினார்.
இறைவழி மருத்துவக் குழும நிர்வாகிகளுள் ஒருவரான எஸ்.கே.ஸாலிஹ், குழுமத்தின் செயல்பாடுகளையும், இம்முகாமின் நோக்கத்தையும் விளக்கியதோடு; ”உடலில் உள்ள கழிவுகளின் தேக்கமே நோய்கள்! அக்கழிவுகளை உடலே வெளியேற்றிட நாம் அனுமதிக்க வேண்டும்,” என்ற இறைவழி மருத்துவத்தின் அடிப்படைத் தத்துவத்தையும் வலியுறுத்திப் பேசினார்.
’கம்பம் அக்குபஞ்சர் கல்விச் சாலையில் (Cumbum Academy of Acupunture)’ பயிற்சி பெற்று, மருந்தில்லா மருத்துவ முறையில் சிறப்பறிவு வாய்த்த அக்குஹீலர்களான சக்தி பகதூர் (திருவண்ணாமலை), காஜா முஹ்யித்தீன் (சென்னை), ஹாஃபிழ் இம்தியாஸ் அஹ்மத் (சென்னை) ஆகியோரும், பெண்களின் தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு சிறப்பு ஆலோசனைகளை கூறவல்ல பெண் ஹீலரான கவ்ஸர் பானு (திருவண்ணாமலை) ஆகியோர் - தத்தம் அறிமுகங்களுடன், உடல் நலம் குறித்த சிற்றுரைகளை வழங்கினர்.
சிற்றுரைகளின் சாராம்சம்!
>>> உடலே மருத்துவர்: மனித உடல் தன்னைத் தானே சீரமைத்துக் கொள்ளும் ஆற்றலுடையது.
>>> உடலின் உள்ளுறுப்புகளில் தேக்கமடைந்துள்ள கழிவுகளும், சக்தி ஓட்டப் பாதையில் ஏற்படும் தடையுமே நோயாகும். அதை சரிசெய்யக் கூடிய புள்ளியைத் தூண்டுவதே இறைவழி மருத்துவத்தின் சிகிச்சை முறை ஆகும்.
>>> உடலின் இயல்பான தேவைகளாகிய பசி – தாகம் – தூக்கம் - ஓய்வு ஆகியவற்றை முறைப்படுத்தினாலே பிணிகள் இல்லாத உடல் ஆரோக்கியத்தை நிலைப்படுத்த முடியும்.
>>> பசித்துப் புசித்தல், தாகம் ஏற்படும் பொழுது நீர் அருந்துதல், இரவில் சீக்கிரமே தூங்குவது மற்றும் உடலின் தேவைக்கேற்ப ஓய்வு எடுத்தல் ஆகியவற்றை இம்முறையில் சிகிச்சை பெறுபவர் பேண வேண்டும்.
>>> ஒரு நோயாளிக்கு ஏற்படும் தொந்தரவு, அவரது நோயின் அறிகுறியே ஆகும். ஆங்கில (அலோபதி) மருத்துவ முறையில், இந்த அறிகுறியையே நோயாகக் கருதி சிகிச்சை அளிக்கின்றனர்; ஆனால், இறைவழி மருத்துவமோ - நோயின் மூல காரணத்தைக் கண்டறிந்து, அதனைச் சீராக்கி, பிணியை போக்குகிறது.
>>> நோயின் தொந்தரவுகளை நம் மூளையையும், நரம்பு மண்டலத்தையும் எட்டாதவாறு ஆங்கில மருந்துகள் தடுக்கின்றனவே தவிர, நோய்களை அவை குணப்படுத்தவில்லை.
>>> பக்க விளைவுகள் இல்லாத அலோபதி மருந்துகளே கிடையாது. அலோபதியின் எந்த மருந்துப் பொருளையும், www.drugs.com என்ற இணையதளத்தில் பெயரிட்டுத் தேடினால், அதன் பக்க விளைவுகள் குறித்த தகவல்களைப் பெற முடியும்.
>>> இரத்தக் கொதிப்பு (blood pressure, சுருக்கமாக BP) என்பது ஒரு நோயே அல்ல. ஏதேனும் ஒரு உறுப்பில் சேதம் ஏற்பட்டால், அதை நிவர்த்தி செய்ய இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. ஆனால், இதனை ஒரு இருதயம் சார்ந்த நோயாகவே கருதும் ஆங்கில மருத்துவமோ, பழுதடைந்து வரும் ஒரு உறுப்பில் மேலும் பாதிப்பினை ஏற்படுத்துகிறது.
>>> சர்க்கரை நோயின் அடிப்படைக் காரணமான - தரம் குறைந்த குளுக்கோஸை இறைவழி மருத்துவ சிகிச்சையின் மூலம் கட்டுப்படுத்தினால், இன்சுலின் சுரப்பதை அதிகரிக்க முடியும்.
>>> தடுப்பு ஊசி நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்காமல், அதனை பலவீனப்படுத்துகிறது.
>>> குழந்தை பாக்கியம் பெற்று கருவுற்றிருக்கும் ஓர் பெண்ணின் கர்ப்ப காலத்தை, ஆங்கில மருந்துகள் நோயுற்ற காலமாக மாற்றி, கருவுற்ற நாள் முதல் பிரசவ நாள் வரையும், அதற்குப் பிறகு பல மாதங்களும் அவர்களை அலோபதி மருந்துக்களை உட்கொள்ள வலியுறுத்துகிறது..
>>> தனது மனைவிக்கு வீட்டிலேயே நிகழ்ந்த சுகப் பிரசவ அனுபவத்தை அக்குஹீலர் இம்தியாஸ் பகிர்ந்து கொண்டார்.
>>> நோயினால் மரணம் ஏற்படுவதில்லை; மரணத்திற்கான காரணியாக சில நேரங்களில் நோய் அமையலாம்.
இவ்வாறாக, அக்குஹீலர்களது உரைகளின் உள்ளடக்கம் அமைந்திருந்தது.
பார்வையாளர்களுடன் கலந்துரையாடல்:
சிற்றுரைகளைத் தொடர்ந்து, முகாமில் கலந்து கொண்டவர்களின் பல்வேறு உடல்/மன நலம் சார்ந்த கேள்விகளுக்கு அக்குஹீலர்கள் விளக்கமாக பதிலளித்தனர். அவற்றில், இம்மருத்துவ முறை குறித்த அடிப்படை விஷயங்கள் குறித்துப் புரிய உதவும் ஒரு சில கேள்விகளும், அவற்றுக்கான விளக்கங்களும் வருமாறு:-
1) அக்குபஞ்சருக்கும் (Acupunture) அக்குப்ரஷருக்கும் (Acupressure) உள்ள வேறுபாடு என்ன?
இரண்டுமே ஒன்றுதான்! இது வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படும் ஒரே மருத்துவ முறையே ஆகும். தேர்வு செய்யப்பட்ட ஒரே ஒரு புள்ளியை கையாலோ அல்லது ஊசியாலோ தொட்டு தூண்டுவது இதன் சிகிச்சை முறையாகும். இது சீனாவில் இருந்து உலகின் பிற பகுதிகளுக்குப் பரவியது.
2) இம்மருத்துவ முறையில், வெறும் 6 வினாடிகள் மாத்திரமே நோயாளியின் நாடியை பிடித்துப் பார்த்து, நோயின் தன்மையை அறிவது எவ்வகையில் சாத்தியமாகிறது?
உடலின் இராஜ உறுப்புகளின் இயக்கத்திற்கு தேவையான சக்தியின் தன்மை, நோயின் தன்மை மற்றும் அதனை சீர்செய்வதற்கு தூண்ட வேண்டிய புள்ளி ஆகிய விபரங்களை நாடிப் பரிசோதனை மூலம் எளிதில் அறிந்து கொள்ள முடியும். அதன் அடிப்படையில், உடலின் சக்தி ஓட்டத்தை சீர்படுத்தி பிணியை களைக்கிறது, இந்த இறைவழி மருத்துவம்.
3) தொலைபேசி அழைப்பின் மூலமாக சிகிச்சை அளிக்கும் (Phone Healing) முறை, ‘வசியம் (hypnotism)’ செய்வது போன்றதா?
நோயாளிக்கு ஏற்படும் தொந்தரவுகளை தொலைபேசி அழைப்பிலேயே கேட்டறிந்து, அதன் மூலக் குறைபாட்டைக் கண்டறிந்து, அதைக் களைவதற்கு தொலைதொடர்பு வழி சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது நிச்சயமாக வசியம் செய்வது அல்ல.
செயல்கள் யாவும் அவற்றின் எண்ணங்களைப் பொருத்தே அமைகிறது. அவ்வகையில், ஒருவர் நோயிலிருந்து மீண்டு வருவது அவரது நம்பிக்கையின் அடிப்படையிலேயே அமைகிறது.
4) முஹம்மது (ஸல்) அவர்கள் தேன், கருஞ்சீரகம் போன்ற உணவுப் பொருட்களை மருந்தாக பரிந்துரைத்தார்களே? ஏன் இறைவழி மருத்துவ முறையில் உணவு பரிந்துரைகள் எதுவும் செய்வதில்லை? உணவே மருந்தாகாதா?
ஒருவர் உண்ணும் உணவுப் பொருள் மற்றவருக்கு ஒவ்வாமல் போகலாம் என்பதால் அக்குஹீலர்கள் யாதொரு உணவையும் பரிந்துரைப்பதில்லை. இறைவழி மருத்துவ முறையில் பசி - தாகம் - தூக்கம் -ஓய்வு ஆகியவற்றை முறைப்படுத்தவே நோயாளிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இதில் வேறு பத்தியங்கள் எதுவும் கிடையாது. ஒருவருக்கு விருப்பமான, சத்தான இயற்கை உணவை சூழ்நிலைக்கு ஏற்றவாறு அவரே தேர்வு செய்து, பசித்துப் புசித்தல் சாலச் சிறந்தது.
முஹம்மது (ஸல்) அவர்கள் மூன்று நாட்களுக்கு மேல் எதுவும் சாப்பிடாமல் நோன்பு நோற்றதும், பேரீட்சம் பழத்தைப் புசித்து நாட்களை கழித்ததும், பல நாட்களுக்கு உண்பதற்கு ஏதும் இன்றி பட்டினி இருந்த செய்திகளையும் நம் வசதிக்கேற்ப மறந்துவிட்டு, அவர்களின் அழகிய வாழ்வில் நமக்கு சாதகமானவற்றை மட்டுமே எடுத்துக் கொள்கிறோம்.
பசித்திருத்தல் நோயை விரட்டும் என்பதற்கு அவர்களது வாழ்வே ஒரு சான்றாகும். அவ்வாறு வாழ்ந்தால், அவர்கள் கூறியது போல் உணவும் மருந்தாகும்.
நிகழ்வுகளை எஸ்.கே.சாலிஹ் நெறிப்படுத்த, நன்றியுரையுடன் நிறைவுற்றது கலந்துரையாடல்.
மருத்துவ சிகிச்சை முகாம்!
மாலையில் நடைபெற்ற மருத்துவ சிகிச்சை முகாமில் சுமார் 90 நபர்கள் பங்கேற்றுப் பயனடைந்தனர். நிகழ்விடம் ஒரு பெண்கள் தைக்காவாக இருந்ததால் - அதிகமான மகளிர் இந்த சிகிச்சையைப் பெறுவதற்கு இலகுவாக இருந்தது எனலாம்.
சிகிச்சை முகாமில் பங்கேற்ற அனைவருக்கும் கம்பம் புத்துயிர் பதிப்பகத்தின் ‘இந்திய அக்குபஞ்சர் - ஒரு வாழ்க்கை அறிவியல்’ என்னும் சிறு நூல் இலவசமாக வழங்கப்பட்டது. இந்நூல் இம்மருத்துவ முறை குறித்த அடிப்படை விஷயங்களை எளிதில் விளக்கவல்லதாக உள்ளது.
சுமார் 7 அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை சிகிச்சை செய்வது நோயிலிருந்து விரைவாக குணமடைய வழி வகுக்கும் என்பதால், அடுத்தடுத்து சிகிச்சை முகாம்களை நடத்துவது குறித்து இறைவழி மருத்துவ Telegram குழுமத்தில் ஆலோசிக்கப்படும் என கூறப்பட்டது. மேலும், தொலைபேசி மூலம் செவிவழி தொடு சிகிச்சையும் வழங்கப்படும் என்றும் முகாமில் பங்குபெற்றவர்களிடம் அறிவிக்கப்பட்டது.
முகாமிலும், சிகிச்சையிலும் சுமார் 20 ஆண்கள், 70 பெண்கள் என மொத்தம் 90 பேர் வரை கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
இறைவழி மருத்துவ குழுமம்!
சுமார் 1.5 ஆண்டுகளுக்கு முன்னர் Watsapp செயலியில் ஆரம்பிக்கப்பட்டு, உறுப்பினர்களின் நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கை (256 பேர்) பூர்த்தியானதால், 5000 பேரை ஒரு குழுமத்தில் உறுப்பினராக்கும் வசதியைக் கொண்ட - Telegram செயலிக்கு மாற்றப்பட்ட இந்த super group-யில், தற்போது 560-க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
உடல் / மன நலம் குறித்து கேட்கப்படும் ஒவ்வொரு கேள்விக்கும் குழுமத்தில் அங்கம் வகிக்கும் அக்குஹீலர்கள், (தங்களது அன்றாட வேலைப் பளுவிற்கு இடையிலும்) சளைக்காமல் பதில் அளிப்பது இக்குழுமத்தின் சிறப்பம்சமாகும்.
இறைவழி மருத்துவ ஆலோசனைகளை நேரடியாக Telegram செயலியில் எந்நேரமும் பெற ஆர்வமுள்ளவர்கள், https://tlgrm.me/joinchat/BTEgED6ZCacEDbt_S0-RAQ என்ற இணையதள முகவரியை தங்களது அண்ட்ராய்டு (Android) கைபேசியின் உலாவியில் (browser) திறந்து, ‘Join Group’ என்பதைச் சொடுக்கி இணைந்து கொள்ளலாம்:
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஹ்யித்தீன் பெரிய கல் தைக்கா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
இளைஞர் ஐக்கிய முன்னணி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
நஹ்வியப்பா நற்பணி மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[செய்தி திருத்தப்பட்டது @ 08:12 / 09.08.2016.] |