இக்ராஃ கல்விச் சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தில், அதன் செயலாளர் & நிர்வாகி ஆகியோரால் சமர்ப்பிக்கப்பட்ட - அமைப்பின் ஆண்டறிக்கை, அண்மைச் செயல்பாடுகள் அறிக்கை ஆகியன இதன் கீழ் தரப்பட்டுள்ளது:-
ஆண்டறிக்கை & அண்மைச் செயல்பாடுகள்:
இக்ராஃவின் கடந்த ஓராண்டு செயல்பாடுகளை உள்ளடக்கிய ஆண்டறிக்கையை, செயலாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீத் சமர்ப்பித்ததுடன், உரை உள்ளடக்கம் குறித்த - பங்கேற்றோர் கேள்விகளுக்கு விளக்கமும் அளித்தார்.
இக்ராஃவின் கடந்த கால & அண்மைச் செயல்பாடுகள் குறித்து, நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத் விளக்கிப் பேசியதுடன், உரை உள்ளடக்கம் குறித்த - பங்கேற்றோர் கேள்விகளுக்கு விளக்கமும் அளித்தார்.
இருவரது உரைகளின் உள்ளடக்கச் சுருக்கம் வருமாறு:-
கல்வி உதவித்தொகை:
>>> உலக காயல் நல மன்றங்கள், கல்வி ஆர்வலர்களின் உதவியுடன், கடந்த (2015-16) கல்வியாண்டில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த - பொருளாதாரத்தில் நலிவுற்றுள்ள 42 மாணவ-மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
B.Com., B.B.A., B.Sc(C.S.), B.C.A., B.Sc.(Hotel Management), Diploma in Mechanical Engineering ஆகிய படிப்புகளுக்காக 14 மாணவர்களுக்கும்,
B.A(English), B.B.A., B.Sc.(IT), B.Sc.(Food Science & Nutrition), B.Sc.(Maths), B.Com.& Aalima ஆகிய படிப்புகளுக்காக 28 மாணவியருக்கும் என மொத்தமாக இந்த 42 மாணவ-மாணவியருக்கும், 10 ஆயிரம், 7 ஆயிரம், 5 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 3 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
இத்தொகையுடன், கல்லூரிகளில் இரண்டாமாண்டு - மூன்றாமாண்டு பயிலும் மாணவ-மாணவியருக்கு வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகையையும் சேர்த்து, மொத்தம் 8 லட்சத்து 46 ஆயிரத்து 500 ரூபாய் கல்வி உதவித்தொகையாக கடந்த 2015-16 கல்வியாண்டில் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வகைக்காக 47 கல்வி ஆர்வலர்கள் அனுசரணையளித்துள்ளனர். (பட்டியல் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.)
>>> ஜகாத் நிதியின் கீழான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், கடந்த ஆண்டு (2015-16) பெறப்பட்ட ஜகாத் நிதி 2 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய்.
இத்தொகையைக் கொண்டு, 24 மாணவர்களுக்கு B.E.(Mechanical, EEE, ECE, Civil), B.Tech.(IT), Automobile, Computer Networking, B.B.A., Chartered Accountant, ஆகிய படிப்புகளுக்காகவும்,
4 மாணவியருக்கு, B.Ed., B.Sc.(Nursing), B.P.T.(Physiotherapy), Diploma in Computer Science ஆகிய படிப்புகளுக்காகவும் ஜகாத் நிதியின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
>>> பொது கல்வி உதவித்தொகை திட்டம், ஜகாத் நிதியின் கீழான கல்வி உதவித்தொகை திட்டம் ஆகிய இரு திட்டங்கள் மூலமாக, கடந்த 2015-16 கல்வியாண்டில் மட்டும் வழங்கப்பட்ட மொத்த கல்வி உதவித்தொகை 10 லட்சத்து 82 ஆயிரத்து 500 ரூபாய் ஆகும்.
>>> இக்ராஃ துவங்கப்பட்ட காலம் தொட்டு, கடந்த 10 ஆண்டுகளாக 626 மாணவ - மாணவியருக்கு வழங்கப்பட்டுள்ள மொத்த கல்வி உதவித்தொகை 79 லட்சத்து 86 ஆயிரத்து 800 ரூபாய் ஆகும். எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்துலில்லாஹ்! (வருட வாரியாக கல்வி உதவித்தொகை வழங்கப்பட்ட விபரப் பட்டியல் கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் அச்சுப் பிரதியாக சமர்ப்பிக்கப்பட்டது.)
>>> மகளிருக்கான கல்வி உதவித்தொகை வினியோகத்தைப் பொருத்த வரை, B.Ed.,Nursing படிப்புகளுக்கு முன்னுரிமையளித்து உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, கடந்த ஆண்டு பி.எட். பயின்ற மாணவி ஒருவருக்கு, இக்ராஃவின் ஜகாத் நிதியின் கீழ் ஒரு பகுதி தொகையும், காயல் நல மன்றங்களின் உதவிகளோடு மற்றொரு பகுதி தொகையும் என மொத்தம் 70 ஆயிரம் ரூபாய் வரை பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
அதற்கு முந்தைய வருடம் ஒரு மாணவிக்கு ரூபாய் நாற்பதாயிரம் ஒரு டிரஸ்ட் மூலம் அளிக்கப்பட்டு மீதம் தேவைப்பட்ட ரூபாய் 40 ஆயிரம் இக்ராஃ மூலம் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.திறமையான அந்த மாணவி பி.எட். பயின்று முடித்த உடனேயே நாமக்கல் நகரிலுள்ள ஒரு பள்ளியில் ரூபாய் 18,500/- மாத ஊதியத்தில் கணித ஆசிரியர் பணியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழாண்டில் ஒரு மாணவரின் பி.எட். முதலாமாண்டு படிப்புக்கென ரூபாய் 65,000/-
M.Sc. (Media and Communication) 2 ஆண்டு கல்விக்காக நிகழாண்டில் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் பயிலும் ஒரு மாணவருக்கு ரூபாய் 60,000/- என இரு மாணவர்களுக்கு, இக்ராஃ ஜகாத் கல்வி உதவித்தொகை மற்றும் சிங்கப்பூர், ரியாத், குவைத் காயல் நல மன்றங்களின் நிதிகளையும் பெற்று அவர்களுக்கான முழுக் கல்விச் செலவுகளையும் (Full scholarship) அளித்திட இக்ராஃ பொறுப்பேற்றுள்ளது.
>>> இக்ராஃவின் பொது கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், நடப்பு கல்வியாண்டிற்கான (2016-17) கல்வி உதவித்தொகை வழங்கப்படுவது குறித்த அறிவிப்பு பிரசுரமாக அச்சிடப்பட்டு நகர் முழுக்க வினியோகிக்கப்பட்டு, அதனடிப்படையில் விண்ணப்பங்களும் வினியோகிக்கப்பட்டு, பூர்த்தி செய்து சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டு, பரிசீலனையில் உள்ளது.
>>> இக்ராஃவின் பொது கல்வி உதவித்தொகை, ஜகாத் நிதியின் கீழான கல்வி உதவித்தொகை ஆகிய திட்டங்களுக்காக இதுவரை அனுசரணையளித்துள்ள நன்கொடையாளர்களின் பெயர் பட்டியல் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, நன்றி தெரிவிக்கப்பட்டது.
பிற தொண்டு நிறுவனங்களின் கல்வி உதவித்தொகையைப் பெற வழிகாட்டல்:
>>> OMEIAT நிறுவனம் உள்ளிட்ட - வெளியிடங்களிலிருந்து வழங்கப்படும் பல்வேறு கல்வி உதவித்தொகைகள் மற்றும் அரசின் உதவித்தொகைகள் குறித்து, காயல்பட்டினத்தைச் சேர்ந்த மாணவ-மாணவியருக்குத் தேவையான தகவல்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதோடு, அதற்கான விண்ணப்பங்களும் பதிவிறக்கம் செய்யப்பட்டு இக்ராஃ அலுவலகத்தில் வினியோகிக்கப்படுகிறது .அதன் பயனாக, பல்வேறு நிறுவனங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான ரூபாய் கல்வி உதவித்தொகையாக மேற்படி மாணவ-மாணவியரால் பெறப்பட்டுள்ளது.
மேலும் கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமில்லாமல் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவியருக்கும் கல்வி உதவித் தொகை குறித்து வழிகாட்டப்படுகிறது. குறிப்பாக கடந்த ஆண்டு 10 ஆம் வகுப்பில் ,நல்ல மதிப்பெண்கள் எடுத்த பல மாணவியருக்கு, மவுலானா ஆஸாத் பவுண்டேஷன் - டெல்லி (மத்திய அரசின் - சிறுபான்மை சமுதாயத்திற்கான கல்வி உதவித்தொகை ) விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து வழங்கி அதனை பூர்த்தி செய்து அனுப்பிட வழிகாட்டப்பட்டு தற்போது பலருக்கும் கல்வி உதவித்தொகைக்கான காசோலை கிடைக்கப் பெற்றுள்ளனர். (இந்த திட்டத்தில் 11 ஆம் வகுப்புக்கு ரூபாய் 6000 மற்றும் 12 ஆம் வகுப்புக்கு ரூபாய் 6000 வழங்கப்படுகிறது).
>>> இக்ராஃ கல்விச் சங்கத்தின் பரிந்துரையில் திருச்சியிலுள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பயிலச் சேரும் - தகுதியுள்ள 3 மாணவர்களுக்குத் தேவையான முழு கல்விச் செலவையும் அக்கல்லூரி நிர்வாகம் பொறுப்பெடுத்துக்கொள்வதாக முன்னரே அறிவித்திருந்தது. இதுகுறித்து, காயல்பட்டினத்தின் மாணவர்களுக்கு - குறிப்பாக வேறு பல கல்லூரிகளில் பயில விண்ணப்பித்து, இக்ராஃவின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு நன்கு எடுத்துக் கூறியும், இன்றளவும் அந்தச் சலுகையைப் பயன்படுத்திட ஒரு மாணவர் கூட ஆயத்தமாகவில்லை எனும் தகவல் இங்கு வருத்தத்துடன் சமர்ப்பிக்கப்படுகிறது.
பத்திரிக்கைகளில் வெளியாகும் கல்வி மேம்பாட்டுத் தகவல்கள், கல்வி உதவித்தொகை தொடர்பான தகவல்கள் அனைத்தும் உடனுக்குடன் பரிசீலிக்கப்பட்டு, மாணவ-மாணவியரின் கவனத்திற்கு எடுத்துச் சொல்லப்படுகிறது.
அதன்படி, “அரசுப் பொதுத்தேர்வை வெற்றிகரமாக எதிர்கொள்வதெப்படி?”, “வெற்றிக்கான மந்திரச் சாவி” ஆகிய தலைப்புகளில் 'புதிய தலைமுறை’ பத்திரிக்கையில் வெளிவந்தவற்றை, இக்ராஃ கல்விச் சங்கத்தால் மறு அச்சிடப்பட்ட - 4 பக்கங்களைக் கொண்ட பிரசுரங்கள் நகரின் அனைத்துப் பள்ளிக்கூடங்களுக்கும், காயல்பட்டினம் - ஆறுமுகநேரி (கே.ஏ.)மேனிலைப்பள்ளிக்கும் நேரடியாகச் சென்று, 10ஆம் - 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ-மாணிவியருக்கு பொதுத் தேர்வுகள் துவங்குவதற்கு முன்பு வினியோகிக்கப்பட்டுள்ளன.
மிகப் பொருத்தமான நேரத்தில் இப்பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளதாவும், அவை நிச்சயம் மிகுந்த பயனளிக்கக் கூடியவை என்றும் - பிரசுரங்களைப் பெற்றுக்கொண்ட மாணவர்களும், ஆசிரியர்களும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை நிகழ்ச்சி:
>>> வழமை போல, தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புடன் இணைந்து, தொடர்ந்து பத்தாவது ஆண்டாக – கடந்த 05.09.2015. அன்று, காயல்பட்டினம் KSC மைதானத்தில் “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை” நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.
அன்று காலையில், மாநில சாதனை மாணவியருடன் - நகர பள்ளிகளின் மாணவ-மாணவியர் கலந்துரையாடல் நிகழ்ச்சியும், மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் - நிகழ்ச்சியை இணைந்து நடத்திய தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அனுசரணையில் மாநில சாதனை மாணவியருக்கும், உலக காயல் நல மன்றங்கள், கல்வி ஆர்வலர்களின் தாராள அனுசரணைகளைக் கொண்டு, உள்ளூர் சாதனை மாணவ-மாணவியருக்கும் பணப்பரிசுகளும் வழங்கப்பட்டுள்ளன.
பரிசளிப்பு விழாவில், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. அஸ்வின் கோட்னிஸ் IPS . சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, இந்நிகழ்ச்சியை வெகுவாகப் பாராட்டிப் பேசியதுடன், மாணவ-மாணவியருக்கு உற்சாகமூட்டும் பயனுள்ள கருத்துக்களையும், பெற்றோர்களுக்கு அறிவுரை கூறியும் சிறப்புரை வழங்கினார்.
KCGCயின் “வெற்றியை நோக்கி...” கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி:
>>> அதே நிகழ்விடத்தில், மறுநாள் (06.09.2015. அன்று) காலையில், (ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட படி,) இக்ராஃ கல்விச் சங்கமும், காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையம் (KCGC) அமைப்பும் இணைந்து, “வெற்றியை நோக்கி...” எனும் தலைப்பில் கல்வி விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டு நிகழ்ச்சியை (Career Guidance Programme ) நடத்தின.
அதில், நமதூரின் அனைத்துப் பள்ளி (10 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும்) மாணவ-மாணவியரையும் பங்கேற்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கில், பள்ளிக்கூடங்களுக்கே நேரடியாகச் சென்று, அழைப்புக் கடிதம் வழங்கி, நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பும் மாணவ-மாணவியரின் - பூர்த்தி செய்யப்பட்ட ஒப்புதல் படிவமும் பெறப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஒப்புதல் தந்த மாணவ-மாணவியரின் மொத்த எண்ணிக்கை 1200 வுக்கும் மேல். ஆனால், நிகழ்ச்சியில் கலந்துகொண்டதோ வெறும் 200 மாணவ-மாணவியர் மட்டுமே! பங்கேற்றோரிலும் மாணவியரே அதிகம் (125). மாணவர்களின் வருகையோ (75) மிகவும் மோசமான நிலையிலிருந்தது.
வெளியூர்களில் படிக்கவும், வெளியூர் - வெளிநாடுகளில் பணியாற்றவும் செல்வோர் மாணவர்களே அதிகம் என்பதால், அவர்களின் வருகை அதிகளவில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மிகக் குறைவாக அவர்கள் வந்தது, இந்நிகழ்ச்சிக்காக நீண்ட நாட்களாகப் பாடுபட்டு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருவதாக ஒப்புதலளித்த 1200 மாணவ-மாணவியருக்குத் தேவையான சிற்றுண்டி - குளிர்பான ஏற்பாடுகள் அனைத்தையும் வீணாக்கி, ஏற்பாட்டாளர்களின் மனதையும் பெரிய அளவில் வேதனைப்படுத்திவிட்டது.
கத்தர் கா.ந.மன்றத்தின் பள்ளிகளுக்கிடையிலான வினாடி-வினா போட்டி:
>>> அதே நாள் (06.09.2015. அன்று) மாலையில், அதே நிகழ்விடத்தில் - கத்தர் காயல் நல மன்றம் சார்பில், இக்ராஃ கல்விச் சங்கம் & தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகளுடன் இணைந்து, நகர பள்ளிகளுக்கிடையிலான பொது அறிவு வினாடி-வினா (Inter School Quiz Competition) நடத்தப்பட்டது. காயல்பட்டினம் நகரின் அனைத்துப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் வென்றோருக்கு பரிசுகள், சான்றிதழ்கள், கோப்பைகள், நுழைவுத் தேர்வில் தகுதி பெற்ற அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
கத்தர் கா.ந.மன்றத்தின் பள்ளிச் சீருடை இலவச வினியோகம்:
>>> கத்தர் காயல் நல மன்றம் சார்பில் இக்ராஃ கல்விச் சங்கத்துடன் இணைந்து ஆண்டுதோறும் - காயல்பட்டினம் நகரின் ஏழை மாணவ-மாணவியருக்காக வழங்கப்படும் பள்ளிச் சீருடை இலவச வினியோகத் திட்டத்தின் கீழ் கடந்த 2015-16 கல்வியாண்டில், 100 மாணவ-மாணவியருக்கு, தேர்ச்சி பெற்ற தையல்காரர்களைக் கொண்டு தனித்தனியே அளவெடுக்கப்பட்டு, 200 செட் பள்ளிச்சீருடைகள் தைத்து இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
தலைமையாசிரியர்களுடன் கலந்தாலோசனை:
>>> காயல்பட்டினம் நகர மாணவ-மாணவியரின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்குத் தேவையான ஆலோசனைகளைப் பெறுவதற்காக, இக்ராஃ கல்விச் சங்கத்தின் முந்தைய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட படி, நகர பள்ளிகளின் தலைமையாசிரியர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம், 12.12.2015. அன்று, காயல்பட்டினம் கீழ நெய்னார் தெருவில், இக்ராஃ கல்விச் சங்க அலுவலகம் எதிரிலுள்ள கலீஃபா அப்பா தைக்கா வளாகத்தில் நடத்தப்பட்டது.
இக்ராஃ கல்விச் சங்கத்தின் சார்பில், அதன் கல்வி நிகழ்ச்சிக் குழு ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் எம்.ஏ.புகாரீ அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், இக்ராஃ செயலாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீத், இணைச் செயலர்களான என்.எஸ்.இ.மஹ்மூது, எஸ்.கே.ஸாலிஹ், பொருளாளர் கே.எம்.டீ.சுலைமான், மூத்த செயற்குழு உறுப்பினர்களான பேராசிரியர் கே.எம்.எஸ்.சதக்கு தம்பி, ஏ.கே.கலீல், எம்.ஏ.எஸ்.ஜரூக், நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத் ஆகியோரும்,
எல்.கே.மேனிலைப்பள்ளி, அரசு மகளிர் மேனிலைப்பள்ளி, முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் இக்கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்று, கவனமாகக் கருத்தில் கொள்ளத்தக்க பல ஆலோசனைகளை கூட்டத்தின்போது வழங்கினர்.
நகர மாணவ-மாணவியரின் கல்வித் தரத்தை மேம்படுத்தல், ஆசிரியர்கள் - மாணவர்கள் - பெற்றோர் சந்திக்கும் பிரச்சினைகள், அவற்றுக்கான தீர்வுகள் குறித்து இக்கலந்தாய்வுக் கூட்டத்தில் விரிவாக கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
இக்கருத்துப் பரிமாற்றங்களின் அடிப்படையில், வருங்கால செயல்திட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
அபூதபீ கா.ந.மன்றத்தின் உளவள கலந்தாய்வு நிகழ்ச்சிகள்:
அதன் ஒரு பகுதியாக, மாணவ-மாணவியருக்குத் தனியாகவும், ஆசிரியர்களுக்குத் தனியாகவும், பெற்றோருக்குத் தனியாகவும் உளவள கலந்தாய்வு (கவுன்சிலிங்) நிகழ்ச்சிகளை நடத்திட திட்டமிடப்பட்டது.
அதன்படி, 09.01.2016. அன்று, காயல்பட்டினம் ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸில், அபூதபீ காயல் நல மன்றம் & இக்ராஃ கல்விச் சங்கம் ஆகியன இணைந்து,
“செதுக்கும் செம்மல்கள்” எனும் தலைப்பில் நகரின் அனைத்துப் பள்ளி ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங் நிகழ்ச்சியைக் காலையிலும்,
“தடைகளைத் தாண்டி” எனும் தலைப்பில், பெற்றோர்களுக்கான கவுன்சிலிங் நிகழ்ச்சியை அன்று மாலையிலும் நடத்தின.
இவ்விரு கருத்தரங்கங்களையும், புகழ்பெற்ற உளவள பயிற்சியாளரும், Life Improvement Mind Engineering - LIME அமைப்பின் நிறுவனருமான திரு. ஆர்.கணேஷ் திறம்பட நடத்தினார். இக்கருத்தரங்கங்கள் மிகுந்த பயனளிப்பதாய் இருந்ததாக பங்கேற்ற ஆசிரியர்களும், பெற்றோரும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
தம்மாம் கா.ந.மன்றத்தின் ஆங்கில பேச்சுப் பயிற்சி:
>>> வெளியூர் - வெளிநாடுகளில் தம் படிப்புக்கேற்ற தரமான வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கு மாணவர்களுக்கு ஆங்கில பேச்சுப் பயிற்சி மிகவும் அவசியம். இதைக் கருத்திற்கொண்டு, தம்மாம் காயல் நல மன்றம் & இக்ராஃ கல்விச் சங்கம் ஆகியன இணைந்து, கடந்த கோடை விடுமுறையின்போது, மே 05 முதல் 30ஆம் நாள் வரை, “2016 Summer Spoken English Coaching Programme” எனும் தலைப்பில், ஆங்கில பேச்சுப் பயிற்சி தொடர் வகுப்புகள் மாணவர்களுக்குத் தனியாகவும், மாணவியருக்குத் தனியாகவும் நடத்தப்பட்டுள்ளன. இதில், 22 மாணவர்களும், 12 மாணவியரும் பங்கேற்றுப் பயன்பெற்றுள்ளனர்.
இந்நிகழ்ச்சியை ஆண்டுதோறும் கோடை விடுமுறையின்போது நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. (சென்ற வருடத்திற்கு முந்தைய வருடம் இதே போன்ற கோடைகால ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி நடத்தப்பட்டது. அதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் ஆர்வத்துடன் கலந்து பயன்பெற்றது இங்கே நினைவுகூரத்தக்கது).
அரசுத்துறை சார் படிப்புகள் குறித்த விழிப்புணர்வு:
>>> அரசுத் துறை சார்ந்த உயர் பதவிகளைப் பெற்றிடத் தேவையான I.A.S., I.P.S., I.F.S., TNPSC உள்ளிட்ட படிப்புகள் மீது மாணவர்களுக்கு ஆர்வமூட்டுவதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அது தொடர்பான அமைப்புகளையும், நிபுணர்களையும் தொடர்புகொண்டு, பொருத்தமான நேரங்களில் விழிப்புணர்வு செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
அதுபோல, இன்ஷாஅல்லாஹ் விரைவில் துவக்கப்படவுள்ள இக்ராஃவின் சொந்தக் கட்டிடத்தில், TNPSC படிப்புக்கான வழிகாட்டு ஆலோசனைகளை வழங்குதவற்காக என தனிப் பிரிவும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
ரியாத் கா.ந.மன்றத்தின் துவக்கப்பள்ளி மேம்பாட்டுத் திட்டம்:
>>> ரியாத் காயல் நல மன்றத்தின் சார்பில், Primary School Welfare Project - துவக்கப்பள்ளி மேம்பாட்டுத் திட்டம் எனும் பெயரில் திட்டம் வடிவமைக்கப்பட்டு, அதன்படி, காயல்பட்டினம் ஓடக்கரை, மங்களவாடி (தேங்காய்பண்டக சாலை), அருணாச்சலபுரம், அலியார் தெரு, சிவன்கோயில் தெரு, ரத்தினபுரி உள்ளிட்ட அகநகர் - புறநகர்களிலுள்ள துவக்கப்பள்ளிகளுக்குத் தேவையான சுற்றுச் சுவர், தண்ணீர் மோட்டார் பம்ப்செட், வாட்டர் ஃபில்டர், மின் விசிறிகள், பெஞ்ச், டெஸ்க், டிவி, டிவிடி - ஆசிரியர்களுக்கு தேவையான சேர் உள்ளிட்ட உதவிகள் நிறைவாக செய்துகொடுக்கப்பட்டுள்ளது. மாணவ- மாணவியருக்குத் தேவையான பள்ளிச் சீருடைகள், காலணிகள்,பாட நோட்டுகள், உணவருந்துவதற்கான ஸ்டீல் தட்டுகள், டம்ளர்கள் ஆகியவைகளும் வழங்கப்பட்டுள்ளன.
கத்தர் கா.ந.மன்றத்தின் சார்பில் ஏழை மாணவியருக்கு உதவி:
இது தவிர சமீபத்தில் கத்தர் காயல் நல மன்றம் சார்பில், அரசு மகளிர் மேனிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் ஏழை-எளிய மாணவியருக்குத் தேவையான பாடக் குறிப்பேடுகளும், இதர வகுப்பறை பயன்பாட்டுப் பொருட்களும் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.
தம்மாம் கா.ந.மன்றம் சார்பில் பள்ளி மேற்கூரை சீரமைப்பு:
அதே அரசு மகளிர் மேனிலைப் பள்ளியில் மேற்கூரை இடிந்து விழுந்து பயன்றுக் கிடந்த வகுப்பறையை தம்மாம் காயல் நல மன்றத்தின் பொருளுதவியுடன் சரிசெய்யப்பட்டு தற்போது அந்த அறையில் வகுப்பு நடைபெற்று வருகிறது.
பள்ளிகளுக்கு உதவிய மன்றங்கள் & ஆர்வலர்கள்:
இக்ராஃவின் ஒருங்கிணைப்பில் நடைபெற்று வரும் இந்த பள்ளிகளுக்கான நலத்திட்டப் பணிகளில் ரியாத் காயல் நல மன்றம், ஐக்கிய ராஜ்ஜிய காயல் நல மன்றம், கத்தார் காயல் நல மன்றம், தம்மாம் காயல் நல மன்றம் ஆகிய நான்கு மன்றங்களாலும் மற்றும் சகோதரர் கூஸ் SAT முஹம்மது அபூபக்கர் மற்றும் அவர்களது நண்பர்கள் இணைந்தும் இது வரை 3,41,000/- ரூபாய்க்கு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இக்ராஃ கட்டிட வரைபடம்:
>>> இக்ராஃ கல்விச் சங்கத்திற்கு சொந்த அலுவலகக் கட்டிடம் கட்டுவதற்கான வரைபடம் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் தேவைப்படும் சிற்சிறு மாற்றங்களுக்குப் பின் பணி துவக்கப்படும்.
இக்ராஃ அரசுப் பதிவு:
>>> இக்ராஃ கல்விச் சங்கத்தின் - கடந்த (2014-15) ஆண்டுக்கான கணக்குத் தணிக்கையாளர் அறிக்கை (Auditor Report ) பெற்று சமர்ப்பிக்கப்பட்டு, சங்கப் பதிவுச் சட்டத்தின் (Society Registration Act) கீழ் அரசுப் பதிவைப் புதுப்பிக்கும் பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது.
>>> தலைமையாசிரியர்களின் கலந்தாலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டபடி, நமதூரின் அனைத்துப் பள்ளிகளின் ஆசிரியர்களுக்குமான வழிகாட்டு நிகழ்ச்சி மற்றும் மாணவ- மாணவியருக்கான கவுன்சிலிங் நிகழ்ச்சியும் கூடிய விரைவில் நடத்திட ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
அத்துடன் அரசுப்பணிகளின் பக்கம் நமது மக்களை கவனம் செலுத்திடச்செய்வதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் / முழு முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளது,இன்ஷா அல்லாஹ்!
இவ்வாறாக, இக்ராஃவின் கடந்த கால செயல்பாடுகள், ஆண்டறிக்கை ஆகியன - செயலர், நிர்வாகி ஆகியோரால் சமர்ப்பிக்கப்பட்டது. சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளிலுள்ள அம்சங்கள் சில குறித்து - பங்கேற்றோரில் சிலரால் கேட்கப்பட்ட சந்தேகங்களுக்கும் கூட்டத்தில் விளக்கமளிக்கப்பட்டது.
|