இக்ராஃ கல்விச் சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தில், புதிய நிர்வாகிகளும், செயற்குழு உறுப்பினர்களும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். புதிய தலைமைப் பொறுப்பை சிங்கப்பூர் காயல் நல மன்றம் ஏற்றுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, இக்ராஃ கல்விச் சங்க செயலாளர் என்.எஸ்.இ.மஹ்மூது வெளியிட்டுள்ள அறிக்கை:-
கூட்ட நிகழ்வுகள்:
காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம், 10.07.2016. ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10.45 மணியளவில், கீழ நெய்னார் தெருவிலுள்ள கலீஃபா அப்பா தைக்கா வளாகத்தில் நடைபெற்றது.
இக்ராஃவின் மூத்த செயற்குழு உறுப்பினர்களான ஹாஜி மக்கி நூஹுத்தம்பி, பேராசிரியர் கே.எம்.எஸ்.ஸதக் தம்பி, ஹாஜி எம்.எல்.சேக்னா லெப்பை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ரியாத் காயல் நல மன்றத்தைச் சேர்ந்த எஸ்.எம்.பி.செய்யித் முஹம்மத் ஸாலிஹ் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய ரியாத் காயல் நல மன்றத்தின் முன்னாள் தலைவர் / நடப்பு ஆலோசனைக் குழு உறுப்பினரும் - இக்ராஃ கல்விச் சங்க துணைத்தலைவருமான ஹாஃபிழ் எம்.ஏ.ஷெய்கு தாவூத் இத்ரீஸ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
அறிமுகவுரை:
கூட்ட அறிமுகம் & கூட்ட நடவடிக்கை ஒழுங்குகள் குறித்து, துணைச் செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ் விளக்கிப் பேசினார்.
ஆண்டறிக்கை & அண்மைச் செயல்பாடுகள்:
இக்ராஃவின் கடந்த ஓராண்டு செயல்பாடுகளை உள்ளடக்கிய ஆண்டறிக்கையை, செயலாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீத் சமர்ப்பித்ததுடன், உரை உள்ளடக்கம் குறித்த - பங்கேற்றோர் கேள்விகளுக்கு விளக்கமும் அளித்தார்.
இக்ராஃவின் கடந்த கால & அண்மைச் செயல்பாடுகள் குறித்து, நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத் விளக்கிப் பேசியதுடன், உரை உள்ளடக்கம் குறித்த - பங்கேற்றோர் கேள்விகளுக்கு விளக்கமும் அளித்தார்.
இருவரது உரைகளின் உள்ளடக்கச் சுருக்கம் அடுத்த செய்தியில் விரிவாகத் தரப்பட்டுள்ளது.
வரவு-செலவு கணக்கறிக்கை:
2015-16 வருடத்திற்கான வரவு - செலவு கணக்கறிக்கை மற்றும் 2016-17 வருடத்திற்கான பட்ஜெட்டை இக்ராஃ பொருளாளர் கே.எம்.டி.சுலைமான் தாக்கல் செய்தார். (2015-16 வருடத்திற்கான வரவு -செலவு கணக்கறிக்கை கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் முற்கூட்டியே வழங்கப்பட்டது).
நிதிப் பற்றாக்குறைக்கு கூட்டத்திலேயே தீர்வு:
அதில் நிர்வாகச் செலவுகளுக்கு ஏற்படும் நிதிப் பற்றாக்குறை குறித்து தெரிவிக்கப்பட்டது. அத்தொகையை அந்தக் கூட்டத்திலேயே பலராலும் வாக்களிக்கப்பட்டு நிவர்த்தி செய்யப்பட்டது.
பங்கேற்றோர் கருத்துப் பரிமாற்றம்:
கூட்டத்தில் பங்கேற்றோர் கருத்துப் பரிமாற நேரம் ஒதுக்கப்பட்டது. முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் / கேள்விகள் & அவற்றுக்கு வழங்கப்பட்ட விளக்கங்கள் வருமாறு:-
>>> கருத்து:
ஆண்டுதோறும் நிதிப் பற்றாக்குறை ஏற்படும் நிலையைத் தவிர்த்திட, முற்கூட்டியே Forecast Budget அறிவிக்கலாம். (ஏ.எம்.செய்யித் அஹ்மத் - ஜித்தா காயல் நல மன்றம் சார்பாக... & மக்கீ நூஹுத்தம்பி)
விளக்கம்:
அவ்வாறு ஆண்டுதோறும் நிதிநிலையறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது. என்றாலும், இக்ராஃ வருடாந்திர செலவினங்களுக்காக நிரந்தர வருமானமாக முழுத்தொகையும் பெறப்படாததாலேயே இப்பற்றாக்குறை கணக்கில் வருகிறது. எனினும், இதுபோன்ற வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தின்போது பற்றாக்குறை குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு, விருப்பமுள்ளவர்கள் இதில் ஒத்துழைக்கலாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. அதன்படி, கூட்டத்தில் பங்கேற்போர் ஆர்வமுடன் தரும் தொகையைக் கொண்டு பற்றாக்குறை சரிசெய்யப்படுகிறது.
ஆண்டுதோறும் நிரந்தர நிதியாதாரம் தேவைக்கேற்ப முழுமையாகப் பெறப்பட்டால், இப்பற்றாக்குறை ஏற்படாது.
>>> கருத்து:
ஜகாத் நிதி மொத்தக் கூட்டல் கணக்கிலுள்ள சந்தேகங்கள் குறித்து, தம்மாம் காயல் நல மன்ற செயலாளர் எம்.எம்.செய்யித் இஸ்மாஈல் கேட்ட கேள்விக்கு கூட்டத்தில் விளக்கமளிக்கப்பட்டது.
>>> கருத்து:
இக்ராஃ தலைமைப் பொறுப்பிற்கு இதில் அங்கம் வகிக்கும் காயல் நல மன்றங்களின் தலைவரை தேர்ந்தெடுப்பதுதானே வழக்கம். தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளதே. தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவருக்கான வரையறை என்ன? (கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் எம்.எல்.ஏ. - செயற்குழு உறுப்பினர், இக்ராஃ கல்விச் சங்கம்)
விளக்கம்:
இக்ராஃவின் சுழற்சி முறை நிர்வாகத்தின் கீழ் இதுவரை பங்கேற்றுள்ள 6 காயல் நல மன்றங்களிலிருந்தும், ஒரு மன்றத்தின் தலைவர் இக்ராஃவின் தலைவராகவும், இதர மன்றங்களின் தலைவர்கள் இக்ராஃவின் துணைத்தலைவர்களாகவும் தேர்ந்தெடுக்கப்படுவது வழமை.
அதன்படி, ஆண்டுக்கு ஒருவர் வீதம் ஒரு சுற்று தலைமைப் பொறுப்பை ஏற்றுச் சேவையாற்றியுள்ளனர்.
நடப்பாண்டில், இரண்டாவது சுற்று துவங்குகிறது. சிங்கப்பூர் காயல் நல மன்றம் தலைமைப் பொறுப்பை ஏற்கிறது. அம்மன்றத்தின் நடப்பு தலைவர், ஷிஃபா அமைப்பில் தான் கவனம் செலுத்துவதாலும், சில personal commitment காரணமாகவும், தம் மன்றத்தின் துணைத்தலைவரான மகுதூம் முஹம்மது அவர்களை இக்ராஃவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கலாம் என தம் மன்றத்தின் சார்பாகத் தெரிவித்துள்ளார். அது பரிசீலிக்கப்பட்டு, தற்போது இக்கூட்டத்தில் ஏற்கப்பட்டுள்ளது.
எனினும், ஒவ்வொரு பொறுப்புக் காலத்திலும், அந்தந்த மன்றங்களின் தலைவர்களே இக்ராஃவின் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவர் என்றும், ஒருவேளை இதுபோன்ற நெருக்கடியான நேரங்களில் - தொடர்புடைய மன்றம் கேட்டுக்கொள்ளுமானால், அவர்களின் வேண்டுகோள் படி அவர்கள் குறிப்பிடும் நபர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் இக்கூட்டத்தில் விவாதித்ததன் அடிப்படையில் முடிவு செய்யப்படுகிறது.
தற்போது புதிதாக காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை ஹாங்காங் அமைப்பும் சுழற்சிமுறை நிர்வாகத்தில் இணைந்துள்ளதால், அதன் தலைவரும் துணைத்தலைவர்களுள் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
>>> கருத்து:
மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்களைப் பரிசீலித்து நடைமுறைப்படுத்துவது வரவேற்கத்தக்கது. அதன்படி, நகரின் அனைத்துப் பள்ளிகளுக்கிடையில் விளையாட்டு, சமூக அக்கறை சார்ந்த கலை நிகழ்ச்சிகள், போட்டிகளை நடத்துவதன் மூலம், அவர்களுக்குக் கல்வியின் மீதும் ஆர்வத்தை ஏற்படுத்த இயலும். மேலும் வரும் காலங்களில் நமது மாணவர்களை சட்டப் படிப்புக்கும் (Law), பத்திரிக்கைத் துறை சார்ந்த படிப்புக்கும் ஊக்குவிக்க வேண்டும். (எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் - அறங்காவலர், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட்)
விளக்கம்:
இக்கருத்து பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
கல்விக்கடன் வழங்கும் திட்டத்தை அமல்படுத்தலாமா? என்பது குறித்த கலந்தாலோசனை நடைபெற்றது.பல்வேறு எதிர்மறையான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.எனினும் இதன் சாதக, பாதகங்கள் பற்றி செயற்குழுக் கூட்டத்தில் விவாதிக்கலாம் என்று கருத்து கூறப்பட்டது.
>>> கருத்து:
கடன் அடிப்படையில் கல்வி உதவித்தொகைக்காக காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளையை அணுகலாம்... (எம்.ஏ.எஸ்.செய்யித் அபூதாஹிர், தலைவர் - ஜெய்ப்பூர் காயல் நல மன்றம் - ஜக்வா)
கடன் அடிப்படையில் கல்வி உதவித்தொகைக்காக ஜன்சேவா அமைப்பை அணுகலாம்... (எல்.டீ.செய்யித் ஸித்தீக், நிர்வாகக் குழு உறுப்பினர் - ஜன்சேவா)
விளக்கம்:
இவ்வறிவிப்புகளுக்கு நன்றி. இனி வருங்காலங்களில், தகுதியுடைய மாணவர்களை இக்ராஃ நேர்காணல் செய்து, மேற்படி உதவிகளைப் பெற்றிட வழிகாட்டும்.
>>> கருத்து:
துவக்கப்பள்ளிகளுக்கு உதவுவதைப் போல, துளிர் பள்ளிக்கும் உதவலாமே...? (எம்.எல்.ஷேக்னா லெப்பை, செயலாளர் - துளிர் அறக்கட்டளை)
விளக்கம்:
துளிர் பள்ளிக்கு என்ன பொருட்கள் தேவை என முறைப்படி தெரிவித்தால் பரிசீலிக்கப்படும்.
>>> கருத்து:
இக்ராஃவில் கல்வி உதவித்தொகையை இதுவரை பெற்றவர்களின் நடப்பு நிலை குறித்து விசாரித்து, அவர்கள் நன்னிலையிலிருப்பின், அவர்களிடமிருந்தும் கல்வி உதவித்தொகைக்கு அனுசரணை பெற முயற்சிக்கலாமே...? (டாக்டர் ஏ.முஹம்மத் இத்ரீஸ், முன்னாள் தலைவர் ,இக்ராஃ)
விளக்கம்:
அதற்கான செயல்திட்டம் ஏற்கனவே வடிவமைக்கப்பட்டு, கல்வி உதவித்தொகை பெற்ற மாணவ-மாணவியருக்கு கடிதம் கூடிய விரைவில் அனுப்பப்படவுள்ளது.
>>> கருத்து:
வழமைக்கு மாற்றமாக, கடந்த கல்வியாண்டில் ஒரு பள்ளியில் மட்டும் பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் 35 பேர் தேர்ச்சியிழந்துள்ளது குறித்து ஆராயப்பட வேண்டும். (ஏ.எம்.செய்யித் அஹ்மத், செயற்குழு உறுப்பினர் - ஜித்தா காயல் நல மன்றம்)
விளக்கம்:
அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறாக கருத்துப் பரிமாற்றங்களும், அவற்றுக்கான விளக்கங்களும் அமைந்திருந்தன.
இக்ராஃ சொந்தக் கட்டிடப் பணிக்கு ரியாத், கத்தர் கா.ந.மன்றங்களின் துவக்கப் பங்களிப்பு:
இக்ராஃவின் புதிய கட்டிடப் பணிக்காக, இதுவரை அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்த கத்தர் காயல் நல மன்றம் சார்பில், துவக்கத் தொகையாக 51 ஆயிரம் ரூபாய் தருவதாக, அதன் பொருளாளர் கே.எஸ்.டீ.முஹம்மது அஸ்லம் கூட்டத்தில் அறிவித்தார்.
முன்னதாக தலைமைப் உறுப்பில் இருந்த ரியாத் காயல் நல மன்றம் சார்பாக துவக்கத் தொகையாக ரூபாய் 50,000 ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது குறித்தும் கூட்டத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இரண்டு அமைப்புகளுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
சட்டமன்ற உறுப்பினரான செயற்குழு உறுப்பினருக்குப் பாராட்டும், வாழ்த்தும்:
இக்ராஃவின் துவக்கத்திற்குக் காரணமான சிலருள் ஒருவரும், துவக்கம் முதல் இன்றளவும் அதன் செயற்குழு உறுப்பினராகவும் இருந்து சேவையாற்றி வரும் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் அவர்கள், அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றதன் மூலம் காயல்பட்டினத்தின் முதல் சட்டமன்ற உறுப்பினர் என்ற தகுதியைப் பெற்றுள்ளார்.
இதற்காக அவரைப் பாராட்டி, இக்ராஃ பொதுக்குழு சார்பில் இக்ராஃவின் துணைத் தலைவரும், கூட்டத்தலைவருமான அல்ஹாஃபிழ் எம்.ஏ.ஷேக் தாவூது இத்ரீஸ் அவர்களால் சால்வை அணிவித்து கண்ணிப்படுத்தப்பட்டது.
அவரது தேர்வைப் பாராட்டியும், வரும் ஐந்தாண்டு கால சேவைகள் சிறக்க வாழ்த்தியும், ஜித்தா காயல் நல மன்ற பிரதிநிதி ஏ.எம்.இஸ்மாஈல் நஜீப் உள்ளிட்ட பலரும் வாழ்த்திப் பிரார்த்தித்துப் பேசினர்.
தீர்மானங்கள்:
கூட்டத்தில் பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 01 - வரவு செலவு கணக்கறிக்கைக்கு ஒப்புதல்:
இக்ராஃ பொருளாளரால் நடப்பு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2015-16ஆம் ஆண்டிற்கான ஓராண்டு வரவு-செலவு கணக்கறிக்கைக்கு இக்கூட்டம் ஒருமனதாக ஒப்புதல் அளிக்கிறது.
தீர்மானம் 02 - நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல்:
கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட, 2016-17 பருவத்திற்கான நிதிநிலை அறிக்கைக்கு இக்கூட்டம் ஒருமனதாக ஒப்புதல் அளிக்கிறது.
தீர்மானம் 03 - உறுப்பினர் சந்தாவை வசூலிக்க பொறுப்பாளர் நியமனம்:
இக்ராஃவின் உறுப்பினர் வருடாந்திர சந்தா தொகையை நிலுவையின்றி - குறித்த நேரத்தில் வசூலிப்பதற்காக, 10 சதவிகித கமிஷன் அடிப்படையில் வசூலிப்பாளர் ஒருவரை நியமிக்க இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 04 - மூன்று ஆண்டுகள் உறுப்பினர் சந்தா செலுத்தாதோர் பெயர் நீக்கம்:
இக்ராஃ கல்விச் சங்கத்தில் உறுப்பினராக இருந்து, தொடர்ந்து 3 ஆண்டுகளாக தம் சந்தாத் தொகைகளை வழங்காதோருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பவும், அதன் பிறகும் சந்தா பெறப்படவில்லையெனில், கடிதம் அனுப்பப்பட்டதிலிருந்து 6 மாதத்தில் அவரை உறுப்பினர் தகுதியிலிருந்து விடுவிக்கவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 05 - கல்வி உதவித்தொகை அனுசரணையாளர்களுக்கு நன்றி:
இக்ராஃவின் பொது கல்வி உதவித்தொகை, ஜகாத் நிதியின் கீழான கல்வி உதவித்தொகை ஆகிய திட்டங்களுக்கு தாராள நன்கொடைகளை வழங்கிய காயல் நல மன்றங்கள் உள்ளிட்ட அனைத்து அனுசரணையாளர்களுக்கும் இக்கூட்டம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 06 - கல்வி நிகழ்ச்சிகளை இணைந்து நடத்திய கா.ந.மன்றங்களுக்கு நன்றி:
காயல்பட்டினம் நகர மாணவ சமுதாயத்தின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்குடன், இக்ராஃ கல்விச் சங்கத்துடன் இணைந்து கடந்தாண்டில் பல்வேறு கல்வி நிகழ்ச்சிகளை நடத்திய உலக காயல் நல மன்றங்களுக்கு இக்கூட்டம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் 07 - புதிய உறுப்பினர்களுக்கு ஒப்புதல்:
இக்ராஃவில் உறுப்பினராவதற்கு விருப்பம் தெரிவித்த 21 பேரின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டதன் அடிப்படையில், அவர்களை உறுப்பினர்களாக இணைத்துக்கொள்ள இக்கூட்டம் ஒருமனதாக ஒப்புதல் அளிக்கிறது.
தீர்மானம் 08 - செயற்குழுவின் பொறுப்புக்காலம் குறைப்பு:
தேர்ந்தெடுக்கப்படும் - இக்ராஃ கல்விச் சங்கத்தின் செயற்குழு 3 ஆண்டுகள் பொறுப்பில் இருக்கும் என்ற விதிமுறை மாற்றியமைக்கப்பட்டு, இக்கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் புதிய செயற்குழு முதல் இனி வருங்காலங்களில் தேர்ந்தெடுக்கப்படும் புதிய செயற்குழுக்கள் அனைத்திற்கான பொறுப்புக் காலத்தை 2 ஆண்டுகளாக இக்கூட்டம் நிர்ணயித்து தீர்மானிக்கிறது.
தீர்மானம் 09 - செயற்குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு:
நடப்பு கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் புதிய செயற்குழு முதல் இனி வருங்காலங்களில், இக்ராஃ கல்விச் சங்கத்திற்கு 5 துணைத்தலைவர்கள் என்பதை மாற்றி, 6 துணைத் தலைவர்களை வைத்துக் கொள்வதற்கும், 25 செயற்குழு உறுப்பினர்கள் என்பதை மாற்றி, 26 செயற்குழு உறுப்பினர்களை வைத்துக் கொள்வதற்கும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 10 - புதிய நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு:
இக்ராஃவின் புதிய நிர்வாகிகள் & செயற்குழு உறுப்பினர்கள் பின்வருமாறு இக்கூட்டத்தில் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்:-
தலைவர்:
எம்.எம்.மொகுதூம் முஹம்மத்
துணைத்தலைவர்கள்:
(1) எஸ்.ஏ.அஹ்மத் ரஃபீக்
(2) வாவு எம்.எம்.ஷம்சுத்தீன்
(3) குளம் எம்.ஏ.அஹ்மத் முஹ்யித்தீன்
(4) ஏ.எச்.முஹம்மத் நூஹ்
(5) எம்.என்.முஹம்மத் யூனுஸ்
(6) ஹாஃபிழ் ஏ.எல்.முஹம்மத் இர்ஷாத் அலீ
செயலாளர்:
என்.எஸ்.இ.மஹ்மூது
துணைச் செயலாளர்கள்:
(1) ஏ.எம்.எம்.இஸ்மாஈல் நஜீப்
(2) எம்.எம்.ஷாஹுல் ஹமீத்
பொருளாளர்:
கே.எம்.டீ.சுலைமான்
செயற்குழு உறுப்பினர்கள்:
(01) டீ.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர்
(02) எஸ்.எச்.ஷெய்க் அப்துல் காதிர்
(03) வாவு எஸ்.அப்துல் கஃப்பார்
(04) பேராசிரியர் கே.எம்.எஸ்.சதக்கு தம்பி
(05) ஏ.ஆர்.முஹம்மத் இக்பால்
(06) டாக்டர் ஏ.முஹம்மத் இத்ரீஸ்
(07) ஏ.கே.கலீல்
(08) எம்.ஏ.எஸ்.ஜரூக்
(09) எம்.ஐ.மெஹர் அலீ
(10) மாஸ்டர் எம்.ஏ.புகாரீ
(11) வாவு எம்.எம்.உவைஸ்
(12) ஏ.எஸ்.அஷ்ரஃப்
(13) மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.ஹபீபுர்ரஹ்மான் ஆலிம்
(14) எஸ்.அப்துல் வாஹித்
(15) எல்.டீ.செய்யித் ஸித்தீக்
(16) எம்.இ.கைலானீ
(17) எஸ்.எம்.அஹ்மத் சுலைமான்
(18) ஹாஃபிழ் என்.டீ.ஸதக்கத்துல்லாஹ்
(19) எஸ்.எம்.எம்.டீ.ஷாஹுல் ஹமீத்
(20) கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் எம்.எல்.ஏ.
(21) கே.ஜெ.ஷாஹுல் ஹமீத்
(22) எஸ்.கே.ஸாலிஹ்
(23) எம்.ஏ.செய்யித் முஹம்மத்
(24) ஹாஃபிழ் எம்.எம்.முஹம்மத் முஜாஹித் அலீ
(25) கே.எம்.இ.முஹம்மத் தம்பி குளம்
(26) எம்.ஏ.கே.ஜைனுல் ஆப்தீன்
தீர்மானம் 11 - முன்னாள் தலைமைக்கும் / நிர்வாகத்தினருக்கும் நன்றி:
இக்ராஃ கல்விச் சங்கத்தின் - கடந்த 2015-16 பருவத்திற்கான தலைமைப் பொறுப்பை ஏற்று, திறம்பட செயலாற்றிய கத்தர் காயல் நல மன்றத்தின் முன்னாள் தலைவர் / நடப்பு ஆலோசகர் எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம் அவர்களுக்கும், இக்ராஃவை வழிநடத்துவதில் அவருக்கு முழு ஒத்துழைப்பளித்த கத்தர் காயல் நல மன்ற நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் இக்கூட்டம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறது.
அத்துடன் கடந்த காலங்களில் சிறப்பாக பங்களிப்பு செய்த இக்ராஃ செயலர் கே.ஜே.ஷாஹுல் ஹமீது அவர்களுக்கும்,இதர நிர்வாகிகள் , அங்கத்தினர்களுக்கும் இக்கூட்டம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறது.
தீர்மானம் 12 - புதிய சட்டமன்ற உறுப்பினருக்கு பாராட்டு:
இக்ராஃ கல்விச் சங்கம் துவக்கப்படுவதற்கு முதன்மைக் காரணமாக இருந்தோருள் ஒருவரும், இக்ராஃவின் செயற்குழு உறுப்பினருமான - அல்ஹாஜ் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் அவர்கள், அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில், கடையநல்லூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதன் மூலம், காயல்பட்டினத்தின் முதலாவது சட்டமன்ற உறுப்பினர் எனும் தகுதியைப் பெற்றுள்ளமைக்காக அவரை இக்கூட்டம் உளமாரப் பாராட்டுவதுடன், அவரது 5 ஆண்டுகள் பொறுப்புக் காலத்தில் மக்கள் சேவையை அவர் நிறைவாகச் செய்து, அனைத்து சமய மக்களின் நன்மதிப்பையும் நிறைவாகப் பெற்றுய்ய இக்கூட்டம் வாழ்த்திப் பிரார்த்திக்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
செயற்குழு உறுப்பினர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் நன்றி கூற, தாய்லாந்து காயல் நல மன்ற நிர்வாகிகளுள் ஒருவரான மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ. அபுல் ஹஸன் ஷாதுலீ ஆலிம் ஃபாஸீ துஆவைத் தொடர்ந்து, ஸலவாத் - கஃப்பாராவுடன் கூட்டம் இறையருளால் மதியம் 01:30 மணியளவில் இனிதே நிறைவுற்றது.
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்துலில்லாஹ்!
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
A.தர்வேஷ் முஹம்மது
நிர்வாகி,
இக்ராஃ கல்விச் சங்கம்,
காயல்பட்டினம்.
இக்ராஃ கல்விச் சங்கத்தின் முந்தைய (2015ஆம் ஆண்டு) வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
இக்ராஃ கல்விச் சங்கம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |