காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளியின் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ளது மத்ரஸா கட்டிடம். நாட்பட்ட இக்கட்டிடம் மிகவும் பழுதுற்றுள்ள நிலையில், எப்போதும் - குறிப்பாக மழைக்காலங்களில் விபத்தை ஏற்படுத்தும் நிலையில் காட்சியளித்தது.
இதனையடுத்து, அக்கட்டிடத்தை இடித்தகற்றி, புதிய கட்டிடம் கட்டுவதற்கு நிர்வாகத்தால் தீர்மானிக்கப்பட்டு, ஜமாஅத்தார் அனைவரின் பங்களிப்புத் தொகையையும் இதில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்ற நோக்கில், ஆண்டுதோறும் பெருநாட்களின்போது மஹல்லா ஜமாஅத்தாருக்கு அறிவிப்பு செய்யப்பட்டு, இவ்வகைக்காக நன்கொடைகளும் சேகரிக்கப்பட்டு வந்தது.
தேவைப்படும் முழுத்தொகையைச் சேகரிப்பதற்கான நாட்கள் நீண்டுகொண்டு செல்லவே, பள்ளி நிர்வாகம் புதிய செயல்திட்டத்தை வகுத்தது. அதன்படி, 07.07.2016. அன்று நோன்புப் பெருநாள் தொழுகையில் பங்கேற்க வரும் அனைவருக்கும் விருப்பப் படிவம் கொடுத்து, அதில் இவ்வகைக்காக அவர்கள் விரும்பும் தொகைக்கு ஒப்புதல் அளிக்கக் கேட்டுக்கொள்ளப்பட்டதுடன், நிதியைச் சேகரிப்பதற்கென பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர். இதன் மூலம் அனைவரின் பங்களிப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 02.06.2016. அன்று நடைபெற்ற - பள்ளியின் கலந்தாலோசனைக் கூட்டத்தில், அடுத்து வரும் நோன்புப் பெருநாளன்று தொழுகை நிறைவுற்றதும் பள்ளி தலைவரைக் கொண்டு கட்டிடப் பணியை முறைப்படி துவக்கிவைக்கவும், ஷவ்வால் 6 நாட்கள் நோன்பு நிறைவுற்றதும், பணியைத் துரிதப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, 07.07.2016. நோன்புப் பெருநாளன்று தொழுகை நிறைவுற்றதும், கட்டிடப் பணியை முறைப்படி துவக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ‘முத்துச்சுடர்’ மாத இதழின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் என்.டீ.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் நுஸ்கீ மஹ்ழரீ துஆ பிரார்த்தனை செய்தார்.
பள்ளியின் தலைவரும், மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் தலைவருமான நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ ஆலிம், பழைய கட்டிடத்தை இடித்தகற்றும் பணியைத் துவக்கி வைக்க, அவரைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகிகளும் - ஜமாஅத்தாரும் அதைத் தொடர்ந்தனர்.
இந்நிகழ்ச்சிகளில், நோன்புப் பெருநாள் தொழுகையில் பங்கேற்ற மஹல்லா ஜமாஅத்தினர் திரளாகக் கலந்துகொண்டனர்.
குருவித்துறைப் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|