காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை சார்பில், நிகழாண்டில் 30 மாணவர்களுக்கு ரூ. 3 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கிட, அதன் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளையின் நிர்வாகக் குழுக் கூட்டம், 08.07.2016. வெள்ளிக்கிழமையன்று 19.30 மணிக்கு, அறங்காவலர் பாளையம் எம்.ஏ.ஹபீப் முஹம்மத் தலைமையில், அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.
பிரபு எம்.டீ.ஹபீப் முஹம்மத், எம்.எஸ்.எல்.சுஹ்ரவருதி, வி.ஐ.செய்யித் முஹம்மத் புகாரீ, எஸ்.ஏ.ஜவாஹிர், கே.எம்.ஸலீம், எஸ்.ஏ.சி.முஹம்மத் ஷாஃபீ, எம்.எல்.ஷேக்னா லெப்பை, எம்.ஏ.எஸ்.செய்யித் அபூதாஹிர், எஸ்.எம்.அஹ்மத் சுலைமான் ஆகியோரும், காது - மூக்கு - தொண்டை மருத்துவ நிபுணர் டாக்டர் பீ.எம்.செய்யித் அஹ்மத் சிறப்பழைப்பாளராகவும் கலந்துகொண்டனர்.
பைத்துல்மால் அறக்கட்டளையின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும், திட்டப் பணிகள் செயல்படுத்தப்படும் முறைகள் குறித்தும் நீண்ட கருத்துப் பரிமாற்றங்கள் செய்யப்பட்டு, பின்வருமாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:-
(1) சென்ற ஆண்டுகளைப் போல, இவ்வாண்டும் 30 மாணவர்களுக்கு ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் வீதம் கல்வி உதவித்தொகை வழங்குவதற்கென மொத்தம் 3 லட்சம் ரூபாய் நிதியொதுக்கீடு செய்ய தீர்மானிக்கப்பட்டது.
(2) பைத்துல்மால் அறக்கட்டளையின் நிதியாதாரத்தைப் பெருக்குவதற்காக, ஊர் தனவந்தர்கள், உலகெங்கும் பரவி வாழும் காயலர்களிடம் கோரிக்கைகளை முன்வைக்க தீர்மானிக்கப்பட்டது.
துஆ, ஸலவாத்துடன் கூட்டம் நிறைவுற்றது. ஏற்பாடுகளை, அலுவலகப் பொறுப்பாளர்களான எம்.ஏ.சிந்தா மதார் முஹ்யித்தீன், கே.எம்.சுல்தான் ஜரூக் ஆகியோர் செய்திருந்தனர்.
காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|