உலக காயல் நல மன்றங்களுடன் இணைந்து, காயல்பட்டினம் ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் அமைப்பு நடத்திய - தமிழக அரசின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பதிவு முகாமில், 350க்கும் மேற்பட்டோர் பயன்பெற்றுள்ளனர். இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஷிஃபா டிரஸ்ட் ஏற்பாட்டில் உலக காயல் நல மன்றங்கள் இணைந்து 17.7.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 3.30 மணிவரை நமதூர் சென்ட்ரல் மேனிலைப் பள்ளி வளாகத்தில் வைத்து காப்பீட்டுத்திட்ட பதிவு முகாம் மிகச் சிறப்பாக நடைபெற்றது அல்ஹம்து லில்லாஹ்.
இம்மருத்துவ காப்பீட்டு பதிவு முகாமில் சுமார் 350 க்கும் அதிகமான பயனாளிகள் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆர்வமுடன் கலந்து பயன் அடைந்தனர். மருத்துவ காப்பீடு எடுப்பதற்கான முதல் முக்கியமான பகுதி நிறைவு பெற்றுள்ளது.
இம்முகாமை நமது ஷிஃபா டிரஸ்டின் தலைவர் டாக்டர்.முஹம்மது இத்ரீஸ் அவர்கள் தலைமை ஏற்க, ஷிஃபாவின் செயலர். மெளலவி. ஹபீப் ரஹ்மான் ஆலிம், ஷிஃபாவின் பொருளாளர். அஹ்மது சுலைமான் மற்றும் ஷிஃபாவின் நிர்வாக அதிகாரி கண்டி.சிராஜுத்தீன் ஆகியோர்களின் முன்னிலையில் இப்பதிவு முகாம் தொடங்கப்பட்டது.
மிக முக்கியமாக இம்முகாமின் வெற்றிக்கு மிகவும் உறுதுணையாகயிருந்து இது தொடர்பான எல்லா பணிகளிலும் முன்னிலையில் நின்று செயலாற்றிய சகோதரர். சாளை. நவாஸ் ( சிங்கபூர் செயற்குழு உறுப்பினர்) அவர்களின் பணியை அனைவரும் பாராட்டினர்.
இம்முகாமில் உலக காயல் நல மன்றங்களை சார்ந்த பல சகோதரர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மிகவும் ஆர்வமாக செயல்பட்டு இம்முகாமை வெற்றியடைய செய்த அனைத்து சகோதரர்களும் பாராட்டிற்குரியவர்கள்.
இம்முகாமில் காயல் பட்டணம் கிராம நிர்வாக அதிகாரி சகோதரர். ஃபிரான்சிஸ் பாரதி அவர்களும் அவரது உதவியாளர் நான்கு நபர்களும் பரிபூரண ஒத்துழைப்பு தந்தது மிக்க பாரட்டுக்குரியது.
இன்ஷா அல்லாஹ் இதன் தொடர்ச்சியாக அடுத்த முகாம் 27.7.2016 புதன் கிழமையன்று காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை அப்பா பள்ளி தெருவில் உள்ள ரெட் ஸ்டார் சங்க வளாகத்தில் வைத்து நடைபெற உள்ளது.
இதனைத் தொடர்ந்து குடும்பத்தலைவரின் புகைப்படம் இணைத்தல், ஸ்மார்ட் கார்டு வழங்குதல் ஆகிய மிக முக்கியமான நிகழ்வுகள் அடுத்தடுத்த வாரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.
மாவட்ட கலெக்டர், மற்றும் தாசில்தார் போன்ற அரசு உயர் அதிகாரிகள் இந்த சமூக அக்கறையுள்ள தொண்டினைப் பாராட்டியதுடன் அதற்கான எல்லா உதவிகளையும் வரும் காலங்களில் மனமுவந்து செய்வதற்கு முன்வந்துள்ளார்கள். அரசு அதிகாரிகள் அனைவர்களுக்கும் நமதூர் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் அமைப்பு தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |