ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளில் பணிபுரியும் மருத்துவ இதழ் ஆசிரியர்களின் (Medical Journal Editors) வருடாந்திர கருத்தரங்கை (Annual Conference) ‘ஆசிய பசிபிக் மருத்துவ இதழ் ஆசிரியர்கள் கழகம் (Asia Pacific Association of Medical Journal Editors, சுருக்கமாக APAME)’ ஆண்டுதோறும் நடத்துவது வழமை.
அவ்வகையில், இவ்வாண்டிற்கான கருத்தரங்கு (APAME 2016 Conference) தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் 27-28 ஆகஸ்ட் 2016 தேதிகளில் நடைபெறுகிறது. இந்நிகழ்வை தாய்லாந்து மருத்துவக் கழகம் (Medical Association of Thailand) மற்றும் தாய்லாந்து மருத்துவ இதழ் ஆசிரியர்கள் சமூகம் (Thai Society of Medical Journal Editors) ஆகியன இணைந்து நடத்துகின்றன.
இரண்டு நாட்கள் நடைபெறும் இக்கருத்தரங்கில், மருத்துவம் சார்ந்த ஆராய்ச்சிகள் தொடர்பான அறிவியல் தகவல்களை வெளியிடும் சஞ்சிகைகள் / இதழ்களின் தரம், அவற்றின் முன்னேற்றத்திற்காக இணைந்து செயல்படல், ஆராய்ச்சி கட்டுரைகளின் பொது அணுகல் போன்றவை ஆய்வுப்பொருட்களாக விவாதிக்கப்படவுள்ளன. (Conference Theme: Quality, Collaboration and Public Access).
இதன் ஒரு பயிற்சிப் பட்டறையில் (training workshop), காயல்பட்டினம் அப்பா பள்ளித் தெருவைச் சேர்ந்த அப்துர் ரஸ்ஸாக் என்பவரது மகன் - மருந்தியல் துறை ஆய்வாளரும், மருத்துவ எழுத்தாளரும், இயற்கை ஆர்வலரும், காயல்பட்டணம்.காம் இணையதளத்தின் ‘எழுத்து மேடை’ ஆசிரியர்களுள் ஒருவருமான அ.ர.ஹபீப் இப்றாஹீம் (தொடர்பு எண்: +91 99020 01223, +91 94436 99920), ‘ஆராய்ச்சி கட்டுரைகளை மருத்துவ இதழ்களில் திறம்பட எழுதுதல் மற்றும் செம்மையாக முன்னிடுதல் (Effective Publication Writing and Research Presentation)’ என்னும் தலைப்பில், சிறப்பு பேச்சாளராக (Guest Speaker) உரையாற்ற அழைக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன், இவர் ஏழு சர்வதேச கருத்தரங்குகளில் பங்கேற்று உரையாற்றியுள்ளார். சுவிட்ஸர்லாந்து, இரான், துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், எத்தியோப்பியா ஆகிய நாடுகளில் நடைப்பெற்ற வெவ்வேறு சர்வதேச கருத்தரங்குகளில், தனது ஆய்வறிக்கைகளைப் பகிர்வதற்கு உலக சுகாதார அமைப்பு (World Health Organization), கனடாவை சார்ந்த சர்வதேச மேம்பாட்டு ஆய்வு மையம் (International Development Research Centre), சுவிட்ஸர்லாந்தைச் சார்ந்த ஜெனீவா சுகாதார மன்றம் (Geneva Health Forum) போன்ற பல சர்வதேச பொது நல அமைப்புகளின் அங்கீகாரத்தையும், உதவித் தொகைகளையும் (research scholarships) பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
மருந்தியல் படிப்பில் இளங்கலை பட்டமும் (Bachelor of Pharmacy), பின் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மருந்தியல் ஒழுங்குமுறை துறையில் முதுகலை பட்டமும் (MSc in Clinical Research and Regulatory Affairs) பெற்ற இவர், மருத்துவ ஆராய்ச்சியாளராக (Clinical Researcher) தனது தொழில் வாழ்க்கையை துவக்கி, பின்னர் மருத்துவ இதழியல் மற்றும் எழுத்து துறையில் தான் கொண்ட ஈடுபாட்டினால், பத்து வருடங்களுக்கும் மேலாக மருத்துவ எழுத்தாளர் / இதழ் ஆசிரியராக (Medical Writer / Editor) பணிபுரிந்து வருகிறார்.
மருத்துவ இதழியல் துறையில் உயர்வாக கருதப்படும் சர்வதேச சான்றிதழ்களான ELS (Editor in the Life Sciences), CMPP (Certified Medical Publication Professional) ஆகியவற்றையும் இவர் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. |